

கந்தன்குடி எனப்படும் தேன்காடு, மதுவனம் ஆகிய பெயர்களால் போற்றப்படும் இத்தலத்தில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய முருகன் கல்யாணசுந்தரராக வழிபடப்படுகிறார். தெய்வானை தவம் செய்து முருகனை மணந்த தலமாக இது பிரசித்தி. சித்ரா பௌர்ணமி பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களில் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்கின்றனர்.
கந்தக் கடவுள் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி என்னும் திருநாமத்துடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் தலம் கந்தன்குடி. இது திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்த தலத்திற்கு குமரக்குடி என்று ஒரு பெயர் உண்டு. தேன் ஒழுகும் மலர்வனம் கொண்ட ஊராததால் இதற்கு தேன்காடு, மற்றும் மதுவனம் என்னும் பெயர்களும் உண்டு. இந்த தலம் முருகனின் எட்டு குடிகள் (எட்டு தலங்கள்) தலங்களில் ஒன்றாகும்.
பசுமை தவழும் நெல்வயல்கள் நிறைந்த இயற்கை எழில் மிகுந்து திகழும் கந்தன்குடி திருத்தலத்தில் உறையும் முருகப்பெருமானை தமது திருப்புகழால் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். ‘எந்தன் சடலங்கம்பட என்று தொடங்கும் அந்த திருப்புகழ் ‘கந்தன் குடியில் தங்கிய பெருமாளே!’ என்று முடிகிறது.
இந்த தலத்தில்தான் தெய்வானை தவம் செய்து முருகனை மணாளனாக அடைந்தாள். இந்திரன் தெய்வானைக்கு உதவியாக ஐராவதம் என்னும் யானையையும் பைரவரையும் இந்த இடத்தில் விட்டுச் சென்றார். ஐராவதம் இங்கே வந்ததால் இங்கே முருகனுக்கு மயிலுக்கு பதில் யானைதான் வாகனம். இங்கு கருவறையில் முருகப்பெருமான், நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார்.
இங்கே தெய்வானை தவமிருந்து முருகனை கணவனாக அடைந்ததால் இத்தலம் திருமணத் தடை நீக்கும் சக்தி வாய்ந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கே கந்தன்குடி முருகன் கல்யாணசுந்தரர் என்னும் திருநாமமும் உண்டு. தல விருட்சம் பன்னீர் மரம். இங்கே மூலவர் சன்னதிக்கு அருகில் தெய்வானை தனி சந்நிதியில் தவக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
இது ஐராவதம் வந்து முருகனை வழிபட்ட தலம் என்பதால் இங்கேயுள்ள சிவனுக்கு ஐராவதேஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இங்கே பைரவர், சித்திவினாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோருக்கான சன்னதிகளும் உள்ளன.
இக்கோவிலின் தல புராணப்படி, முற்காலத்தில் துர்வாச முனிவர் சோழ நாட்டு சிவதல வழிபாட்டிற்கென வான்வழி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அசுர குலப்பெண் ஒருத்தி அவரை இடைமறித்து, “முனிவரே! நான் உம்மை விரும்புகிறேன். எனக்கு உம்மால் பிள்ளைப்பேறு வேண்டும்.” எனக்கேட்டாள்.
இறை வழிபாடு செய்ய சென்று கொண்டிருந்த தன்னை மறித்து இவ்வாறு கேட்ட அந்த பெண்ணை முனிவர் சபித்து விடுகிறார். “உனக்கு அழிவு செய்யும் அசுர மக்கள் இருவர் பிறக்கக் கடவது!” என்று.
முனிவரின் சாபம் அப்போதே பலித்தது. விண்ணிலேயே ஒரு மகன் பிறக்கிறான். அவன் பெயர் அம்பரன். அடுத்த பிள்ளை அழுகை ஒலியுடன் பிறக்க, அவனுக்கு அம்பன் என்று பெயர். பிறகு அவர்கள் வளர்ந்து தேவர்களை வதைக்க முற்பட்டனர். தேவர்கள் அம்பிகையை சரணடைய, அம்பிகை அவர்களை வதைக்க காளியை உருவாக்கி அனுப்புகிறாள்.
இதனைக் கண்ணுற்ற முருகனோ காளிக்கு முன்னதாக சென்று அந்த அசுரர்களை அழிக்க முற்படுகிறார். அம்பிகை அவரை தடுத்து “நானே காளி உருவில் அசுரர்களை வதம் செய்து வருவேன், ஆனால், நீ இத்தலத்திலேயே குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் புரிவாய்!” என்று கூறினாள். அதனால் கந்தன்குடி கொண்ட இடம் கந்தன்குடி என்று ஆனது.
இந்த கோவிலின் பிரம்மோற்சவம் சித்ரா பௌர்ணமிக்கு 10 நாட்கள் முன்னதாகத் தொடங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களிலும் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உலா வருகிறார்.
ஒன்பதாம் நாள் திருத்தேர் உலா. அன்றைய தினம் சுவாமி முருகன், தேருக்கு வரும்போது முருகனை தேனீக்கள் மொய்க்கும் அதிசயம் நடக்கிறது. மேலும் முருகனுக்குகந்த வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடக்கின்றன.
மாதாமாதம் வரும் வரும் கிருத்திகை மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று 06.08.26 ஆடி கிருத்திகையன்றும் விசேஷ பூஜை, வழிபாடுகள் நடக்க இருப்பதால் பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.
கந்தன்குடி தலத்தின் தனித்துவமான ஐராவத வாகன வரலாறு மற்றும் திருப்புகழ் சிறப்புகளை உணர்ந்து கொள்வதுடன், வரும் ஆடி கிருத்திகையன்று இத்தலத்திற்குச் சென்று தரிசனம் செய்வதன் மூலம் அசுர பலம் போன்ற வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறலாம்.