

நாளை (டிசம்பர் 14-ம்தேதி) அன்று உங்களது கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றக்கூடிய தேய்பிறை தசமி வருகிறது. அதுமட்டுமின்றி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. சூரிய பகவானுக்கு உகந்த இந்த நாளில் மறக்காமல் சூரிய நமஸ்காரம் பண்ணுங்க. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருள் விலகி அந்த சூரியன் போல உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். அதிகாலையில் குளித்து விட்டு சுத்தமான தண்ணீரை சூரியனுக்கு ஆர்க்கியம் விடுங்க. மனசுக்குள் ‘ஓம் சூரியாய நமஹ’ என்று 108 முறை சொல்லுங்க. இதனால் கண் திருஷ்டி நீங்கும். உடல் ஆரோக்கியம் கூடும். நீங்க நினைத்த காரியம் வெற்றியடையும்.
கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும் என்று நம்பப்படுகிறது. இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் அமைந்துள்ள திருக்குளம் குப்தகங்கை என அழைக்கப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
அந்த வகையில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அன்று (டிசம்பர் 14-ம்தேதி) ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் நடைபெறும் தீர்த்தவாரி மிகவும் விசேஷமானது. இந்த நாளில் குப்த கங்கையில் நீராடி, வாஞ்சிநாதரை வணங்குவது பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட சகல பாவங்களையும் போக்கக்கூடியது என்றும், பிதுர்களுக்குரிய சடங்குகளை செய்வதன் மூலம் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. காசியில் அஸ்தியை கரைப்பதால் கிடைக்கும் பலன், இங்கு இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவதன் மூலமே கிடைக்கிறது என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
அதன் பின்னர் அன்றைய தினம் காலையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தில் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக்கொடுங்கள்.
பொதுவாக தசமி என்பது குலதெய்வ வழிபாட்டுக்கு உரிய நாளாக இருந்தாலும், இந்து மரபின்படி சிவபெருமான் அனைத்து திதிகளுக்கும் நாட்களுக்கும் காலங்களுக்கும் மூலமானவர்.
ஆகையால் எந்த ஒரு திதியிலும் எந்த நேரத்திலும் சிவபெருமானை மனமுருகி வழிபடுவது மிகுந்த நன்மையையும், அருளையும் தரும். அன்று சிவபெருமானுக்கு நடக்கும் பஞ்சாமிர்த அபிஷேகத்திற்கு தேவைப்படும் பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுத்தால் உங்களுக்கு எப்படிப்பட்ட கெட்ட நேரம் இருந்தாலும் அது நல்ல நேரமாக மாறும்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நரசிம்மரை வேண்டினால் மனம் மற்றும் உடல் தொடர்பான பிரச்சனைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, பில்லி, சூனியம், திருமண தடை, முன்னேற்றத்தில் தடை ஆகியவை தீரும். வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் நரசிம்மருக்கு துளசி படைத்து, அவரது 108 திருநாமங்களைச் சொல்லி வழிபடுவது இன்னும் சிறப்பானதாகும்.
அந்த வகையில் நாளை தினம் தசமி மற்றும் கார்த்திகை மாத கடைசி ஞாயிறும் சேர்ந்து வருவது சிறப்பு வாய்ந்த தினமாக கருதப்படுவதால் இந்த நாளில் மறக்காமல் சூரிய நமஸ்காரம், சிவன் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்வது எப்படிப்பட்ட தீராத துன்பத்தில் இருந்தாலும் அதிலிருந்து விடுபட உடனடியாக வழி பிறக்கும் என்று நம்பப்படுகிறது.