கண் திருஷ்டியால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்னைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். திருஷ்டி கழிக்க விசேஷங்கள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது என்பது சங்ககாலம் தொட்டே இருந்து வருகிறது. விசேஷங்களின்போது குலை தள்ளிய பூவுடன் இருக்கும் வாழை மரங்களை வாசலில் கட்டுவதும் திருஷ்டி தோஷங்களைப் போக்கும் குணம் வாழைக்கு உண்டு என்பதால்தான்.
* வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் குங்குமம், மஞ்சள் தடவி வைப்பதைப் பார்க்கலாம். மேலும், ஆகாச கருடன் எனும் ஒரு வகைக் கிழங்கை மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
* கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து வாரம் ஒரு முறை குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, உடற்பிணி, சோம்பல் போன்றவை நீங்கும். அதுமட்டுமின்றி, வீட்டை துடைக்கும்போது சிறிதளவு கல் உப்பை நீரில் கலந்து சேர்த்து தரையை துடைத்து வர, கண் திருஷ்டி நீங்கும்.
* கருப்பு ஜீவராசிகளை ஆடு, கோழி போன்றவற்றை சில நாட்கள் வளர்த்து அதனை கோயிலுக்குக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. இவை நம்முடைய தோஷங்களைப் போக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
* அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சாம்பிராணிப் பொடியுடன் வெண்கடுகு தூள், கருவேலம்பட்டைத் தூள் சேர்த்து தூபம் போடுவது திருஷ்டிகளைக் கழிக்க உதவும்.
* கண் திருஷ்டியைப் போக்க எலுமிச்சம் பழம், சிவப்பு மிளகாய் மற்றும் கரியை சேர்த்து நூலில் கோர்த்து வீட்டு வாசலில் கட்டி இருப்போம். இவற்றை அலுவலகம் மற்றும் கடைகளில் கூட கட்டலாம். இது மூடநம்பிக்கை இல்லை. இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் பல சடங்குகள் மற்றும் நடைமுறைகள் மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கட்டுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இவற்றை பருத்தி நூலில் கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மிளகாயுடன் சேர்ந்து பருத்தி நூல் வழியாக ஆவியாக வெளிப்படும். இதன் வாசனை காற்றில் கலக்கும்போது நமது சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கண் திருஷ்டி படாமல் இருக்கவும், மற்றவர்களின் ஏக்கப் பார்வை, துஷ்டப் பார்வை, பொறாமை என எதுவாக இருந்தாலும் அதனை ஈர்க்கும் சக்தி எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்க்கு உண்டு. அத்துடன் எலுமிச்சை மற்றும் மிளகாயின் வாசனை காரணமாக கொசுக்கள் மற்றும் ஈக்கள் வீட்டில் வராமல் தடுக்கப்படுவதால் நோய் தொற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
* வாஸ்து சாஸ்திரத்தின்படி எலுமிச்சை மரம் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். இவை தீய சக்திகளை உறிஞ்சி நல்ல சக்தியை பரப்பும் என்றும் கூறப்படுகிறது.
* பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வீட்டின் வாசலில் மாட்டி வைக்க நல்லது. மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு சிவப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டு வாசலில் மாட்டி வைக்கலாம்.
* மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள உத்ஸவ மூர்த்திகளான பெருமாள், தாயார் இருவருக்கும் தாடையில் திருஷ்டி போட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இத்தலம் கல்யாண வரம் அருள்வதுடன் திருஷ்டி நீக்கும் தலமாகவும் கூறப்படுகிறது.