செரட்டோனின் பல்வேறு உடல் மற்றும் உளவியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு ரசாயன தூதுவர் போல செயல்படுகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்பு செல்கள் மற்றும் நியூரான்களுக்கு இடையில் சமிக்ஞைகளை அனுப்ப உதவுகிறது. மூளையில் செரட்டோனின் அளவு குறைவது நினைவாற்றல் பிரச்னைகள் மற்றும் உற்சாகமற்ற மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம். செரட்டோனின் உற்பத்திக்கு உதவும் உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இயற்கையாக செரட்டோனை அதிகரிக்க உதவும் உணவுகள்:
சால்மன் மீன்: இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. வலுவான எலும்புகள், ஆரோக்கியமான சருமம் மற்றும் கண் செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது. வைட்டமின் டி யின் ஆதாரமாகவும் இது உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு பூசணி விதைகள், அக்ரூட் பருப்புகள், சோயா ஆகியவற்றிலிருந்து ஒமேகா 3 பெறலாம்.
கோழி: வான்கோழி, கோழி போன்ற மெலிந்த புரதத்திலும் புரத உணவு வகைகளிலும் கொழுப்பு குறைவாகவும் அதிகமான புரதமும் இருக்கிறது. இவை செரட்டோனின் அளவை அதிகரிக்கும்.
முட்டை: முட்டையை வேகவைத்து அல்லது ஆம்லெட் செய்து சாலடுடன் சேர்ந்து சாப்பிடும்போது அது ஆரோக்கியமானதாக இருக்கும்.
கீரை: கீரை போன்ற அடர் பச்சை இலைக் காய்கறிகள் செரட்டோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. பசலைக்கீரை இரும்புச்சத்து நிறைந்தது. ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. மேலும், சீரான சுவாசத்திற்கும் உதவுகிறது.
விதைகள்: ஆளி விதை, பூசணி விதை போன்றவற்றை சாலட்டில் கலந்து உண்ணலாம். ரொட்டியில் கலந்து கொள்ளலாம். தானியங்கள், கஞ்சி மற்றும் தயிரில் சேர்த்து உண்ணலாம்.
பால்: இதில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது. குறைந்த கொழுப்புள்ள பாலை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
சோயா பொருட்கள்: டோஃப்பு, சோயா பால் அல்லது சோயா சாஸ் போன்ற சோயா தயாரிப்புகள் ட்ரிப்டோபனின் அளவை அதிகரித்து, செரட்டோனின் அளவையும் அதிகரிக்கும். இவை குறிப்பாக சைவ உணவுக்காரர்களுக்கு ஏற்றவை.
நட்ஸ்: இவற்றில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. உணவுக்கு இடையில் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
செரட்டோனின் அளவை அதிகரிக்க உதவும் சில குறிப்புகள்: நிறைய தண்ணீர் குடித்து உடலையும் மூளையும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். சரியான மூளை செயல்பாட்டிற்கு இது முக்கியமானது.
சுறுசுறுப்பாக இருத்தல்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்போது அது உடலுக்கும் மனதுக்கும் சமநிலையான ஆரோக்கியத்தைத் தருகிறது. முழு தானியங்களை உடல் மெதுவாக ஜீரணிக்கிறது. அவை படிப்படியாக ஆற்றலை வெளியிடுகின்றன.
குடல் ஆரோக்கியம்: செரட்டோனின் உற்பத்திக்கு ஆரோக்கியமான குடல் முக்கியமானது. பிரீ பயாடிக் மற்றும் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம். செயற்கை இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் சேர்த்த உணவுகள் குடலை பாதிக்கும். இவற்றைத் தவிர்ப்பது அவசியம்.
சூரிய ஒளி: சூரிய ஒளியில் தினமும் சிறிது நேரம் நேரத்தை செலவிடுவது ஒரு நபரின் மனநிலை மேம்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உடற்பயிற்சி: நடைப்பயிற்சியுடன் சேர்த்து சில வகையான அடிப்படை உடற்பயிற்சிகளை செய்தாலே மனச்சோர்வின் அபாயத்தைக் குறைத்து மன அழுத்தத்தை சமாளிக்க உதவும். உடற்பயிற்சி எண்டார் ஃபின்களை வெளியிடுவதால் மனநிலை மேம்பாடு அடையும்.
நேர்மறையான கண்ணோட்டம்: நேர்மறையான உணர்வுகள், எண்ணங்கள் மிகவும் அவசியம். இதனால் மனச்சோர்வையும் பதற்றத்தையும் குறைத்து செரட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.