ஜானகி கொடுத்த சூடாமணியும் அனுமன் கொண்ட மமதையும்!

Janaki Kodutha soodamaniyum Anumanin Mamathaiyum
Janaki Kodutha soodamaniyum Anumanin Mamathaiyum
Published on

சீதா பிராட்டியைத் தேடும் பொருட்டு அனுமன் மட்டுமே இலங்கைக்குச் சென்றிருந்தார். ஏனென்றால், அவர் ஒருவரால் மட்டுமே சமுத்திரத்தைத் தாண்ட முடியும். ஏனைய வானர வீரர்கள் மகேந்திரகிரியில் தங்கி விட்டனர். இலங்கை அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன், ஸ்ரீராமரின் கணையாழியை அடையாளமாகக் காட்டி, சில  விஷயங்கள் ­ஸ்ரீராமருடன் சீதா பகிர்ந்து கொண்டதை, எடுத்துக் கூறினார். சீதா மாதாவும் பதிலுக்கு தனது சூடாமணியை அனுமனிடம் கொடுத்து ஸ்ரீராமருடன் தான் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை அனுமனிடம் கூறி, அதை ஸ்ரீராமனிடம் எடுத்துச் சொல்லுமாறு கூறினாள்.

சீதா தேவி கொடுத்த சூடாமணியை எடுத்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன்  திரும்பிக் கொண்டிருந்தார் அனுமன். மைனாகப் பர்வதத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சற்று நேரம் அங்கு இளைப்பாறி விட்டு மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார் அனுமன். அனுமனை கண்டதும் வானர வீரர்கள் சந்தோஷத்தோடு அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அனுமன் தம் அங்கிருந்து புறப்பட்டது முதல் அதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை வானர வீரர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கேட்க கேட்க, அனுமனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

ஏனென்றால், அவர் அல்லவோ இலங்கைக்குச் சென்று ஜானகியை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். இன்னும் அவர் ராமபிரானை சந்திக்கவே இல்லை. அதற்குள் அந்த இடமே பெரும் ஆர்ப்பாட்டத்துடன் விளங்கியது. மனதுக்கு உற்சாகமாக இருக்கும் என்று மந்தாரப் பர்வதத்தில் சிறிது நேரம் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு இயற்கை உபாதையை கழிக்கும்படியான அவசரம் உண்டானது. அன்னையிடமிருந்து தான் பெற்று வந்த சூடாமணியை இடுப்பிலேயே முடிந்து வைத்திருந்தார். அதை சற்று நேரம் எங்காவது புனிதமான இடத்தில் வைத்துவிட்டு, பின்னர் சுத்தி செய்து கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். எங்கு வைப்பது என்று புரியாமல் தவித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார்.

இதையும் படியுங்கள்:
வெந்தயம் எவ்வளவு எடுத்துக்கொண்டால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தலாம்?
Janaki Kodutha soodamaniyum Anumanin Mamathaiyum

அங்கு ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவரிடம் கொடுத்து விட்டுப் போய் காரியங்களை முடித்துக் கொண்டு திரும்பி வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். முனிவரின் அருகில் சென்று, "சுவாமி" என்றார்.

"என்னப்பா வேண்டும்?"

"சுவாமி, இந்தப் பொருள் மிகவும் பரிசுத்தமானதாகும். நான் பக்கத்தில் உள்ள ஓடைப் பக்கம் சென்று நீராடி விட்டு திரும்பும் வரை இதை, புனிதமான ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். தங்களைக்  கண்டேன். இந்த சூடாமணியை தங்களிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதே உத்தமம் என்று நினைக்கிறேன். நான் திரும்பும் வரை இந்தப் பொருள் தங்களிடமே இருக்கட்டும்" என்றார்.

"அப்பனே, உனது கையாலேயே நான் வைத்திருக்கும் இந்தக் கமண்டலத்தில் அதைப் போட்டு விடு. உனது காரியங்களை முடித்துக்கொண்டு வா" என்றார் முனிவர்.

அனுமன் சூடாமணியை முனிவருடைய கமண்டலத்து நீரிலே போட்டுவிட்டு ஓடைக்குச் சென்றார். தனது காரியங்களை முடித்துக்கொண்டு ஓடையில் நீராடி பரிசுத்த தேகத்தோடு முனிவரிடம் வந்தார்.

"சுவாமி, அடியேன் திரும்பி விட்டேன். சூடாமணியை எடுத்துக் கொடுங்கள்" என்றார்.

"ஏனப்பா, சூடாமணியை நீதானே கமண்டலத்தில் போட்டாய். நீயே எடுத்துக்கொள்" என்றார். அனுமன் கமண்டலத்தினுள் கையை விட்டு சூடாமணியை எடுக்க முயன்றபோது, நான்கைந்து சூடாமணிகள் கையில் கிடைத்தன. எல்லா சூடாமணிகளும் ஒன்று போலவே இருந்தன. இதில் ஜானகி கொடுத்த சூடாமணி எது என்பது அனுமனுக்குப் புரியவில்லை. ஸ்ரீராமரிடம் எந்த சூடாமணியைக் கொண்டு காட்டுவது என்று புரியாமல் குழம்பிப் போனார். உண்மையான பொருளை விட்டு விட்டு மாற்றுப்பொருளை எடுத்துக்கொண்டு போய் ஸ்ரீராமனிடம் எப்படிக் கொடுப்பது என்கிற ஒருவித பயம் அவரைப் பற்றிக் கொண்டது.

"சுவாமி, இதில் எது நான் போட்ட சூடாமணி கூறுங்களேன்" என்றார் அனுமன்.

"ஏனப்பா, அதை நான் கையால் கூடத் தொடவில்லை. போட்டதும் நீ. எடுத்ததும் நீ. என்னைக் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்?" என்றார் முனிவர்.

அனுமனுக்கு விதிர்விதிர்த்துப் போனது.

"ஐயனே, இலங்கையில் நான் ஜானகி மாதாவைக் கண்டேன். அவர் ராமபிரானிடம்  சூடாமணியை அடையாளமாகக் கொடுக்கச் சொன்னார். அதற்காகத்தான் நான்  எடுத்துப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றார் அனுமன்.

இதையும் படியுங்கள்:
வறட்டு இருமலின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!
Janaki Kodutha soodamaniyum Anumanin Mamathaiyum

"என்ன… இலங்கைக்குச் சென்று ஜானகியைக் கண்டு வந்தாயா? உன்னைப்போல சில குரங்குகள் ஒவ்வொன்றும் இலங்கைக்குச் சென்று ஜானகியைக் கண்டு வந்ததாகக் கூறி சூடாமணியை கமண்டலத்தில் போட்டு விட்டுச் சென்றார்களே" என்றார் முனிவர்.

அனுமன் கண்களை மூடி ராமபிரானை துதித்துக்கொண்டார்.  வானர வீரர்கள் திரும்பத் திரும்பக் கேட்டபொழுது, தான் ஜானகியை பார்த்து வந்த சம்பவத்தை பெருமையுடன் விவரித்ததை நினைத்துக் கொண்டார். தான் அல்லவோ ஜானகியை கண்டு வந்தோம். வேறு யாரும் செய்ய முடியாத ஒரு செயலை செய்து விட்டோம் என்ற நினைப்பில் தான் இருந்ததை அனுமன் புரிந்து கொண்டார். மானசீகமாக  ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்டார். 'எனக்கு இப்படி ஒரு சிந்தனை வந்திருக்கவே கூடாது. பிரபோ அல்லும் பகலும் உங்களையே துதித்துக் கொண்டிருக்கும் எனக்கு இப்படி ஒரு அபச்சாரமான எண்ணம் தோன்றியிருக்கக் கூடாது. எனது குற்றத்தை மன்னியுங்கள். என்னை இனி மேலும் தண்டிக்காதீர்கள். ஸ்ரீராமா அருள்புரியுங்கள்' என்று வேண்டிக்கொண்டார்.

அடுத்த கணம், சீதா மாதா கொடுத்த சூடாமணியைத் தவிர மற்ற சூடாமணிகள் மறைந்துபோயின. அங்கிருந்த முனிவரும் மறைந்து போனார். ராமபிரானிடம் மானசீகமாக நன்றியைத் தெரிவித்து விட்டு, அவர் இருக்கும் திக்கிற்கு ஒரு நமஸ்காரம் செய்து கொண்டு, அவரைக் காண மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார் அனுமன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com