
அம்பிகையைப் போலவே கேட்டதையெல்லாம் தந்தருளும் தேவதருவான கற்பக விருட்சம் தெய்வ அற்புதம் மிக்கது. இதை அறிந்து முறையாக வணங்குவோர்க்கு செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பாற்கடலில் இருந்து அமுதம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மகாமேருவை மத்தாகவும் கொண்டு கடைந்து கொண்டிருந்தபோது, பதினாறு வகையான பல்வேறு பொருட்கள் விதவிதமாக தெய்வ அருளோடு வெளிவந்து கொண்டிருந்தன.
அப்படிப் பாற்கடலில் தோன்றிய வலம்புரி சங்கையும் சாளக்ராமத்தையும் மகாவிஷ்ணு தனது கையில் எடுத்துக் கொண்டார். சௌபாக்கிய திரவியங்கள், தபஸ்விகள், பொன், மாணிக்கம், சிந்தாமணிகள் என்று பல பொருட்கள் வந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்குகளுக்குச் சென்று விட்டன. அவற்றைத் தொடர்ந்து பச்சை நிறத்தில் மரக்கிளை போல பாசிக்கற்றைகள் பின்னியது போல ஒரு உருவம் அழகாக நீரில் மிதந்து வந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.
அந்த மரம் போன்ற உருவத்தின் நடுவில் ரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு தேவி பொற்காசுகளை கொட்டுவது போன்று, மகாலட்சுமியை போலிருக்கும் அழகோடு சிரித்தபடி நின்று கொண்டிருக்க, அம்மரம் குபேர திசையான வடக்கில் செல்லத் தொடங்கியது.
ரிஷிகளும் முனிவர்களும் இதைக் கண்ணுற்று வியந்தபடி, ‘ஆஹா கற்பக விருட்சம்… ஆஹா கற்பகவிருட்சம்’ என்று வணங்கியபடி நின்றனர். தேவர்களோ அமிர்தத்தை மட்டுமே எதிர்பார்த்தபடி இருந்ததால் இதை கவனிக்காமல் விட்டுவிட்டனர். பச்சை நிறம் பூசிய இரண்டு தேன் கூடுகள் இணைந்தது போன்று தெய்வ சக்திகள் நிறைந்த இம்மரம் கேட்டதைத் தரும் திருவருள் நிறைந்தது. அதன் உள்ளே இருக்கின்ற தேவிக்கு, ‘ஸ்வர்ணவர்ஷினி’ என்று பெயர். பாற்கடலில் தோன்றிய இவள், மகாலட்சுமிக்கு சமமானவள்.
இந்த கற்பக விருட்சத்தில் உள்ள ஸ்வர்ணவர்ஷினி தேவி கொடுப்பதில் நிகரற்றவளாக விளங்குகிறாள் என்று கற்பக விருட்ச தியான ஸ்லோகம் கூறுகிறது. கற்பக தருவை, அதில் உறைந்திருக்கும் தேவியை முறைப்படி தியானித்து பூஜித்தால் சகல செல்வங்களும் கிடைக்கப்பெறும். கற்பக விருட்சத்தில் ஏராளமான பொன்னும் மணியும் நிறைந்திருக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல பல கோயில்களில் கற்பக விருட்ச வாகனத்தில் இறைவனோ, இறைவியோ எழுந்தருளி அருள்பாலிப்பார். நாமும் கற்பக விருட்சத்தையும் காமதேனுவையும் வழிபட்டு பொன்னையும் பொருளையும் பெற்று குறைவில்லா வாழ்வு பெறுவோம்.