வைகாசி விசாக விரத பலன்கள்: ஞானமும் நீண்ட ஆயுளும் தரும் ஆறுமுகனின் அற்புத வழிபாடு!

vaikasi-visakam
vaikasi-visakam
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வைகாசி விசாகம் மே 30 சனிக்கிழமையன்று அனைத்து முருகன் திருத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். மே 29 அன்று காலை 10:38 மணிக்குத் தொடங்கி மே 30 அன்று பிற்பகல் 1.20 மணிக்கு விசாக நட்சத்திரம் நிறைவடைகிறது.

விரதம் மேற்கொள்வது: 

வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவது வழக்கம். அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். தாகத்தால் தவிக்கும் மக்களுக்கு மோர், தண்ணீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்குவது இந்நாளில் மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது.

நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முகக் கவசம் எனப் பாராயணம் செய்யலாம்.

விசாகன் பெயர் காரணம்: 

பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை மாத கார்த்திகை போன்று வைகாசி விசாகம் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகனுக்கு விசாகன் என்ற பெயர் உண்டு. வி என்றால் பறவை(மயில்), சாகன் என்றால் பயணம். அதாவது மயில் மீது பயணம் செய்யக்கூடியவர் என்று பொருள். ஆறுமுகன் அவதரித்த நாளான இன்று எமதர்ம ராஜனின் அவதார தினமாகும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே இத்தினத்தில் விரதம் இருந்து வழிபட நமக்கு நீண்ட ஆயுளும், முருகனின் அருளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

திருச்செந்தூர் உஷ்ணசாந்தி உற்சவம்:

திருச்செந்தூர் சுப்பிரமணியன் திருக்கோவிலில் கருவறையில் தண்ணீர் நிற்கும் படி செய்து முருகனுக்கு 'உஷ்ண சாந்தி உற்சவம்' எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் போன்றவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வை மாற்றும் எளிய ஆன்மிகப் பரிகாரங்கள்!
vaikasi-visakam

பாரச முனி குமாரர்கள் சாப விமோசனம் பெற்ற தினம்:

திருச்செந்தூர் கோவில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை இட்டு முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக பராசர முனிவரின் குமாரர்களை அதாவது ஆறு முனிவர்களின் உருவ பொம்மைகளை வைத்து சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

வைகாசி விசாக தினத்தின் சிறப்புகள்: 

*வைகாசி விசாகத் திருநாள் என்பது முருகப்பெருமான் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்த திருநாள் என்பதால் அன்று முருகப் பெருமான் அருள் புரியும் கோவில்கள் விழாக்கோலம் காணும். பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகனின் திருத்தலங்களில் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

*முருகன் ஆலயங்களில் பால்குடம் எடுப்பதும், காவடிகள் சுமப்பதும் என பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

*ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் வீற்றிருக்கும் வராக லக்ஷ்மி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் மிகவும் சிறப்பான தினமாகும். ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் காட்சி தரும் நரசிம்மமூர்த்தி வைகாசி விசாக நாளில் மட்டும் சந்தன பூச்சைக் களைந்து காட்சி தரும் நாளாகும். 

*அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள் இந்த வைகாசி விசாகம். இதனை திருவேட்களம் எனும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

*பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்ததும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான்.

*ராமலிங்க அடிகளார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவிய தினமும் இந்நாளே.

*திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தி அடைந்ததால் அவரது குருபூஜை திருப்போரூரில் உள்ள அவருடைய சமாதியில் மிகவும் விசேஷமாக நடைபெறும்.

வைகாசி விசாக விரதத்தின் பலன்:

வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகனை மனம் உருகி வழிபட வேண்டியது கிட்டும். வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும். திருமணத் தடைகள் நீங்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப்பருமானை வழிபடுவதால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை மற்றும் குடும்ப சிக்கல்கள் அகலும். வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம், நினைத்த காரியங்களில் வெற்றி, செல்வம், தைரியம் மற்றும் சிறந்த குடும்ப வாழ்க்கை ஆகியவை அமையும் என்பது ஐதீகம். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஓம்  சரவணபவ எனும் மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:
உள்ளத்தில் முருகனை வைப்போம்... உயர்வு பெற விசாக விரதம் இருப்போம்!
vaikasi-visakam

அருகில் உள்ள முருகன் தலத்திற்குச் சென்று வழிபடலாம். போக முடியாதவர்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி முருகப்பெருமானின் படத்திற்கு அரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்களைக்கொண்டு அலங்கரித்து, சர்க்கரை பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யலாம்.

இப்படி பல சிறப்புகள் பெற்ற வைகாசி விசாக தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கிட அனைத்து செல்வமும், ஞானமும் கிடைத்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com