கல்லின் மீது வைத்த பூமாலை கண்ணனின் திருக்கழுத்தை அலங்கரித்த கதை தெரியுமா?

The miracle performed by Sri Guruvayurappan
Sri Guruvayurappn Temple
Published on

குருவாயூரில் அருளும் குருவாயூரப்பன் பல்வேறு வாசமுள்ள மலர் மாலைகளை மிகவும் ரசித்து அணிந்து கொண்டு அருள்பாலித்தாலும், பக்தை ஒருவர் அணிவித்த பக்திப் பூமாலை ஒன்றை அவன் விசேஷமாக அணிந்து மகிழ்ந்த சிறிய வரலாற்று நிகழ்வு ஒன்றும் கூறப்படுகிறது.

மஞ்சுளா என்ற ஒரு பெண் தினமும் குருவாயூரப்பனுக்கு அழகான மாலைகளை கட்டும் கைங்கர்யத்தை செய்து வந்தாள். ‘ஹே குருவாயூரப்பா. உனக்கு பட்டோ பீதாம்பரமோ கொடுக்கும் வசதி எல்லாம் என்னிடம் கிடையாது. எனக்குத் தெரிந்த ஒரே வேலை கிடைக்கும் பூக்களைக் கொண்டு ஒரு மாலையைக் கட்டி அதனை உனக்கு சமர்ப்பிப்பதுதான். அதனை நீ சூட்டிகொள்ளும்போது எனக்குக் கிடைக்கும் ஆனந்தம் என்பது நீ கட்டி கட்டியாகத் தங்கம் கொடுத்தனுப்பினால் கூட கிடைக்காதப்பா‘ என்று மனதில்  நினைத்துக்கொண்டே தினம் மாலை வேளையில்,  அழகான மாலைகளைத் தொடுத்து, அதனை அர்ச்சகரிடம்  தருவாள். மஞ்சுளாவின்  பூமாலை வந்து விட்டதா என தம் சன்னிதியிலிருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டே இருப்பான் குட்டி கண்ணன்.

இதையும் படியுங்கள்:
சந்திரனின் தலைவிதியை மாற்றிய அன்னாபிஷேகத்தின் ரகசியம்!
The miracle performed by Sri Guruvayurappan

எப்போதும் போல ஒரு நாள் ஆசை ஆசையாக மாலை கட்டிக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. அன்றைய தினம் அவள் மாலை கட்டிக்கொண்டு சென்றபோது கோயிலின் கதவு சாத்தப்பட்டு விட்டது. ‘குருவாயூரப்பனுக்கு மாலை சாத்த வேண்டும் என்று ஓடோடி வந்தேனே, இப்படி கதவை சாத்திவிட்டு என்னை சோதிக்கிறானே என் குருவாயூரப்பன்’ என்று கையில் பூ மாலையோடு கண்களில் கண்ணீர் மாலையோடு குருவாயூரப்பனின் கோயிலை பார்த்தபடியே நின்றிருந்தாள் மஞ்சுளா.

எப்போதும் மலர்ந்த முகத்தோடு மலர் மாலையோடு வரும் மஞ்சுளா இப்படி மனம் தளர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பூந்தானம் எனும் பக்தர், விஷயத்தைக் கேள்விப்பட்டு, “கவலைப்படாதே. குருவாயூரப்பன் சர்வ வ்யாபி. எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன். இதோ நீ இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த ஆலமர அடியில் உள்ள கல்லின் மீது உனது பூமாலையை வைத்து விட்டு சந்தோஷமாக உன் வீட்டிற்குப் போ. மாயக்கண்ணன் எப்படியோ உன் மாலையை அணிந்து கொண்டு விடுவான்” என்று ஆறுதல் கூறி, மஞ்சுளாவை அனுப்பி வைத்தார். மஞ்சுளாவும் பெரியவர் சொல்லி விட்டாரே என்று அங்கே இருந்த கல்லின் மீது தான் கட்டிய பூமாலையை வைத்து விட்டு போய் விட்டாள்.

பக்தியோடு சமர்ப்பிக்கும் பூமாலைகளையும், பாமாலைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்பவன் அல்லவா அந்த குருவாயூரப்பன்? மஞ்சுளாவின் மாலையையும் அப்படித்தான் ஏற்றுக்கொண்டு, உண்மையான பக்திக்கு ஒரு தனி ஏற்றம் கொடுத்து விட்டான் அந்த கிருஷ்ணன். அடுத்த நாள் காலை, குருவாயூரப்பனின் சன்னிதியை திறந்த அர்ச்சகர், முதல் வேலையாக குருவாயூரப்பனின் கழுத்தில் இருந்த பழைய பூ மாலைகளை அகற்ற ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணர் - ராதை ஊஞ்சல் உத்ஸவ மகோத்ஸவத்தில் நாரதர் செய்த கலகம்!
The miracle performed by Sri Guruvayurappan

எல்லா பூமாலைகளையும் அகற்றியவருக்கு ஒரு பூ மாலையை மட்டும் கண்ணனின் கழுத்திலிருந்து கழற்றவே முடியாமல் போனது. இது என்ன ஆச்சரியமாக இருக்கிறதே என அங்கே இருந்தவர்கள் அனைவருமே பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த பூந்தானம், “ஹே குருவாயூரப்பா, இது மஞ்சுளாவின் பூமாலை எனில் கழற்றி விடு” என்று கூற, உடனே குருவாயூரப்பனின் கழுத்தில் இருந்து விழுந்தது அந்த பூமாலை.

குருவாயூரில் இன்றும், ‘மஞ்சுளதாரா’ எனும் பெயரில் ஆலமரத்தின் கீழ் உள்ள அந்த கல்லை நாம் பார்க்கலாம். அவ்விடத்தில் ஒரு பெரிய கருடனின் சிலையும் அடையாளமாய் காத்து கொண்டிருக்கும் அழகையும், பூமாலை இருந்த இடத்தை காட்டிக்கொண்டிருக்கும் அழகையும் கண்குளிர காணலாம். பூக்கோலத்தை ரசிக்கும் குருவாயூரப்பன் மிகவும் ரசித்த பூமாலை மஞ்சுளா என்ற பூவை தந்த மாலையையும்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com