
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் ஒரு பெரிய பேசு பொருளானது.
அவரது தியான முறை மூலம் தரையிலிருந்து எழும்பி மேலே சென்றதாகப் பலரும் கூறினர். ஆனால் இதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் பாரத தேசத்தின் சித்தர்களுக்கோ இது ஒரு எளிய கை வந்த கலையாகும்.
இதை நேரில் பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பேச்சாளரும், பாரிஸ்டரும் நீதிபதியுமான லூயிஸ் ஜாகொல்லியட் (LOUIS JACOLLIOT) என்பவர் அந்தச் சம்பவத்தைத் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
சாரொல்லஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நகரில் 1837ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஜாகொல்லியட் பிறந்தார். பிரெஞ்சு காலனிகளில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றினார்.
வேதம், உபநிடதம் ஆகிய எல்லாவற்றையும் படித்த அவருக்கு யோகா மீதும் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. சமஸ்கிருதத்தைப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவின் மீது பெரும் மதிப்பைக் கொண்ட அவருக்கு இந்தியா வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 1865 முதல் 1869 முடிய அவர் இந்தியாவில் இருந்தார்.
1866ம் ஆண்டு இந்தியாவில் அவருக்கு ஒரு நூதன அனுபவம் ஏற்பட்டது.
கோவிந்தசாமி என்ற ஒரு சித்தரை அவர் சந்தித்தார். இருவரும் யோகா சம்பந்தமாக பேசுவது வழக்கமானது.
ஒரு நாள் கோவிந்தசாமி ஜாகொல்லியட் உட்கார்ந்திருந்த வாரந்தாவிற்கு வந்தார். அப்போது வாயில் கதவுக்கு அருகே வந்து நின்றார் அவர்.
கைகளை மடித்து வைத்துக் கொண்ட அவர் ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் மெதுவாக அவர் மேலே எழும்பினார். ஒரு அடி தூரம் அவர் மேலே எழும்பியதை ஜாகொல்லியட்டால் சரியாக அளக்க முடிந்தது.
கோவிந்தசாமிக்குப் பின்னால் பட்டு ரிப்பன்கள் சிவப்பு, தங்க நிறம், வெள்ளை நிறத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் ரிப்பன்களில் ஆறாவது ரிப்பன் அளவு உயர்ந்தார். ஆகவே சரியாக ஒரு அடி என்பதை ஜாகொல்லியட்டால் நிர்ணயிக்க முடிந்தது.
கோவிந்தசாமி மேலே எழும்ப ஆரம்பித்தவுடன் சரியாக தனது கடிகாரத்தில் மணியைப் பார்த்தார் ஜாகொல்லியட். அந்தரத்தில் பத்து நிமிடம் நின்று கொண்டிருந்தார் கோவிந்தசாமி. ஐந்து நிமிடங்கள் அவர் அசைவற்று சிலை போல இருந்தார்.
பிறகு கீழே மெதுவாக இறங்கினார் அவர்.
இதை அகல்ட் ஸயின்ஸ் இன் இந்தியா (OCCULT SCIENCE IN INDIA) என்ற தனது நூலில் எழுதியுள்ளார் ஜாகொல்லியட். இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. உலகில் ஏராளமானோர் விரும்பிப் படிக்கும் நூல்களாக விற்பனையில் சக்கை போடு போட்டன.
ரஷியாவில் இவரது நூல்கள் பிரபலமாயின. இவரது நூல்கள் 18 தொகுதிகளாக ரஷியாவில் 1910ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டன. ஆனால் கம்யூனிஸ அரசு ரஷியாவில் அமைந்ததிலிருந்து இவை தடை செய்யப்பட்டன. 1928 முதல் 1989 முடிய இவரது நூல்கள் அங்கு கிடைக்கவில்லை.
சமஸ்கிருத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட ஜாகொல்லியட் கிருஷ்ணாவுக்கும் ஏசுவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார்.
‘கிறிஸ்ணா’ என்பது கிறிஸ்து என்பதாக மாறியது. ‘கிறிஸ்னா’ என்பது கிருஷ்ணர் என்ற வார்த்தையை ஒட்டிப் பிறந்த சொல் தான் என்றார் இவர். பைபிளுக்கும் இந்திய புராண இதிஹாஸங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இவர் விவரித்தார்.
மனு ஸ்மிருதியை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள். பல முக்கியமான குறள்களை இவர் மொழிபெயத்து வெளியிட்டார்.
1890ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாளன்று அவர் பிரான்ஸில் உள்ள செயின்ட் திபால்ட் – டெஸ்- விக்னஸ் என்ற இடத்தில் மறைந்தார்.
இந்திய யோகிகளைப் பற்றி அதிகார பூர்வமாக ஆவணப்படுத்திய மேலை நாட்டோரில் குறிப்பிடத் தகுந்தவர் ஜாகொல்லியட்!