
சாஸ்தாவின் வரலாறு மிகவும் புனிதமானது, உத்தமமானது. சாஸ்தாவை நினைத்தவுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என புராணங்களும் கூறுகின்றன. நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் காருகுறிச்சி கிராமம் உள்ளது. பெருமையும் புகழும் நிறைந்த காருகுறிச்சியில் சிவகாமி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த ஊரின் தென் பகுதியில் கொழுந்தினா மலை விளங்குகிறது.
ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்ற சமயத்தில் ஒரு துண்டு விழுந்ததால் இம்மலையை கொழுந்து விழுந்து எழுந்த மாமலை என்பர். இந்த மலையில் மேற்கே பார்த்த முருகன் கோயில் உள்ளது. இங்கு பாலசுப்பிரமணியன் காட்சி தருகிறார். பழனிக்கு அடுத்தபடியாக மேற்கே பார்த்த முருகனை இங்கு தரிசிக்கலாம். இந்த மலையின் மேல் பகுதியில் வேங்கடாஜலபதி உள்ளார். தாமிரபரணி பாசனப் பகுதியில் கோடையில் இளைப்பாரி நிற்கும் குளிர் தரும் இன்பம் போல காருகுறிச்சியில் களக்கோடி தர்மசாஸ்தா எழுந்தருளியுள்ள இவரது கோயில் கல்கோட்டை போல உள்ளது.
ஒரு சமயம் வண்டி பாரத்துடன் களை செடிகளுடன் சாஸ்தாவின் சிலா வடிவம் இரவு இறக்கி வைக்கப்பட்டு, மறுநாள் மீண்டும் வண்டியில் ஏற்ற முடியாமல் போகவே சாஸ்தா அங்கேயே தங்குவதாக திருவுள்ளம் கொண்டதாக அறியப்பட்டு களைச்செடி கொடிகளுடன் வந்ததால் இந்த ஊருக்கு ‘களக்கோடி தர்ம சாஸ்தா’ எனப் பெயர் வந்தது.
கி.பி. 655ம் ஆண்டு ஆட்சி செய்த பூதல வீர உதய மார்த்தாண்டன். இந்த மன்னன் சாஸ்தாவின் கோயிலை கட்டியுள்ளார். 46 ஆண்டு காலம் ஆட்சி செய்த இம்மன்னன் களக்காடு வேளார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து அரண்மனைகளில் தங்கி காருக்குறிச்சி களக்கோடி சாஸ்தா கோயிலை கட்ட உத்தரவு பெற்றுள்ளார்.
தர்ம சாஸ்தாவின் ஆலயத்தின் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் உள்ளது. முன் மண்டபத்தில் சாஸ்தாவின் வாகனமான யானை உள்ளது. சிவசொரூபமாக இவர் காட்சி தருவதால் இங்கு நந்தியும் உள்ளது. கோயில் வளாகத்தில் நீர் கறை மாடன், நெல்லடியான் காளி, பேச்சி போன்ற பரிவார தெய்வங்களும் எழுந்தருளி உள்ளனர். மலையான்குளம் பாடக சாஸ்தா கோயில் காணப்படுவது போல இங்கும் பிரம்மாண்ட பூதகணம் பூதத்தார் காட்சி தருகிறார்.
இவரை இப்பகுதியினர் ‘ஆ’ என்றும் கூறுகின்றனர். கோயிலின் திருச்சுற்று பிராகாரம் வித்தியாசமாக உள்ளது. பிராகாரத்தை நாம் இடப்புறத்தில் இருந்து வலம் வந்தால் வலது புறம் வருவதற்குள் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு வந்தது போல இருக்கும். வாழ்க்கையின் அடித்தளத்தில் உள்ளவர்கள் கூட சாஸ்தாவை சுற்றி வந்து வணங்கினால் மேன்மை அடைந்து விடலாம் என்பதை திருச்சிற்று பிராகாரம் உணர்த்துகிறது. கோயில் முதல் மண்டபத்தில் காலபைரவர் காட்சி தருகிறார்.
மிகவும் பிரசித்தி பெற்ற இவரை 41 நாட்கள் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் எல்லாம் நடக்கும். உள் மண்டபத்தின் வலப்புறம் வீர மார்த்தாண்ட பிள்ளையார் காட்சி தருகிறார். இடது புறம் மகாதேவர் லிங்க ரூபத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் கருமேக நிற மேனியுடன் நெத்தியில் திலகம் ஒளி வீசும் கிரீடம், சுருள் சுருளான தலைமுடி, காதுகளில் சந்திர சூரியர் போல ஒளி பரப்பும் குண்டலங்கள் வலது கையில் நீலோத்பல மலருடன் இடது கையை தொங்கவிட்டுக் கொண்டும் இடது காலை மடித்தும் வலது காலை கீழே தொங்க விட்டுக் கொண்டும் தர்மசாஸ்தா விளங்குகிறார்.
இவர் அருகில் பூர்ணா புஷ்கலா போன்ற தேவியர்கள் இடம் பெறவில்லை. தனித்தே கம்பீரத்துடன் காட்சி தருகிறார். நெல்லை மாவட்டத்தில் சிறந்த வரப்பிரசாதியாக பூஜிக்கப்படும் சாஸ்தாக்களில் ஒருவராக விளங்கும் காருகுறிச்சி களக்கோடி தர்மசாஸ்தாவுக்கு பங்குனி உத்திர விசேஷம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இங்குள்ள நவகிரகங்கள் தங்களது வாகனத்துடன் எழுந்தருளியிருப்பது மட்டுமின்றி, தங்களது தேவியர்களுடன் எழுந்தருளி காட்சி தருவதே இதற்குக் காரணமாகும். ராகு தனது தேவியான ஸிம்ஹியுடனும், சனி ஜேஷ்டாவுடனும், கேது சித்திரலேகாவுடன், செவ்வாய் சுசீனியுடனும், சூரியன் உஷா பிரத்யுஷா ஆகிய தேவியர்களுடனும், குரு தனது சக்தியான தாரா தேவியுடனும், சந்திரன் ரோஹினி உடனும், சுக்கிரன் சுப கீர்த்தியுடன், புதன் தனது இளைய தேவியுடனும் காட்சி தருகின்றார். தீராத வியாதி, நாக தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவை நீங்கவும், பதவி உயர்வு, விவசாயம் பெருக, வியாபாரம் செழிக்க என இவரை நினைத்து வழிபடுபவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடைபெறுகிறது. ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடுகின்றன.
தர்ம சாஸ்தாவையும் தம்பதியுடன் கூடிய நவகிரகங்களையும் வணங்கி பால் பாயசமும் நிவேதித்து விநியோகம் செய்து சாஸ்தாவின் பூரண அருளைப் பெற்றால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும். வாழ்க்கையில் அனைத்துமே வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.