
இந்தியாவில் பதினெட்டு லட்சம் ஹிந்து கோவில்கள் உள்ளன.
இவற்றில் 33,000 கோவில்கள் மிக மிக விசேஷமானவை. 108 சக்தி பீடங்கள், 12 ஜோதிர்லிங்கங்கள், 108 வைணவ திவ்ய ஸ்தலங்கள், 276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் என மகிமை வாய்ந்த தலங்களையும் அங்குள்ள கோவில்களின் பெருமையையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது.
நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் தனது சர்வே படி இவை இந்த தேசத்தின் ஜிடிபி-யில் 2.32 சதவிகிதமாக இருக்கிறது என்று கூறுகிறது.
ஹிந்துக்கள் 4.74 லட்சம் கோடி ரூபாயை ஒவ்வொரு வருடமும் மதம் சார்ந்த யாத்திரைகளுக்குச் செலவழிக்கின்றனர். இந்த யாத்திரைகள் எட்டு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் நல்குகின்றன.
இதில் அமர்நாத்திலும் வைஷ்ணவி தேவி ஆலயத்திலும் கிடைக்கின்ற பணத்தால் பயன் பெறுவோரில் 90 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள்.
சோம்நாத் ஆலயத்தில் கிடைக்கும் வருமானத்தில் 60 சதவிகிதம் முஸ்லீம்களுக்குச் செல்கிறது.
ஒரு சிறிய கோவில் கூட சுமார் 25 பேருக்கு வேலை தருகிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீல் சேர் உதவியை அளிப்போர் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். சந்தனம் விற்போர் மட்டும் ஒரு நாளைக்கு வெவ்வேறு ஆலயங்களிலிருந்து ரூ 300 முதல் ரூ 500 வரை சம்பாதிக்கின்றனர்.
இது ஒரு மேலோட்டமான கண்ணோட்டம். ஆழ்ந்து ஆராய்ந்தால் எத்தனை கோடி பேர் நமது ஆலயத்தினால் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கையைத்தரும்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் கோவில்களால் ஆன்மீக உயரத்தில் ஏறுவோர் எத்தனை லட்சம் பேர்!
தங்களது பிரச்சினைகளுக்கு பிரார்த்தனையால் விடிவைக் காண்போர் எத்தனை லட்சம் பேர்!
இதையெல்லாம் கணக்கிட்டுச் சொல்லவே முடியாது.
அளப்பரிய கோவில்களின் ஆற்றலுக்கு கும்பாபிஷேகம் இன்றியமையாதது.
கும்பமானது சிவலிங்கத்தைப் போலவே தத்துவம், புவனம்,வர்ணம், பதம், மந்திரம்,கலை என்ற ஆறு அத்துவாக்களின் (அத்துவா என்றால் வழி என்று பொருள்) வடிவமாக உள்ள ஆற்றலுக்கெல்லாம் உறைவிடம். கும்பமானது கங்கை உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களும் நிறைந்தது. எல்லாத் தெய்வங்களும் நிறைந்தது.
கும்பத்தின் உச்சி சாந்தியதீத கலை. முகம் சாந்தி கலை. மார்பு வித்யா கலை. உந்தி பிரதிஷ்டா கலை. முழந்தாள் நிவிர்த்தி கலை.
புவனம் ரோமம், வர்ணம் தோல், மந்திரம் ரத்தம், பதம் நரம்பு, தத்துவம் எலும்பும் தசையும் – என இவ்வாறு கும்பம் அத்துவா வடிவாக இருக்கிறது.
கும்பத்தில் இருக்கின்ற செம்மண், கூர்ச்சம், அதைச் சுற்றிய நூல், கும்ப ரத்தினம், சுவர்ண புஷ்பம் எல்லாம் சப்த தாதுக்கள்.
நியாச மந்திரங்கள் அதற்கு உயிர்.
கும்பத்தின் அடியிலே ஆத்ம தத்துவங்களும், நடுவில் வித்யா தத்துவங்களும், உச்சியில் சிவதத்துவங்களும் பூஜிக்கப்படும்.
கும்ப ரத்னங்கள் மனோன்மணி உள்ளிட்ட நவ சக்திகள் ஆகும்.
லம்ப கூர்ச்சம் இச்சா, ஞானக் கிரியைகளாகும்.
கும்பத்தின் மேல் சுற்றப்பட்ட முப்புரிநூல் சரஸ்வதி, லட்சுமி, ரௌத்திரி என்னும் சக்திகளாகும்.
இவ்வாறு கும்பமே சக்தி மயமாக இருக்கிறது.
இந்தக் கும்பத்தில் ஆவாகனம் செய்து, மந்திர தியான வடிவில் நீர் முழுவதும் பரவியதாக பாவித்து அதை பிம்பத்திலும் கும்பத்திலும் அபிஷேகம் செய்து அந்த மூர்த்திகரம் பிம்ப கும்பங்களில் என்றும் விளங்கச் செய்வதே கும்பாபிஷேகம் ஆகும்.
இப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டவுடன் அங்குள்ள விக்ரஹம் ஜீவ சக்தியைப் பெறுகிறது.
கோவில் முழுவதும் தனிப்பெரும் ஆற்றலைப் பெறுகிறது.
அங்கு உள்ளே நுழைந்தவுடன் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நல்ல ஆற்றல் பக்தர்களின் உடலிலும் உள்ளத்திலும் பாய்கிறது.
இன்னும் உள்ளார்ந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் தீர்கின்றன. ஆன்ம முன்னேற்றம் சித்திக்கிறது.
இப்படி பதினெட்டு லட்சம் கோவில்களில் இருந்து வெளிப்படும் ஆற்றலும் அதை உள்வாங்கிக் கொண்ட மக்களும் வாழும் தேசம் தெய்வ தேசம் என்பதில் என்ன சந்தேகம்?
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீர் அதன் புதல்வர்
இந்நினவகற்றாதீர் – மகாகவி பாரதியார்
(குறிப்பு: கும்பாபிஷேக தத்துவம் பற்றிய கூடுதல் விவரங்களை திருவாவடுதுறை ஆதீன (1961ம் வருட) வெளியீடான கும்பாபிஷேக தத்துவம் என்ற நூலில் காணலாம்.)