பன்னிரண்டு ஆழ்வார்களில், திருமங்கை ஆழ்வார்தான் பன்னிரண்டாவது ஆழ்வாராகப் போற்றப்படுகிறார். இவர், திருவாலி திருநகரிக்கு (இரு தலங்களும் ஒரே திவ்ய தேசமாக, 34வது திவ்ய தேசமாகக் கூறப்படுகிறது) அருகாமையில் உள்ள திருக்குறையலூர் என்கிற தலத்தில், கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில், ஆலிநாடுடையார் - வல்லித்திரு அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் நீலன் என்று பெயரிட்டனர்.
சிறு வயதில் இருந்தே நீலன் போர் தொடர்பான அனைத்துத் திறமைகளையும் யுக்திகளையும் இயற்கையாகவே பெற்றிருந்தார். சோழப் பேரரசின் வீரனாக பரிமளித்தார். எனவே, அந்நாட்டு மன்னன் அவரை, சோழ நாட்டு பேரரசின் படைத் தளபதியாக நியமித்தான். நாட்கள் செல்லச் செல்ல நீலனின் அருமை பெருமைகளை கேட்ட சோழ மன்னன், அவரை திருமங்கை என்னும் சிற்றூருக்கு குறுநில மன்னன் ஆக்கினான். அப்பொழுதிலிருந்து நீலன், திருமங்கை மன்னன் என்னும் காரணப் பெயரைப் பெற்றார்.
அமங்கலை என்னும் தேவலோகக் கன்னியானவள் கபில முனிவரின் சாபத்தினால் பூமியில் குமுதவல்லி என்கிற பெயரில் வளர்ந்து வந்தாள். தக்க திருமண வயதில், குமுதவல்லி நாச்சியாரை, திருநகரி அருகே உள்ள திருவெள்ளக்குளத்தில் உள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் கண்டார். அவளையே தனக்குத் துணைவியாக மணம் முடிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்ட திருமங்கை மன்னன், அவளை நாடியபொழுது, குமுதவல்லி நாச்சியார் இரண்டு நிபந்தனைகளை விதித்தார். ‘ஒன்று, தான் ஒரு தீவிர விஷ்ணு பக்தையாக இருப்பதினால், மன்னனும் வைணவ குலத்திற்கு மாற வேண்டும். இரண்டாவது, ஒரு வருடம் அன்றாடம் 1008 வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும்’ என்றார்.
இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட திருமங்கை மன்னனுக்கு வைணவ சம்பிரதாயப்படி 'பஞ்ச சம்ஸ்காரம்' என்பதை செய்து வைக்க ஆச்சார்யார் யாரும் முன்வரவில்லை. ஆனால், திருநாரையூர் திவ்ய தேசத்தில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாளே திருமங்கை மன்னனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் அந்த திவ்ய தேசத்தில் திருமங்கை மன்னனுக்கு தனி சன்னிதியே உள்ளது.
நிதமும் 1008 வைணவர்களுக்கு அமுது படைத்து வந்த திருமங்கை மன்னனுக்கு, கஜானாவில் பொருள் அனைத்தும் குறைந்தது .சோழ மன்னனுக்கு கப்பம் கட்டவே பொருள் இல்லாத நிலையில், பொருளை ஈட்டுவதற்காக வழிப்பறி செய்யத் தொடங்கினார்.
ஒரு நாள் புதுமணத் தம்பதிகள் பெரும் பொருட்கள், ஆபரணங்களுடன் அவ்வழியாக வருவதாக திருமங்கை மன்னனுக்குத் தகவல் கிடைத்தது. சந்தர்ப்பத்தை கைவிடக் கூடாது என்கிற எண்ணத்தில், தனது நண்பர்களுடன் தம்பதியை வழி மறித்து பொருட்களையும், ஆபரணங்களையும் களவாடிப் பெற்றார். ஆனால், மணமகன் கால் விரலில் அணிந்திருந்த மோதிரம் போன்ற அணிகலனை மணமகனாலேயே கழட்ட முடியவில்லை. அப்பொழுது அந்த அணிகலனை தானே கழட்டுவதாக திருமங்கை மன்னன், மணமகனின் காலடிகளை கைகளால் பற்றி, அந்த அணிகலனை இழுக்க முயன்றார். அப்பொழுது, மணமகன், 'கலியா' என்று அழைத்து, ‘ஓம் நமோ நாராயணா’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை மன்னனின் காதுகளில் உபதேசம் செய்தார்.
புதுமணத் தம்பதியாக வந்தவர்கள் வேறு யாரும் அல்ல, திருமாங்கொல்லை திவ்ய தேசத்தின் பெருமாளான ஸ்ரீ வயலாளி மணவாளப் பெருமாளும், ஸ்ரீ மகாலட்சுமி தாயாரும் ஆவார்கள். அந்தத் தருணத்திலிருந்து அவர் தீவிர வைணவ பக்தராக மாறினார்.
திருமங்கை மன்னனாக இருந்தவர், திருமங்கை ஆழ்வாராக மாறினார். 108 திவ்ய தேசங்களில், அதிக அளவில் திவ்ய தேசங்களுக்குப் பயணித்து, அங்கு மங்களாசாசனம் செய்தவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார்க்கு அடுத்தபடியாக அதிகமான பாசுரங்களைப் பாடியவர் திருமங்கையாழ்வார்தான். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு அதிகமான திருப்பணிகளைச் செய்தவரும் இவரே. இவர் மகாவிஷ்ணுவின், கரத்தில் இருக்கும் வில்லின் (சார்ங்கம்) அம்சமாக வணங்கப்படுகிறார்.
ஒருசமயம் காஞ்சி மகாபெரியவரிடம் ஒரு அன்பர் கேட்டார், 'நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் படித்த பலனை எப்படிப் பெறுவது?' என்றாராம். அதற்கு மகாபெரியவர், 'திருமங்கையாழ்வார் அருளிச் செய்த இந்த பாசுரத்தை தினமும் கூறி வந்தாலே போதும். முழு பலனையும் பெற்று விடலாம். அதுமட்டுமல்ல, மரணத் தருவாயில் இருக்கும் ஒருவரின் செவிகளில் இந்த பாசுரத்தை கூறினால் அவருக்கு மோட்ச ப்ராப்தி கிட்டும்’ என்றும் கூறினாராம்.
’குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’
நித்தியமும் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இன்பமும் வீடும் பேரும் அடைவோம்!