
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள். இமயமலையின் கடுமையான வானிலை காரணமாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் இரண்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.
கேதார்நாத் கோவில்
உத்தராகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து சிவபெருமானை தரிசித்துச் செல்கின்றனர்.
இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குளிர்காலங்களைத் தவிர்த்து மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதாவது இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும். கடுமையான பனிப்பொழிவு காரணமாக கோவில் நவம்பர் முதல் மார்ச் வரை மூடப்படும். குளிர் காலங்களில் கோவிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், வரும் மே மாதம் 2-ம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோவில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோவிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவில் கருவறையில் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,584 மீட்டர் உயரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாலை வழியாக போகமுடியாது. கௌரிகுண்ட் என்னும் இடத்தில் இருந்து 14 கி.மீ. மலையேறி தான் இந்த கோவிலுக்கு செல்ல முடியும். 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவிலைச் சுற்றி இருக்கும் பகுதிகள் பெரும் சேதமடைந்தாலும், கோவில் வளாகத்திற்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.
பத்ரிநாத் கோவில்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவிவில் விஷ்ணு பிரதான கடவுளாகும். வைணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,100 மீட்டர் உயரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இமயமலைப் பகுதியில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே (ஏப்ரல் இறுதிக்கும் நவம்பர் தொடக்கத்திற்கும் இடையில்) திறந்திருக்கும். இதன்படி பத்ரிநாத் கோவில் வரும் மே மாதம் 4-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டில் வெறும் 2 மாதங்களில் 28 லட்சம் பேர் இந்த கோவிலுக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்கள் இரண்டிலும் ஜூன் மாதத்தில் 8 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு நாடு முழுவதிலுமிருந்தும் கலைஞர்கள் வந்த நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இந்த திருவிழாவை காண நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த இரு கோவில்களிலும் நடை திறந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் செய்த பின்னர் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
சார் தாம் என்பது இந்தியாவில் உள்ள நான்கு புனித இந்து தலங்களைக் குறிக்கிறது. கேதார்நாத் யாத்திரையின் போது கேதார்நாத் மட்டுமின்றி பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கும் பயணிக்கலாம். இந்த நான்கு புனித தலங்களும் புனித கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கேதார்நாத்தில் சிவன், பத்ரிநாத்தில் விஷ்ணு, கங்கோத்ரியில் கங்கை மற்றும் யமுனோத்ரியில் யமுனா தேவியை வழிபடலாம்.