
சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பத்து திருவிளையாடல்கள், ஆண்டுதோறும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஆவணி திருவிழாவின்போது நடைபெறுகின்றன. அதில் ஒன்று 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' நிகழ்ச்சி. சொக்கநாதருக்கு புட்டு வழங்கும் நிகழ்ச்சி, வைகை ஆற்றங்கரையில் உள்ள மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள புட்டு தோப்பில் உள்ள புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில் வருடந்தோறும் புட்டுத் திருவிழாவாக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவிற்கு பிறகு திருவிழா என்றால் அது ஆவணி மூல திருவிழாவான புட்டு திருவிழாதான். இது தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் பூராடம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற அந்தத் திருவிழா நாளை மறுநாள், 03.09.2025 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
புட்டுத் திருவிழா தோன்றிய சுவாரஸ்யமான கதை:
மதுரையை ஆண்ட அரிமாத்தன பாண்டியனின் அரசவையில் மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் பணியாற்றினார். அவரை குதிரை வாங்கி வரச் சொல்லி மன்னன், ஏராளமான பொன்னும், பொருளையும் கொடுத்து அனுப்பினான். குதிரைகள் வாங்குவதற்காக புறப்பட்ட மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை என்னும் ஊரில் தங்கினார். அங்கு அவருக்கு சிவபெருமான் காட்சியளித்ததையடுத்து அவரை குருவாக ஏற்றார்.
சிவனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டத் தொடங்கினார். இதற்காக குதிரைகள் வாங்க வைத்திருந்த பொன்னையும் பொருளையும் செலவு செய்தார். பல நாட்கள் ஆகியும் குதிரைகள் வராததால் மாணிக்கவாசகரை கண்டுபிடித்து அழைத்து வருமாறு மன்னன் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார். இந்த செய்தியை அறிந்த மாணிக்கவாசகர், செய்வதறியாது திகைத்து நின்றார். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காக்க வேண்டும் என சிவபெருமானிடம் அவர் வேண்டினார்.
அப்போது, ‘ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும்’ என்று ஒரு அசரீரி ஒலித்தது. அதையே மன்னனிடம் கூறினார். ஆவணி மூலத் திருநாளும் வந்தது. காட்டிலுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை பாகர்களாக்கி அவர்களுடன் தானும் ஒரு குதிரை மீது ஏறி வந்தார் சிவபெருமான்.
இதைக் கண்ட மன்னன் மகிழ்ச்சி அடைந்ததுடன், மாணிக்கவாசகரையும் பாராட்டினான். ஆனால், அன்று இரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக உருமாறின. இந்த செய்தியை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரை வைகை ஆற்றின் சுடும் மணலில் கிடக்கச் செய்தான். அவர் படும் துயரத்தைக் கண்ட சிவபெருமான், ஆற்றில் வெள்ள பெருகச் செய்து அவரை காப்பாற்றினார். ‘வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தைத் தடுக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும்’ என்று அரசர் ஆணையிட்டார்.
வந்தியம்மை என்னும் பிட்டு விற்கும் கிழவிக்கு ஒருவருமில்லை. இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து, வந்தியம்மையிடம் பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார். ஆனால், பிட்டை சாப்பிட்டுவிட்டு தனது பங்குக்கான கரையை அடைக்காமல், ஆடிப்பாடி, தூங்கிவிட்டார். வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட வந்த மன்னன், தூங்கிக்கொடிருந்த சிவபெருமான் மீது தனது கையிலிருந்த பிரம்பால் முதுகில் அடித்தார். அப்போது அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அந்த அடி பட்டது. அனைவரும் அலறினர். அரசன் உண்மையை உணர்ந்தான். இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும் வந்தியம்மைக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்ததாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்கவாசகரை இறை பணிக்கு விடுவித்து, தானும் இறை பணிக்கு வந்தான்.
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை 03.09.2025 அன்று புட்டுத்தோப்பில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சுப்பிரமணிய சுவாமி திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானையுடன் 02.09.2025 அன்று தங்க அங்கி அலங்காரத்துடன் மதுரை புறப்படுவார். பின்பு 03.09.2025 அன்று பிட்டு திருவிழாவில் கலந்து கொள்வார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து 03.09.2025 அன்று காலை அதிகாலை 5 மணியளவில் அம்மையப்பன் புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகளின் வழியாக கீழமாசி வீதி வந்து யானைக்கல் வழியாக சிம்மக்கல் சென்று அங்கிருந்து புட்டுத்தோப்பு செல்வார். அதன் பின்னர் அன்று பிற்பகல் 1.35 மணி முதல் 1.55 மணிக்குள் தனூர் லக்கினத்தில் பிட்டுக்கு சிவபெருமான் மண் சுமந்த லீலை, பிரம்படிபட்ட உத்ஸவம் மற்றும் மண் சாற்றுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.
அதன் பிறகு அங்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்பு அன்று மாலை 6 மணிக்கு ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் வந்தியம்மை பூப்பல்லக்குடன் திருக்கோயில் புறப்பாடாவார். அன்று காலையில் இருந்து சுவாமி திருக்கோயில் வரும் வரை நடை அடைக்கப்பட்டு இருக்கும். புட்டுத் திருவிழா நடைபெறும் புட்டுத் தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் இறைவி மீனாட்சி அம்மன் சொக்கநாதர் சன்னிதிக்கு வலதுபுறம் எழுந்தருளி உள்ளார். சிவபெருமானின்64 திருவிளையாடல்களில் ஒன்றான, ஏழை மூதாட்டி வந்தியம்மைக்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட தலம் இது. மூதாட்டி வந்தியம்மைக்கும் தனிச் சன்னிதி உள்ளது. இங்கு புட்டு திருவிழா அன்று மட்டுமே புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோயிலில் இரட்டை கால பைரவர் அருள்பாலிக்கிறார். பொதுவாக, பைரவர் ஒரு நாய் வாகனத்துடனோ அல்லது நாய் வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு, மூன்று மற்றும் எட்டு பைரவர் கூட இருப்பதுண்டு. ஆனால், இங்குள்ள பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் இரட்டை கால பைரவர் என அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தங்களது வறுமை நீங்கி செல்வம் பெருக, இழந்த பொருள்களையும், செல்வத்தையும் மீண்டும் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் தீர இரட்டை கால பைரவரை பிரார்த்தனை செய்கிறார்கள்.