

காஞ்சி மகா பெரியவர், தம்மை நம்பி வந்தவர்களுக்கு நல்வழிகாட்டி, அவர்தம் துன்பங்களைப் போக்க வழிவகுத்துக் கொடுத்து, வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திய மகான்! ஆன்மிகத்தை,மக்களின் அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் பயன்படுத்தியவர்! நம் கண் முன் வாழ்ந்த கர்ம யோகி! அவர் காலத்தில் (1894 - 1994) நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது! அவரது சாதனை செயல்களைச் சொல்லப் புகுந்தால் பக்கங்கள் பல நூறு வேண்டும்!
அன்று சுவாமிகளிடம் ஆசி பெறும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நீண்ட க்யூ! அந்த வயதான தம்பதியர் மன வருத்தமும் களைப்பும் மேலோங்க, க்யூவில் இடம் பிடிக்கின்றனர். சிறிது நேரம்தான் ஆகியிருக்கும். பெரியவரின் உதவியாளர் அவர்களிடம் வந்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுக்கிறார். சீட்டைப் பிரித்துப் பார்த்தால் அதில் ஒரு ஸ்லோகமும் அதனைச் சொல்ல வேண்டிய முறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களிடம் பேசாமலே எப்படித் தங்கள் நோயை அறிந்து அதனைப் போக்க வழியையும் கூறி, தங்களை மேலும் களைப்புடன் காக்க வைக்காமல் அனுப்பினார் என்ற ஆச்சரியம் மேலோங்க அவர்கள் அங்கிருந்து அகல்கிறார்கள்!
அதன் பிறகு முப்பது நாட்கள்தான் ஆகியிருக்கும். இன்று அந்தத் தம்பதியினர் முன்னதாகவே வந்து சுவாமியிடம் ஆசி பெறுகிறார்கள். மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணிக்கு சிகிச்சையளித்த டாக்டரே கைவிரித்த நிலையில், அந்த டாக்டரே வியக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியதை சுவாமியிடம் சொல்லி, நன்றி தெரிவிக்கிறார்கள்.
மற்றொரு நாள் - அந்த முப்பது வயதுடையவர் வயிற்று வலியால் துடிக்கிறார். க்யூவில் நிற்கும் அவரிடம் பெரியவா வந்து, வயிற்றைத் தடவிக் கொள்ளச் சொல்கிறார். இரண்டொரு முறைதான் தடவியிருப்பார். வலி குறைய, அவர் முகத்தில் நிம்மதி தோன்றுகிறது. ஆனால், பெரியவரின் வயிற்றில் அந்த வலி தஞ்சமடைய, பெரியவர் தாங்கிக் கொள்கிறார். வலி வயிற்றைக் குடைய ஆரம்பிக்க, பெரியவரால் சரியாகச் சாப்பிட முடியவில்லை.
பெரியவரின் சமையல்காரர் அதனைத் தெரிந்து கொண்டு, திடீர் விடுமுறை எடுத்துக் கொண்டு, ஊர் போவதாகப் பொய் சொல்லி விட்டு, வைத்தீஸ்வரன் கோயில் சென்று வைத்தீஸ்வரரை வணங்கி, பெரியவருக்கு வலியிலிருந்து விடுதலை வாங்கித் தருகிறார்! ஊர் திரும்பிய உதவியாளரிடம், ’ஊருக்குப் போவதாகச் சொல்லி விட்டு,வைத்தீஸ்வரன் கோயில் சென்று என் வலியைப் போக்கி விட்டாயே!’ என்று பெரியவா சொன்னதும்,திகைத்து நிற்கிறார்!
நோய்களைப் போக்குவது மட்டுமல்ல, நோயற்றே வாழவும் வழி சொன்னவர்தான் காஞ்சி பெரியவர்! அந்தக் காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ, ராமாயணத்தைப் படிப்பார்களாம். அது 10589 செய்யுட்களைக் கொண்டது. அதனை முழுமையாகப் படிக்க நேரம் இல்லாதவர்கள், சுந்தர காண்டத்தை மட்டுமாவது படிப்பார்களாம். அது 2885 பாக்களைக் கொண்டது.
தற்போதைய அவசர உலகத்தில் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க,எல்லோராலும் முடிவதில்லை. பொழுதுபோக்கு அம்சங்களும் பலவாறாகப் பெருகி விட்டன. இருந்தபோதிலும் ராமாயணத்தைப் படிக்கும் ஆர்வம் கொண்டோர் இல்லாமலில்லை! அவர்கள் திருப்தியும் அமைதியும் அடையும் விதமாக ராமாயணத்தை எல்லோரும் படிக்கும் விதமாக எளிமையாக்கிக் கொடுத்துள்ளார் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அந்தப் பத்து வரி ராமாயணம் இதோ, உங்களுக்காக! 30 வினாடிகளில் ராமாயணத்தைப் படித்த முழுப் பயனையும் அடையலாம்.
‘ஶ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைதன்ய சேவிதம்
சர்வமங்கல கார்யானுகூலம்
சததம் ஶ்ரீராமச்சந்திர பாலயமாம்
ஶ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஶ்ரீராம்!’
இனியென்ன? தினமும் பெரியவாளின் ராமாயணத்தை ஓதி புண்ணியத்தைச் சேர்ப்போம்!