
கண்ணனின் பால்ய நண்பர் குசேலர். அவருக்கு 27 குழந்தைகள். அக்காலத்தில் அந்தணர்கள் வேதம் கற்பது, யாகம், பூஜை செய்வதில் கிடைக்கும் வருமானத்தில் எளிமையாக காலம் கழிப்பர். இதனால் வறுமை அவர்களை வாட்டும். அதற்காக அவர்கள் கலங்கவில்லை. குசேலரும் பல பிள்ளைகள் இருக்கிறார்களே என வருத்தப்படவில்லை. ஆனால், அவரது மனைவி சுசீலைக்கு குழந்தைகள் பட்டினி கிடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், கண்ணனிடம் போய் பணம் வாங்கி வரச்சொல்லி ஒரு பொட்டலம் அவலுடன் குசேலரை அனுப்பி வைத்தாள்.
எப்போதோ சிறு வயதில் ஒன்றாக விளையாடினார்கள். காலம் கடக்க ஒருவன் மன்னனாகிறான். இன்னொருவன் அதே ஏழையாக இருக்கிறான். ஏழை குசேலனின் மனைவி கிருஷ்ணனிடம் உதவி கேட்கச் சொல்கிறாள். பணக்கார நண்பனிடம் எதை சொல்லி உதவி கேட்பது என்று குசேலருக்கு கூச்சமாக இருந்தது. தனது குடும்பத்துக்காக துண்டில் அவலை கட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ‘கிருஷ்ணனோ, மன்னன். இந்த சாதாரண அவலை எல்லாம் அவன் ஏற்பானா?’ என்று குசேலன் யோசிக்கக் கூட இல்லை.
மதுரா அரண்மனைக்கு வந்த குசேலர், கிருஷ்ணனை சந்திக்கிறார். அதே பழைய கிருஷ்ணனாக மகிழ்ச்சியாக குசேலரை வரவேற்று உபசரிக்கிறான் கிருஷ்ணன். அந்த அழுக்கு துணியில் கட்டியிருந்த அவலை உரிமையுடன் எடுத்துப் பிரித்து சாப்பிடுகிறான் மன்னன் கிருஷ்ணன். குசேலருக்கு மன்னன் கிருஷ்ணனின் நட்பு பிரம்மிப்பாக இருந்தது. கண்ணனால் நன்கு உபசரிக்கப்பட்டார். கிருஷ்ணன் அவலை கட்டாயப்படுத்தி வாங்கி சாப்பிட்டார். ஏன் தெரியுமா?
பால்ய வயதில் சாந்தீபனி முனிவரிடம் இவர்கள் ஒன்றாகப் பாடம் கற்றபோது, முனிவரின் மனைவி, இவர்களை விறகு சேகரித்து வர அனுப்பினாள். போகும்போது வெல்லம் கலந்த அவல் கொடுத்து பிரித்து சாப்பிடும்படி சொல்லி அனுப்பினாள். போகும்போது வழியில் சிறுவன் குசேலன், கண்ணனின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டு விட்டான். பிறர் பொருளைத் திருடுவது பாவம். இதனால், இப்போது திருடியதை கடவுள் கட்டாயமாக திரும்பி எடுத்துக் கொள்கிறார்.
அவர் ஒரு பிடி அவலை தின்றபோது, அவந்தியிலுள்ள குசேலரின் வீடு செழித்தது. இன்னும் ஒரு பிடி அவலை வாயில் போட்டால், கண்ணனின் செல்வம் முழுவதுமே அங்கே போய் விடும் என்பதால், ருக்மணி அதனைத் தடுத்தாள் என்று சொல்வார்கள். ஆனால், அப்படியல்ல. பரந்தாமனையே கணவனாகப் பெற்ற அவள், அழியும் செல்வத்திற்கா ஆசைப்படுவாள்? தனது கணவன் மீது குசேலர் செலுத்தும் அபரிமிதமான பக்தி, அவனுக்குக் கிடைக்கப்போகும் செல்வத்தால் அழிந்துவிடக் கூடாதே என்றெண்ணி தடுத்தாள்.
அதேவேளையில், ‘கேவலம் பொருள் உதவி கேட்டு இந்த நட்பை சொச்சைப்படுத்த வேண்டுமா? என்ன கேட்டாலும் கிருஷ்ணன் தருவான். ஆனால், உதவி கேட்ட பிறகு இந்த நட்பு இருக்குமா?’ என்று குசேலன் நினைக்க ஆரம்பித்தான். கடைசியில், என்னவானாலும் சரி, கிருஷ்ணனை இழக்கக் கூடாது என்று உதவி கேட்காமலேயே குசேலர் புறப்பட்டார். நண்பனின் உடை, நிலைமை எல்லாம் கவனித்த கிருஷ்ணன் மாயப்புன்னகை செய்தான்.
அங்கே குசேலரின் வீடு செல்வ செழிப்பாக மாறியது. அதேபோல், ஊர் திரும்பிய குசேலரும், ‘கேவலம் பசியைப் போக்க செல்வம் வேண்டி உன்னிடம் வந்ததற்காக வெட்கப்படுகிறேன். இது எனக்கு வேண்டாம். எனக்கு முக்தி எனும் பெருஞ்செல்வத்தைக் கொடு’ எனக் கதறினார். அதன் பின் அவர் நித்ய செல்வமாகிய வைகுந்தம் சென்றார்.
நட்புக்காக உதவி கேட்காத குசேலர், நட்புக்காக கேட்காவிட்டாலும் கொடுத்த கிருஷ்ணன்.எதிர்பார்ப்பற்ற பக்தியே சிறந்தது என்பதை இந்த குசேலர் நிகழ்வு நமக்கு விளக்குகிறது.