

அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி பௌர்ணமி அன்று சிவலிங்கத்தை அன்னத்தால் மூடி வழிபடும் ஒரு சிறப்பு பூஜையாகும். உயிர்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரம்மனின் கர்வத்தை போக்கவும், சந்திரனின் சாபம் தீர்க்கப்பட்டதும் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். பிரம்மனுக்கு ஆதி காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் அவர் மிகுந்த கர்வத்துடன் நடந்து கொண்டார். இதனை அடக்க எண்ணிய சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கொய்த்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த பிரம்மஹத்தி தோஷத்தை கழிப்பதற்காக சிவபெருமான் காசியில் அருளும் அன்னபூரணியை வேண்டிக் கொண்டார். அன்னபூரணியின் அருளால் சிவனுக்கு அன்னபிரசாதம் கிடைத்தது. அதன் மூலம் அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
சந்திரன் தனது 27 மனைவிகளில் ரோஹிணியிடம் மட்டும் அதிக பாசம் காட்டி பாரபட்சம் காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற நட்சத்திர மனைவியர் தனது தந்தை தட்சனிடம் புகார் கூறினார். உடனே கோபமுற்ற தட்சன், சந்திர பகவானுக்கு சாபமிட்டார். ‘நீ நாளுக்கு நாள் தேய வேண்டும். உனது கலைகள் அனைத்தும் மறைய வேண்டும்’ என சாபமிட்டார். இதன் காரணமாக சந்திர பகவானுக்கு ஒவ்வொரு கலைகளாக தேயத் தொடங்கியது.
இதனை கழிப்பதற்காக சந்திர பகவான் திங்களூர் பகுதியில் உள்ள சிவனை வணங்கி சாபம் நீங்கியதாக வரலாறு. சந்திரன், சிவபெருமானிடம் ‘எனது சாபம் நீங்கவும் எனது கலைகள் மீண்டும் எனக்குக் கிடைக்கவும் வேண்டும்’ என வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் அவரது மூன்றாவது கலையை தனது பிறையாக சூடிக் கொண்டார். இதுவே மூன்றாம் பிறை எனப்படுகிறது. எப்படி இருந்தாலும் சாபத்தை முழுமையாக போக்க முடியாது. 15 நாட்கள் தேயவும், 15 நாட்கள் வளரவும் கடவாய் என சிவன் ஆசி வழங்கினார். ஐப்பசி பௌர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருவதால் அதிக ஒளியுடன் பிரகாசமாகத் தோன்றுவார்.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உள்ள தானியம் அரிசியாகும். அதனால்தான் அன்றைய தினம் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னாபிஷேகம் செய்யப்பட்டதும் அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அருகில் உள்ள நீரில் கரைப்பது வழக்கம். அன்னாபிஷேகத்தை, ‘அன்ன பரப்பிரம்மம்’ என்றும் அழைக்கிறார்கள். உடலையும் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம். சந்திரனுக்கு 16 கலைகளும் திரும்ப கிடைக்கப் பெற்றதால் ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்னாபிஷேகத்தன்று சிவனுக்கு பசும்பால், தயிர், தேன், சந்தனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், விபூதி, மஞ்சள் பொடி மூலம் அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் மூடி அதன் மேல் காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்படும்.
அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவானது. நம் உண்ணும் உணவே இறைவன் என்பதன் தத்துவமாகும். தஞ்சையில் அருளும் சிவலிங்கத்திற்கு 100 மூட்டை அரிசிகளால் சாதம் வடித்து அலங்காரம் செய்வார்கள். இதை பார்ப்பதற்கு மலை போன்று காட்சியளிக்கும். இந்த பிரசாதத்தை பெற்றவர்களுக்கு என்றுமே அன்னத்திற்கு குறைவு இருக்காது. அன்ன பிரசாதம் வாங்கிச் செல்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்படாது என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்கு அன்னபூரணி அன்னமிட்ட தினம் ஐப்பசி பௌர்ணமி ஆகும்.
அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடி லிங்கத்தை தரிசனம் செய்த பயனும் சொர்க்க லோகப் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகத்தை ஐப்பசி பௌர்ணமி அன்று நாமும் தரிசித்து வாழ்க்கையில் எல்லாம் நலமும் பெறுவோம்.