
காஞ்சி மடத்திற்கு குதிரை வண்டிக்காரன் ஒருவன் வந்து ஒரு வேட்டி கேட்டான். மகாபெரியவர் உடனே ஒரு புது வேட்டியை அவனுக்குக் கொடுக்கச் சொன்னார். அடுத்து அவன், ‘என் சம்சாரத்திற்கு ஒரு புடைவை கொடுங்கள்’ என்றான். ஆனால், மடத்தில் புடைவை எதுவும் இல்லை. அதனால் வண்டிக்காரன் ஏமாற்றமடைந்தான். தொலைவிலிருந்து இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. அவள் புதுப் புடைவை கட்டியிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த பையில் ஒரு பழைய புடைவை இருந்தது.
அந்தப் பெண் விறு விறுவென்று மறைவில் சென்று பழைய புடைவையை அணிந்து கொண்டு அந்த வண்டிக்காரனிடம் புது புடைவையைக் கொடுத்தாள். அவனும் மன நிறைவோடு அதை வாங்கிச் சென்றான். இந்த விஷயம் இவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பிறகு அந்தப் பெண்மணி மகாபெரியவரை தரிசிக்கச் சென்றாள். பலர் வரிசையில் நின்றிருந்தனர். இதில் ஒரு கல்யாணக் குழுவினரும் இருந்தனர். அவர்கள் மகாபெரியவருக்கு நன்கொடை தர விரும்பினர்.
மகாபெரியவர் சிரித்துக்கொண்டே, ‘உங்கள் உறவினர்களுக்கெல்லாம் புது சேலை வாங்கியிருப்பீர்கள். அதில் ஒன்றை மடத்திற்கு நன்கொடையாக தரலாமே’ என்றார். அவர்களுக்கு அளவற்ற திருப்தி. ஒரு சேலையை தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். மகாபெரியவர் தொலைவில் நின்றிருந்த அந்தப் பெண்மணியைக் கூப்பிடச் சொன்னார்.
திகைப்போடு வந்த அவளிடம் மகாபெரியவர், ‘என்னம்மா, நான் சொன்னேன் என்றவுடன் வண்டிக்காரனுக்கு உனது சேலையைக் கொடுத்து விட்டாயே. கர்ணனின் வாரிசு போல் தோன்றுகிறாய். நல்லது… இந்தா இந்த புது சேலையைக் கட்டிக் கொள்’ என ஆசீர்வதித்து புது சேலையை அவளிடம் கொடுத்தார்.
சேலையைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண்மணிக்கு, தான் சேலை கொடுத்த விஷயம் மகாபெரியவருக்கு எப்படித் தெரிந்தது என்று புரியவேயில்லை. அவர் விழிகளில் நீர் நிறைந்தது.
இதனால்தான் கொடுப்பதை ஆடம்பரமாக விழா நடத்தி விளம்பரம் செய்வது புண்ணியத்தை விட பாபத்தைத்தான் தரும். ஆயிரம் புடைவைகளை ஆடம்பர நோக்கோடு கொடுப்பதை விட, இந்தப் பெண்மணி கொடுத்த தானம் மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பெண்மணியின் தானத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.