‘ராகு காலம் தெரியும். அது என்ன இஷ்டி காலம்?’ என்று நினைக்கத் தோன்றுகிறதா? ‘இஷ்டி’ என்பது பௌர்ணமி அல்லது அமாவாசை திதியின் இறுதி பகுதியும் அடுத்து வரக்கூடிய பிரதமை திதியின் முதல் மூன்று பகுதியும் இணைந்ததுதான் இஷ்டி காலம். அதாவது இன்று அமாவாசை அல்லது பௌர்ணமி திதியாக இருப்பின் நாளை இஷ்டி காலமாக இருக்கும். நேற்று அமாவாசையாக இருந்ததால் இன்று இஷ்டி காலமாகும்.
இந்த இஷ்டி காலத்தில் நாம் கடவுளுக்கு பூஜை செய்யும்போது பூஜைக்குரிய தெய்வம் அல்லது தேவர்கள் உங்கள் அருகில் வந்து சூட்சுமமான ரூபத்தில் நின்று எழுந்தருளி உங்களின் வழிபாட்டையும் வணக்கத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஆன்மிக ஐதீகமாக உள்ளது.
இஷ்டி காலம் தேவர்கள் நேரில் வந்து ஆசி வழங்கக்கூடிய மிக உன்னத மிக்க நாள் என்பதால் இந்த நாளில் நம் வீட்டு விசேஷம் அல்லது தொழிலுக்கான ஹோமங்கள் செய்தல், உலக நம்மைக்கான ஹோமங்கள், யாகங்கள் செய்வதற்கான அற்புதமான நாளாகும்.
இந்த நாளில் நாம் ஹோமம், யாகம் போன்றவற்றை செய்தால் அதன் சக்தி பல மடங்கு புண்ணியத்தையும் பலனையும் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும். அதேபோல், இந்த நாளில் நாம் செய்யக்கூடிய தான தர்மங்கள் சாதாரண நாட்களில் செய்வதைக் காட்டிலும் பல மடங்குப் பலனை தரக்கூடியதாக இருக்கும்.
மேலும், இந்த நாளில் செய்யப்படும் ஹோமங்கள் சக்தி வாய்ந்தவையாக அமையும். இஷ்டி என்றாலே பூஜை, யாகம் என்றுதான் அர்த்தம். ‘ஓம் இஷ்டி பதய நமோ நமோ’ என்று குமாரஸ்தவத்தில் முருகப்பெருமானை பற்றி குறிப்பிடும்போது சொல்லப்பட்டுள்ளது.
பூஜைகளை, யாகங்களை விரும்பி ஏற்பவன் முருகப்பெருமான் என்று இதற்குப் பொருள். இஷ்டி காலத்தில் பூஜைகள், ஹோமங்கள் செய்வது சகல தேவர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் என்பதால் இன்றைய நாளில் உங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி வளம் பெறலாமே.