
பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி திதி சேர்ந்து வரும் ஒரு சிறப்புமிக்க நாளாகும். தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும், மணவாழ்க்கை வேண்டி விரதம் இருக்கும் நாளாகவும் பார்க்கப்படுகிறது.
பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்:
* பங்குனி உத்திரத்தன்று பல கோவில்களில் தீர்த்த யாத்திரை மற்றும் கும்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி உத்திரத் திருநாளில் பல தெய்வங்கள் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுவதால் இந்நாள் மிகவும் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.
* ஈசனும் அம்மையுமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்ற நாள் இது. முருகன் தெய்வானையை திருமணம் செய்த நாளாகவும், வள்ளியின் அவதார நாளாகவும் கூறப்படுகிறது.
* இந்நாளில் விரதம் இருந்து சிவபெருமானை கல்யாணசுந்தரமூர்த்தியாக வழிபடுவது வழக்கம்.
* காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த தினமும் இந்நாளே. இன்று தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
* மகாலட்சுமி ஜெயந்தியாக கொண்டாடப்படும் லட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றிய நாளாக கூறப்படுகிறது. அத்துடன் மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்து தான் மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
* இந்நாளில் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் உள்ள ஏழு புனித குளங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் லட்சக்கணக்கான தேவர்கள் நீராடுவதாக குறிப்பிடப்படுகிறது. எனவே கோவில் குளத்தில் நீராடுவது நம்மை மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுவிப்பதாக நம்பப்படுகிறது.
* ஈசனின் தவத்தை கலைத்ததால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாள் இது.
* பங்குனி உத்திர நாளில் தான தர்மம் போன்ற புண்ணிய காரியங்களில் ஈடுபட நம் பாவங்கள் நீங்கி நற்பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* இந்நாள் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்நாளில் இறைவனை வழிபடுவதும், விரதம் இருப்பதும், அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று இறைவனின் திருமணங்களை கண்டு தரிசிப்பதும் சிறப்பாக சொல்லப்படுகிறது.
பங்குனி உத்திர திருவிழா:
இது கோடை வசந்த விழாவின் நுழைவு விழா என்றே கொள்ளலாம். பங்குனி மாதம் பிறந்து விட்டாலே கோடையும் வசந்தமும் வந்துவிட்டது என்று தான் பொருள். கோடை காலத்தின் ஆரம்பமே பங்குனி மாதம் தான்.
அதனை வரவேற்கும் விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஏன் கொண்டாடப்படுகிறது?
தெய்வத் திருமணங்கள்:
பங்குனி உத்திரம் சிவன்-பார்வதி, ராமர்-சீதை, முருகன்-தேவசேனா மற்றும் ரங்கநாதர் ஆண்டாள் ஆகியோரின் திருமணங்களை நினைவுபடுத்துகிறது. பங்குனி உத்திரம் ஐயப்பனின் வெளிப்பாடாகவும் உள்ளது.
பிரம்மோற்சவம்:
பங்குனி உத்திர நாளில் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக முருகன் கோவில்களிலும், சிவன் கோயில்களிலும் திருக்கல்யாணம், அபிஷேகம், ஆராதனை என 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக மிக சிறப்பாக நடைபெறும்.
திருமணத்தடை நீங்கவும் மணவாழ்க்கை சிறப்பாக அமையவும்:
நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவன் பார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்கின்றனர். இந்நாளில் விரதம் இருந்து வழிபட குடும்ப பிரச்சினைகள் தீர்வதுடன், திருமணமும் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது.
விரத பலன்:
பங்குனி உத்திர திருநாளில் அனுஷ்டிக்கப்படும் விரதம் 'கல்யாண விரதம்' என்று அழைக்கப்படுகிறது.
பங்குனி உத்திர விரதம் மேற்கொள்வதால் அரசு வேலை, பதவி உயர்வு போன்ற நன்மைகளும் கிடைக்கும். திருமண தடை நீங்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.