
உலக அன்னையான பார்வதி தேவிக்கு, தானே தாயாக இருந்து ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அது குறித்து சிவனிடம் வேண்ட, அவரும் அதற்கு அனுமதி தந்துவிட்டு வெளியில் சென்று விட்டார். ஒரு பொம்மையை செய்து அதற்கு உயிர் அளித்தார் பார்வதி தேவி. அந்த உயிருக்கு ‘கணேஷ்’ என்று பெயரிட்டு மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தபொழுது சிவன் வந்து அந்தக் குழந்தையை பார்த்து மகிழ்ந்தார். அதோடு, அனைத்து தேவர்களையும் அழைத்தார்.
அப்பொழுது அவர்களுடன் சனீ பகவானும் இருந்தார். சனீஸ்வரன் அந்தக் குழந்தையின் மீது பார்வையை செலுத்தியபோது குழந்தையின் தலை தனியே கீழே விழுந்து விட்டது. அதனையறிந்து அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வருந்தினர். பார்வதி தேவி அதனைக் கண்டு ஓலமிடத் தொடங்கினாள். சிவன் தனது கணங்களை அனுப்பி இறந்த ஒருவரது தலையை கொண்டு வருமாறு கூறினார். இயலாத நிலையில் வடக்கில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு உயிரினத்தின் தலையை கொண்டு வரும்படி கூறினார்.
சிவ கணங்கள் வடக்கே தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு யானையின் தலையை துண்டித்துக் கொண்டு வந்தனர். யானையின் தலையை குழந்தையின் தலை இருந்த இடத்தில் பொருத்தியபோது அந்த பொருத்தமற்ற உடலைக் கண்டு பார்வதி தேவி கவலை அடைந்தார். அப்பொழுது சிவன் அவரை கணங்களின் தலைவராக நியமித்துக் கொண்டார். இதனால் கணங்களின் தலைவன் ‘கணபதி’ என்று பெயர் பெற்றவர் ஆனார். பார்வதி தேவி கணேசரை உருவாக்கி உயிரளித்த நாள் சதுர்த்தி என்று ஒரு கதை கூறுகிறது.
மற்றொரு கதையில் கணங்கள் எனப்படும் உதவியாளர்கள் அனைவரும் சிவனுடன் வெளியில் சென்று விட்டனர். பார்வதி தேவி கயிலையில் தனிமையில் இருந்தார். அப்பொழுது குளிக்கச் சென்ற பார்வதி தேவி, காவலுக்காக தனது ஆற்றலால் ஒருவரை உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றார்.
சிவன் திரும்ப வந்தபோது புதிய காவலன் சிவனை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான். இதனால் கோபமுற்ற சிவன் ஆயுதத்தால் அவனைத் தாக்கினார். அப்பொழுது அவன் தலை துண்டாகி விழுந்தது. சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே இதனால் வாக்குவாதம் நடைபெற்றது. கடைசியில் சிவன் மாற்று ஏற்பாடாக முதலில் தென்படும் ஒரு மிருகத்தின் தலையை கொண்டு வருமாறு கணங்களை வெளியில் அனுப்பினார். அந்த கணங்கள் எதிர்பட்ட ஓர் யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்து அந்தக் காவலன் உடலில் பொருத்தினர். கணங்கள் பொருத்தியதால் அவர் கணபதி ஆனார். பார்வதி தேவி இவரை உண்டாக்கிய நாள் ஆவணி வளர்பிறை சதுர்த்தி. அதுவே விநாயகர் சதுர்த்தி நாள் என்றும் கூறப்படுகிறது.
விநாயகப் பெருமான் முழு முதல் கடவுளாவார். அவருக்கு உகந்ததாக ஒவ்வொரு மாதத்திலும் சங்கடஹர சதுர்த்தி வருகிறது. சங்கடம் என்றால் தொல்லைகள் என்று அர்த்தம். ஹரம் என்றால் போக்குதல் எனப் பொருள். சதுர்த்தி நான்காம் பிறை நாள் வளர்பிறை. எனவே, தொல்லைகள் போக்குகின்ற வளர்பிறை நான்காம் நாள் விநாயகர் விரதத்திற்கு ஏற்றதாகக் கூறப்படுவது உண்டு.
விநாயகர் இரு வகைகளில் தரிசனம் தருகிறார். வளர்பிறை சதுர்த்தியில் பகல் பொழுது சூரியன் பிரதானமாகிறார். இது விநாயகருக்கு உகந்ததாகும். தேய்பிறை சதுர்த்தி இரவு பொழுதில் சந்திரன் பிரதானமாகிறான். இது சந்திரனுக்கு சாபம் நீங்கிய நாளாகும். விநாயகருக்கு பகலில் வளர்பிறை சதுர்த்தி சிறப்பானது. ஆண்டுக்கு இருமுறை மகா சங்கடஹர சதுர்த்தி வருகிறது. ஆவணி மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்திகளாகும். இவையே மகா சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
நாரதர் சொற்படி விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை பூசித்து கண்ண பரமாத்மா ஸ்யமந்தக மணியைத் தேடச் சென்றார். அந்த மணியும் கிடைத்தது. கண்ணன் மேல் சுமத்தப்பட்ட அபவாதம் நீங்கியதோடு, ஜாம்பவானின் நட்பும் கிடைத்தது. சத்ராஜித்தின் கோபம் நீங்கி தனது பெண் பாமாவை கண்ணனுக்கு கன்னியாதானம் செய்து கொடுத்தார். மேலும், ஸ்யமந்தக மணியையும் கண்ணனுக்கே அளித்து விடுகிறார்.
விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை பூசித்த கண்ணபிரானுக்கு விநாயகர் சகல சௌபாக்கியங்களையும் அளித்தார். 'கலௌ சண்டீ புநாயகௌ' என்று ஸ்ம்ருதி சொல்கிறது. கலியுகத்தில் எது அழிந்து போனாலும் கணபதியும் காளியும் நிரந்தரமாக வழிபடப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும். நாமும் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டு வேண்டியதைப் பெற்று நலமுடன் வாழ்வோம்!