தமிழ்நாட்டின் பக்தி இலக்கியத்தில் தனிச்சிறப்புடன் விளங்கும் அருணகிரிநாதர், 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முருகப் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியால், 'திருப்புகழ்' என்ற அற்புதமான பாடல்களைப் படைத்தார். இவரது பாடல்கள் இசை, பக்தி, தத்துவம் இவை மூன்றும் கலந்த கலவையாகத் திகழ்கின்றன.
இளமையில் சுகபோக வாழ்வில் ஈடுபட்டிருந்த அருணகிரிநாதர், ஒருநாள் தன் தவறை உணர்ந்து, முருகப் பெருமானிடம் சரணடைந்தார். அன்று முதல் அவரது வாழ்க்கை பக்திப் பாதையில் பயணித்தது. திருப்புகழ் பாடல்கள், அவரது ஆன்மீகப் பயணத்தின் அனுபவங்களை அழகாக வெளிப்படுத்துகின்றன.
திருப்புகழ் பாடல்களில் உள்ள சொல்லழகும், இசை நயமும், பக்திப் பெருக்கும் தன்மையும் இன்றளவும் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றுள்ளன. அருணகிரிநாதரின் வாழ்க்கையும், பாடல்களும் நமக்கு உண்மையான பக்தியின் பாதையைக் காட்டுகின்றன.
திருப்புகழ்:
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில், கந்தனின் பெருமைகளைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திழுப்புகழ் ஆகும். இது பக்தி இலக்கியத்தின் உயரிய எடுத்துக்காட்டாக விளங்குவது மட்டுமின்றி, தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியச் செழுமையையும் பறைசாற்றுகிறது.
திருப்புகழ் பாடல்கள் கந்தனை பல்வேறு திருநாமங்களால் போற்றுகின்றன. முருகனின் வீரத்தையும், அழகையும், கருணையையும் அற்புதமாகச் சித்தரிக்கின்றன. பாடல்களில் உள்ள சொல்லாட்சி, உவமைகள், அணிகள் அனைத்தும் அருணகிரிநாதரின் புலமைத் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன.
103-வது பாடல்:
அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்களில் 103-வது பாடல் தான் அதிருங் கழல் பாடல். இதனை தினமும் நெஞ்சில் நிறுத்தி மயூர வாகனனை நினைத்து ஒரு முறையேனும் உருகி பொருளுணர்ந்து தியானித்து வருவதால் நினைத்த காரியம் வெற்றி அடையும். மனதிற்கும் எல்லையில்லா ஆனந்தம் பெருகும்.
பாடல் பின்வருமாறு :
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பாடலின் பொருள்:
அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் ... ஒலிக்கும் வீரக்
கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது
அடிமையாகிய யான்
உன் அபயம் புகுவ தென்று ... நீயே புகலிடம் என்று
நிலைகாண ... மெய்ந் நிலையை யான் காணுமாறு
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி ... எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே ... துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
எதிர் அங்கொருவர் இன்றி ... தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்
நடமாடும் இறைவன் தனது ... ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய
பங்கில் உமை பாலா ... இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே,
பதியெங்கிலுமிருந்து விளையாடி ... திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. ... பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.
இந்த பாடலை அனுதினமும் தியானித்து, வாழ்வில் வடிவேலழகனின் அருளை நிறைவாய்ப் பெற்று குன்றாத வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.