
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு உகந்த நாட்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகநாடுகளிலும் முருகனை வழிபடும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர்.
பங்குனி உத்திரம் என்பது முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினமாகும். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. அந்தவகையில் தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் நாள் பங்குனி உத்திரமாகும். பைகுனி உத்தரம் என்றும் அழைக்கப்படும் பங்குனி உத்திரம், நம்பிக்கை, பக்தி மற்றும் கொண்டாட்டத்தை ஒன்றிணைக்கும் ஆன்மீக ரீதியாக வளமான பண்டிகையாகும்.
பங்குனி உத்திரம் முருகனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அது இந்திரனின் மகள் தெய்வானையை (வட இந்தியாவில் தேவசேனா) மணந்த நாளைக் குறிக்கிறது, மேலும் இது மகிழ்ச்சி மற்றும் மங்களகரமான நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சூரபத்மனை தோற்கடித்த பிறகு, தீமையை வென்றதற்காக முருகன் கொண்டாடப்பட்டார். மேலும் இந்திரன் தனது மகள் தெய்வானையை பங்குனி உத்திரத்தின் புனித நாளில் முருகனுக்கு மணம் புரிவித்தார். முருகன் மற்றும் தெய்வானையின் திருமண விழா முருகனின் ஆறு படை வீடுகளில் (புனிதத் தலங்கள்) ஒன்றான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
இந்த நாளில் பக்தர்கள் முருகன் கோவில்களில் பிரார்த்தனை செய்யவும், விழாக்களில் பங்கேற்கவும் அதிகளவில் கூடுகிறார்கள். அந்தவகையில் முருக பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
பங்குனி உத்திர நாளன்று தூய மனதுடன் விரதம் அனுஷ்டித்து முருகப்பெருமானுக்கு பால்குடம் எடுத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். அத்துடன் திருமணம் தடைப்படுபவர்கள் பங்குனி உத்திரத்திற்கு 48, 21 அல்லது 11 நாட்களுக்கு முன்னதாகவே காப்பு கட்டி, விரதம் இருந்து முழுமனதுடன் பயபக்தியுடன் ஆறுமுருகனை வழிபடும்போது பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முருகனின் ஆறுபடை வீடு மட்டுமல்லாமல் பல பிரிசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்து புராணங்களின்படி, இந்த புனித நாளில், சிவன் மற்றும் பார்வதி , ராமர் மற்றும் சீதை, முருகன் (கார்த்திகேயா) மற்றும் தேவசேனா, மற்றும் ரங்கநாத (விஷ்ணு) மற்றும் ஆண்டாள் ஆகியோரின் தெய்வீக சங்கமங்கள் நிகழ்ந்தன. அதாவது பல தெய்வங்களின் தெய்வீக திருமணங்களைக் கொண்டாடுவதற்கு இந்த நாள் மிகவும் பிரபலமானது.
தமிழ் கலாச்சாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையான பங்குனி உத்திரம், நாளை வெள்ளிக்கிழமை (11-ம்தேதி) கொண்டாடப்படும். பங்குனி உத்திர நட்சத்திரம் இன்று மதியம் 12:24 மணிக்கு தொடங்கி, நாளை (11-ம்தேதி) பிற்பகல் 03:10 மணியுடன் முடிவடைகிறது.
பங்குனி உத்திரம் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கும் ஒரு நல்ல நாள். உங்கள் திருமணம் நல்ல நேரத்தில் நடைபெறவில்லை என்றால் அல்லது உங்கள் ஜாதகத்தில் குஜ தோஷம் அல்லது கால சர்ப்ப தோஷம் போன்ற ஏதேனும் தோஷங்கள் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். இவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் தோஷங்களின் வீரியம் குறையும்.
முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் பங்குனி உத்திர நாளுக்கு முன்தினமே வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிலைக்கு சிவப்பு நிற அரளி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பங்குனி உத்திரநாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராடி தூய்மையான ஆடை அணிந்து விரதத்தை தொடங்க வேண்டும். பின்னர் பூஜையறையில் உள்ள முருகப்பெருமானுக்கு தூபங்கள், விளக்கேற்றி வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும். பழங்கள், இனிப்புப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பின்னர் முருகனுக்கு உகந்த பாடல்கள், மந்திரங்கள் அல்லது 'ஓம் சரவணபவாய நம' போன்ற மந்திரங்களை உச்சரிக்கலாம். கந்த சஷ்டி கவசத்தை ஓதலாம். சுப்ரமணிய அஷ்டோத்திரத்தை (108 மந்திரங்கள்) பக்தியுடனும், நம்பிக்கையுடன் உச்சரிக்கலாம். அத்துடன் புராணங்கள் மற்றும் முருகனைப் பற்றிய பிற வேதங்களிலிருந்து உத்வேகம் தரும் கதைகளைப் படிக்கலாம்.
மாலையில் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர் இறைவனுக்கு படைத்த பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்கலாம்.