
விரல்களில் மோதிரம் அணிவது என்பது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு போன்றவற்றில் மோதிரம் அணிகின்றனர். ராசிக்கல் மோதிரம் அணிபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் மோதிரம் அணிவதில் உள்ள ரகசியம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
மோதிரங்களை விரலில் அணிவதில் ஒரு நட்சத்திர சூட்சுமம் மறைந்து உள்ளது. 27 நட்சத்திரங்களில் நமது கை மற்றும் கால்களில் இருக்கும் விரல்களை குறிக்கும் நட்சத்திரம் திருவோணம் ஆகும்.
ஏனெனில், திருவோணம் என்பது முழக்கோல் என்ற அளவை ஆகும். ஒரு முழம் என்பது இரண்டு சாண் அளவு ஆகும். இந்த சாண் என்பது பெருவிரல் நுனிக்கும் சுட்டுவிரல் நுனிக்கும் இடைப்பட்ட நீட்சியாகும். ஆகவே, முழக்கோல் என்ற அளவீட்டுக் கருவி விரல்களால்தான் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புலனாகிறது.
மந்திர ஜபம் செய்யும்போது அதன் 108 என்ற எண்ணிக்கையை நாம் விரல் கோடுகளின் துணை கொண்டுதான் எண்ணிக்கை செய்கிறோம். அதனால் விரல்களைக் குறிக்கும் நட்சத்திரம் திருவோணம் ஆகும்.
திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதை மஹாவிஷ்ணு ஆவார். நாம் விரல்களில் அணியும் மோதிரத்தைக் குறிப்பது ஆயில்யம் நட்சத்திரமாகும். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை ஆதிசேஷன் ஆவார்.
திருமால் எங்கே இருப்பாரோ அந்த இடத்தில்தான் ஆதிசேஷனும் இருப்பார். ஏனெனில், ஆதிசேஷன் என்ற நாகம்தான் திருமாலின் படுக்கை அல்லது ஆசனமாக செயல்படுகிறது. ஆதிசேஷன்தான் இந்த உலகை சுமந்தபடி காலச் சக்கரத்தில் வலம் வருகிறார். எனவே, பூமிக்கும் அதில் வாழும் மக்களுக்கும் ஆதிசேஷனின் அருளும் மஹாவிஷ்ணுவின் அருளும் மிகவும் முதன்மையாக விளங்குகிறது.
அதனால்தான் நாம் விரல் என்ற திருவோணத்தில் ஆயில்யம் என்ற நாகத்தை அணியும்போது பிரபஞ்சத்தின் இயக்கத்தோடு நம் விதியும் இயங்க ஆரம்பிக்கிறது. ஆலய விசேஷங்கள், பிதுர் தர்ப்பணங்கள் செய்யும்போது அந்தணர்கள் தங்கள் கைவிரலில் நாகம் போல் தர்பை புல்லை அணிந்துகொள்வதிலும் இந்த சூட்சுமம் ஒளிந்துள்ளது.
தங்க மோதிரம் செழிப்பு மற்றும் வளர்ச்சியின் அடையாளமாகவும், வெள்ளி மோதிரம் மன அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மையுடையதாகவும், செம்பு மோதிரம் மங்கலகரமானதாகவும் கருதப்படுகிறது.
இனிமேல், விரல்களில் மோதிரத்தை அணியும்போது அதனுடைய சூட்சுமத்தை நினைத்துக்கொண்டே அணியுங்கள்.