தினமும் வெந்தயத்தை ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்வதால், சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வெந்தயத்தில் ‘கேலக்டோமான்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கார்போஹைட்ரேட் இருக்கிறது. செபோனின்ஸ், 4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் ஆகியவைதான் வெந்தயத்தின் முக்கியமான மருத்துவ குணத்திற்குக் காரணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை வெந்தயம் குறைப்பதாக சொல்லப்படுகிறது. வெந்தயத்தில் இருக்கும் 4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை குறைக்கும் தன்மையைக் கொண்டது என்று ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இது சர்க்கரை அளவை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாதாரணமாக, முதல் நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு Med formin என்ற மருந்து கொடுக்கப்படும். அதை போன்ற தன்மை இந்த வெந்தயத்தில் உள்ள 4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசினில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. எனவே, Med formin மாத்திரைக்கு நிகரான வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு எவ்வளவு வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், 20 முதல் 25 கிராம் வெந்தயத்தை எடுத்துக்கொண்டால்தான் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கிடைக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, தினமும் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு விட்டு சர்க்கரை அளவு குறையும் என்று எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
மேலும், வெந்தயத்தில் உள்ள கேலக்டோமான் பசியை கட்டுப்படுத்தக்கூடிய தன்மையை கொண்டது. எனவே, இதனால் அதிகமாக சாப்பாடு எடுத்துக்கொள்வது குறைந்து உடல் எடை குறைவதால் இரத்த சர்க்கரை அளவும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே med formin வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவுக்கொண்ட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வெந்தயம் பயன் தராது. ஆரம்பக்கட்ட இன்சுலின் எதிர்ப்பு தன்மையுடன் இருப்பவர்களுக்கு இது சற்று சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
கிளைக்கோஜன் மீண்டும் தசைகளில் உருவாகக்கூடிய வேகத்தை வெந்தயம் அதிகரிக்கிறது. எனவே, விளையாட்டு வீரர்கள் 10 முதல் 15 கிராம் வெந்தயத்தை விளையாடுவதற்கு முன்பு எடுத்துக்கொண்டால், நன்றாக விளையாட முடியும் என்று சொல்லப்படுகிறது. மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதை வெந்தயம் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மாதவிடாய் நின்றுப்போன பெண்களுக்கு உள்ள ஹார்மோன் கோளாறுகளான உடல் உஷ்ணம், வியர்வை அதிகரிப்பது போன்ற பிரச்னைகளை தினமும் வெந்தயம் 15 கிராம் எடுத்துக் கொள்வதால் சரிசெய்ய முடியும். ஆண்களுடைய ஹார்மோனான testosterone அளவை அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது.
தினமும் 10 முதல் 15 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்வதால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கிறது. எனவே, வெந்தயம் சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கு மட்டுமில்லாமல், மற்ற உடல் சம்பந்தமான பிரச்னைகளையும் சரிசெய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.