மூன்று வடிவ நிலையில் ஒருசேர போகலிங்கமாக அருள்பாலிக்கும் சொர்ணபுரீஸ்வரர்!

Koogaiyur Swarnapureeswarar
Koogaiyur Swarnapureeswarar
Published on

சேலம் - விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயில் ஈசனை வழிபடும் ஆகாய தலமாகப் போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.

கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால், ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபடப்பட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

கி.பி. 7ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோயிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின்படி கி.பி.1184ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோயிலாக மாற்றிக் கட்டினான். இந்தத் தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாய லிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதால் உண்டாகும் பலன்கள் தெரியுமா?
Koogaiyur Swarnapureeswarar

சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பிறகு, சுக பிரம்ம மகரிஷியின் ஆலோசனைப்படி வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், வசிஷ்ட நதிக்கரையோரம் 5 இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூதத் தலங்கள் என்று போற்றப்படுகிறது. இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்.

ஒரு சமயம் இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர்களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவ குரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திர சபை பொலிவிழந்தது.

இதையும் படியுங்கள்:
சனி பகவானால் எந்தக் கெடுதலும் ஏற்படாமல் தடுக்க சில ஆன்மிக யோசனைகள்!
Koogaiyur Swarnapureeswarar

தனது தவறை உணர்ந்த இந்திரன், வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால், அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கௌரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தமது குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.

அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவ குருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com