
ஒருவர் தம் பாதங்களில் அணியும் காலணிகளை சரியான முறையில் பயன்படுத்தினால் அவருக்கு செல்வம் பெருகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், சனி தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
எப்போதும் ஒரு இடத்தில் செருப்பை கழட்டி விடும்போது ஜோடியாகவே கழட்டி விட வேண்டும். அவ்வாறு விடக்கூடிய பழக்கம் உங்களிடம் இருந்தால், உங்களின் மனமும், உடலும் தெளிவான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக, வீட்டின் தலைவாசலை தெய்வத்திற்கு இணையாக வணங்குவோம். அத்தகைய தலைவாசலில் செருப்பை போட்டுக்கொண்டு நிற்பது அல்லது அதை தாண்டி வீட்டில் செருப்பை பயன்படுத்துவது உங்களுக்கோ உங்கள் வீட்டுக்கோ துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், வீட்டில் செருப்பை அணிந்துக்கொண்டு கல் உப்பு, பருப்பு, அரிசி ஆகியவற்றை தொடக் கூடாது. ஏனெனில், இவை அனைத்தும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. சமையலறையில் செருப்பை போட்டுக்கொண்டு செல்லக் கூடாது. அதுபோல, சமைக்கும்போது செருப்பை போட்டுக்கொண்டு சமைக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. செருப்பை போட்டுக்கொண்டு உணவு உண்ணக் கூடாது.
நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். அவரது தாக்கம் இருக்கும் இடமாக பாதம் சொல்லப்படுகிறது. அந்த பாதத்தில் நாம் அணியக்கூடிய செருப்பும் சனி பகவானின் தாக்கம் பெற்றதாக இருக்கிறது. நீங்கள் அணியும் செருப்பு பிய்ந்து மோசமான நிலையில் இருக்கும்போதும் அதை மாற்றாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றால், பணம் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் நஷ்டம் உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
செருப்பை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் சனி பகவானின் அருளும் ஆசியும் கிடைக்கும், உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஒருசிலர் தங்கள் தொழில் நலிவடையும்போது செருப்பை வாங்கி கோயிலில் விட்டுச் சென்று விடுவார்கள். அதை மற்றவர்கள் எடுத்துச் செல்லும்போது அது தானமாக கருதப்படுகிறது. இப்படிச் செய்யும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கோயிலில் கழட்டிவிட்டு விட்டுச் சென்ற செருப்பு திருடு போய்விட்டால், சனி பகவானால் ஏற்படவிருக்கும் அனைத்துப் பிரச்னையும் சரியாகும் என்ற நம்பிக்கை உண்டு. அதோடு, உங்களுடைய கெட்ட கர்மா, பாவங்கள் போனதாகவும் அர்த்தம். உங்கள் செருப்பு தொலைந்துபோனால், அதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படப் போவதாக பொருள்.
செருப்பு அணியும் நிறத்தைப் பொறுத்து அதற்கு பலன்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. வெள்ளை நிறத்தில் செருப்பை அணிவது அதிர்ஷ்டத்தை தரும். கருப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் செருப்பு அணிந்தால், நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை அது இழுத்துக்கொள்ளும். சிவப்பு நிறம், மஞ்சள் நிற காலணிகள் முன்னேற்றம், காரிய ஸித்தி, வெற்றியை ஏற்படுத்தும். பச்சை மற்றும் பிரவுன் நிறக் காலணிகள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை தரும் என்று சொல்லப்படுகிறது.