
பெருமாளின் தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. சித்திரை மாதம் சதுர்த்தசி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய புண்ய தினத்தில் பிரதோஷ காலத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். இவர் பிரதோஷ காலத்தில் அவதரித்ததால் ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் நரசிம்ம பூஜை, வழிபாடு செய்பவர்களும் உண்டு. பெருமாளின் நான்காவது அவதாரமாக அரக்கன் ஹிரண்யகசிபுவை அழிக்க பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் (சிங்க வடிவில்) தோன்றினார். நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன. அவரை கலா, மகாகலா மற்றும் பரகலா என்றும் அழைக்கிறார்கள்.
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிமர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் ஒன்பது முக்கியமான தோற்றங்கள் கோவில்களில் காணப்படுகின்றன. அநேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும் நரசிம்மருக்கு ஒரு சன்னதி அமைந்திருப்பதைக் காணலாம்.
பொதுவாக ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த அனைத்து அவதாரங்களும் அசுரர்களை அழித்து, தர்மத்தை காக்கவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து ரட்சிக்கவும் எடுத்தவையே ஆகும். ஆனால் இந்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய அவதாரமாக எல்லோராலும் போற்றப்படுவது திருமாலின் நான்காவது அவதாரமாகிய நரசிம்ம அவதாரம் ஆகும். ஏனென்றால் மற்ற அவதாரங்கள் அனைத்திலும் அவதாரம் எடுத்து சிறிது காலம் பொறுத்து, நேரம் காலம் பார்த்து, போர் செய்து அதற்கு பிறகு தான் தர்மம் நிலைநாட்டப்பட்டது, பக்தர்கள் காப்பாற்றப்பட்டனர்.
ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படியில்லை. நாளை என்பதே அறியாதவர் நரசிம்மர் என்பார்கள்.
தானே கடவுள் என்னும் கர்வத்துடன் இருந்தவன் இரண்யன். அவனுடைய ஐந்து வயது புதல்வவன் பிரகலாதன் சிறுவயது முதலே நாராயண பக்தனாக இருக்கிறான். அதனால் கோபமுற்று அவன் தந்தையாகிய இரண்யன் அவனை பலமுறை கொல்ல முயற்சி செய்து தோல்வி அடைகிறான்.
கடைசியாக "நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறார்? அவரை எனக்குக் காட்டு!" என்று புதல்வனிடம் கர்ஜிக்கிறான்.
"அவர் எங்கும் இருப்பார்! தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!" என்று பிரகலாதன் சொல்கிறான்.
இரண்யன் ஒரு தூணை சுட்டிக்காட்டி, "அந்த கடவுள் இந்தத் தூணில் இருப்பானா?" என்று கேட்க பிரகலாதன் "இருப்பார்" என்று சொல்கிறான். இரண்யன் அந்தத் தூணை தன் கதாயுதத்தால் பிளக்கும் நேரத்தில், அந்த நிமிடம், அந்த நொடியே தன் பக்தனை காப்பதற்காக அவன் சுட்டிக் காட்டிய தூணிலியே அவதாரம் எடுத்து எழுந்தருளியவர் நரசிம்ம பெருமாள்.
மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு ஆக்ரோஷமாக கர்ஜித்தவாறே பிரசன்னமானார். இரண்யன் வரம் பெற்றதைப் போலவே மனிதனும் இல்லாமல், மிருகமும் இல்லாத உருவம், மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல், இரவும் இல்லாமல் பகலும் இல்லாமல், ஆயுதம் இல்லாமல் வெறு கைகளாலேயே இரண்யனை வதம் செய்தார்.
நரசிம்மருக்கு மிகவும் பிடித்த பானகத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் மிக சிறந்த பலன்களை பெறலாம். மோட்சத்தையே சுலபமாகத் தரக்கூடிய ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, பக்தர்கள் வேண்டும் அனைத்து பலன்களையும் தாமதமின்றி உடனே அளிக்கக்கூடியவர். நரசிம்மர் வழிபாடு நம் அனைத்து துன்பங்களையும் நீக்கும் என்று பத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தன் பக்தனான பிரகலாதன் பிரார்த்தித்த நொடியே பிரசன்னமானதால் அவர் 'நாளையே இல்லாத நரசிம்மர்' என போற்றப்படுகிறார்.