

பக்தர்களே மறந்தும் கூட இன்றைய (நவம்பர் 17-ம்தேதி) நாளை தவற விட்டு விடாதீர்கள். ஏனெனில் இன்று உங்களது தலையெழுத்தையே மாற்றக்கூடிய ராஜயோக பிரதோஷம் வருகிறது. இன்றைய தினம் சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் ராஜயோகம் நிச்சயமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
பொதுவாக திங்கட் கிழமைகளில் வரும் பிரதோஷத்தை சந்திர பிரதோஷம் அல்லது சோம பிரதோஷம் என்று அழைக்கிறார்கள். உலகம் முழுவதும் ஒளிவீசக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்தது, கார்த்திகை மாத திங்கட்கிழமை அன்றுதான், அதனால் இது 'சோமவாரம்' என அழைக்கப்படுகிறது. ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதங்களுக்குச் சமமான பலனை ஒரு சோம பிரதோஷ விரதம் தரும் என்று கூறப்படுகிறது.
இந்த நாள் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது சோம வாரமும் பிரதோஷமும் இணைந்து வருவதால், சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் கடைப்பிடித்து, சிவபெருமானை மனமுருக வழிபடுவது, சகல தோஷங்களையும் நீக்கி வாழ்வில் இன்பம் பெற உதவும் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமின்றி இன்றைய சோமபிரதோஷ நேரத்தின் ஜாதக அமைப்பின் படி குருவும் செவ்வாயும் இணைவதால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இது ஒரு அரிய ராஜயோகமாகும். இந்த யோக நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் தொழிலில் உயர்வை அடைவார்கள், செல்வம் மற்றும் நிலபுலன்கள் சேரும், மேலும் வலிமை, ஆற்றல் மற்றும் சுய கௌரவம் அதிகரிக்கும்.
அதேபோல் இன்றைய தினம் கார்த்திகை மாத சோம பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுகிறது. கார்த்திகை மாத சோம பிரதோஷம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமையும் (சோமவாரம்) பிரதோஷமும் ஒரே நாளில் வருவதைக் குறிக்கிறது. இன்றைய தினம் சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் பல மடங்கு பலனைத் தரும் என நம்பப்படுகிறது.
பொதுவாக பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள் சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணியப் பலனை வழங்கும்.
இன்று சிவபெருமானுக்கும், நந்திக்கும் பால், தயிர், நெய், தேன் போன்ற உங்களால் முடிந்த பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். அதன் பின் சிவபெருமானுக்கு வில்வம் சாத்தி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று நந்தி தேவரின் காதில் உங்கள் வேண்டுதலை மூன்று முறை சொல்லுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள தடைகள், கர்ம வினைகள் அனைத்தும் விலகி ராஜயோகத்தின் பலனை முழுமையாக அடையலாம்.
அதேபோல் கார்த்திகை சோம வார பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு வில்வத்தினால் அர்ச்சனை செய்தும், ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னியிலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கு இடையில் வைத்து அர்ப்பணித்து விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.
பச்சரிசி, பயத்தம் பருப்பை நன்றாக கழுவி தண்ணீரில் 2 மணிநேரம் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு இதில் வெல்லம், தேங்காய் பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும்.
கார்த்திகை சோம பிரதோஷமான இன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு தூய ஆடை உடுத்தி காலை முதல் மாலை பிரதோஷ நேரம் (மாலை 4:30 முதல் 6:00 மணி வரை) முடியும் வரை விரதம் இருப்பது சிறப்பு. பிரதோஷ தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
கார்த்திகை சோம வார பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சந்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷம் போல கார்த்திகை சோம வார பிரதோஷமும் சனி பகவானின் தோஷத்தை நீக்கும் வல்லமை கொண்டது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். சந்திரனால் ஏற்படும் மனக்குழப்பங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
அதேபோல் கோவிலில் காணிக்கையாக எப்போதுமே உடைந்த அல்லது குறைபாடுள்ள பொருட்களை செலுத்தக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள்.