

ஐப்பசி மாதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு காவிரியில் நீராடுவது துலா ஸ்நான வழிபாடாகும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், முனிவர் களும், மும்மூர்த்திகளும் காவிரியில் நீராடுவதாக துலாக் காவிரி புராணம் கூறுகிறது.
நதிகளில் கடைமுழுக்கு:
ஐப்பசி மாதத்தின் கடைசி நாள் 'கடைமுகம்' அல்லது 'கடைமுழுக்கு' என்று அழைக்கப்படுகிறது. இது துலா ஸ்நானம் எனப்படும் ஐப்பசி மாத புனித நீராடலின் நிறைவு நாளாகும். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கங்கை உள்ளிட்ட அனைத்துப் புனித நதிகளும் காவிரியில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். தலைக்காவிரி, மயிலாடுதுறை (காவிரி துலா கட்டம்), ஸ்ரீரங்கம், திருவையாறு, கும்பகோணம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல் போன்ற காவிரி கரையோரத் தலங்களில் கடைமுழுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து உற்சவர் மூர்த்திகள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி இந்த சமயத்தில் தீர்த்தவாரி கண்டருள்வார்கள்.
கடை முழுக்கு நாளில் புனித நீராடுவதால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். பித்ருக்களின் ஆசி மற்றும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள் இந்த ஒரு நாள் நீராடினால் முழு பலனையும் அடையலாம் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று கூறுவார்கள்.
இம்மாதத்தைப் புனிதமாகக் கருதி காவிரி ஆற்றில் புனித நீராட அக்னி புராணம் கூறுகிறது. மாயவரத்தில் துலா கட்டத்தில் கடைமுகத்தன்றோ, முடவன் முழுக்கன்றோ ஸ்நானம் செய்வது சிறந்த பலனை தரும் என்று துலா மகாத்மியமும் கூறுகின்றது.
முடவன் முழுக்கு:
கடை முழுக்குக்கு அடுத்த நாளான கார்த்திகை முதல் நாள் 'முடவன் முழுக்கு' என்று அனுசரிக்கப்படுகிறது. ஒரு முடவர் பக்தருக்காக கங்காதேவி கூடுதலாக ஒரு நாள் அங்கேயே தங்கியதாக வரலாறு கூறுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் கங்காதேவி உள்ளிட்ட சகல தீர்த்தங்களும் வசிப்பதாக ஐதீகம்.
புராணக் கதை:
சிறந்த சிவபக்தரான நாத சர்மா மற்றும் அவரது மனைவி அனவித்யாம்பிகை இருவரும் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு மாயவரம் துலா ஸ்நானம் செய்வதற்காக வருகின்றனர். மாலை நேரம் நெருங்கிவிட்டதால் ஸ்நானம் செய்ய இயலாமல் அங்குள்ள மண்டபத்தில் இரவு தங்கி தங்களால் துலா ஸ்நானம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று வருந்தி ஈசனை துதித்தனார்.
அதேபோல் மாற்றுத்திறனாளி ஒருவரும் (முடவன்) ஆசை இருந்தும் கால் ஊனமுற்றதால் நடக்க முடியாமல் தட்டு தடுமாறி வெகு நாட்களுக்கு முன்பே அவரது ஊரிலிருந்து கிளம்பி மாயவரம் வந்து சேரும் பொழுது துலா மாதம் முடிந்து இரவாகிவிட்டது.
இந்த மூவருமே துலா ஸ்நானம் கிடைக்காததால் மிகவும் வருத்தமுடன் இறைவனை பிரார்த்தனை செய்ய, ஈசனும் அசரீரியாக துலாஸ்நானம் முடிந்துவிட்டாலும் அவர்களுக்காக அடுத்த ஒரு நாளும் நீட்டித்து தருவதாகக் கூற அந்த நாளையே முடவன் முழுக்கு என்று கூறுகிறோம். அந்த மூவரும் கார்த்திகை முதல் நாள் அன்று காவிரிக்கரையில் ஸ்நானம் செய்து முக்தி பெற்றனர்.
தன்னுடைய பக்தர்களின் தூய பக்தியைக்கண்டு இரங்கிய கங்காதேவியும் அவர்கள் நீராடும் வரை கூடுதலாக ஒரு நாள் அங்கே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கார்த்திகை முதல்நாள் நடைபெறும் நீராடல் 'முடவன் முழுக்கு' என்று அழைக்கப்படுகிறது.
இன்றும் நாம் மாயவரம் சென்றால் மயூரநாதர் சுவாமி ஆலயத்தில் நாத சர்மா மற்றும் அனவித்யாம்பிகை தம்பதிகள் ஐக்கியமான சிவலிங்கங்களைக் காணலாம். அபயாம்பிகை சன்னதிக்கு தென்புறத்தில் அமைந்துள்ள இதில் அனவித்யாம்பிகை ஐக்கியமான லிங்கத்தின் மீது சேலை அணிவிக்கப்படுவது வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பாகும்.