சிவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கீழாம்பூர் வெங்கடேசப் பெருமாள் ஆலயம்
வடமொழியில் ‘சிநேகபுரி’ என்கிறழைக்கப்பட்ட ஊர்தான் ஆம்பூர். அதாவது அன்பு (சிநேகம்) + ஊர் = ஆம்பூர்!
அதனால், இந்த ஊரின் கிழக்குப் பகுதி கீழாம்பூர் என்றானது. இங்கே தெற்குத் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஆலகால விஷத்தைச் சிவபெருமான் உண்டார். இதனைக் கண்டு பதறிய நீளாதேவி, தன் கணவரின் தங்கையாகிய பார்வதியிடம் விவரம் சொல்ல, ஓடோடி வந்த பார்வதி, சிவபெருமானின் கழுத்துப் பகுதியைப் பிடிக்க, அவர் நீலகண்டரானார். அவ்வாறு நீளாதேவி உடனடியாகப் புறப்பட்ட காரணத்தால், இக்கோயிலில் வெங்கடேச பெருமாள், பூமிதேவி சிலைகளைவிட நீளாதேவி சற்று முன்னே அமைந்திருக்கிறார்.
இந்த ஆலயத்திற்கு வளர்பிறை சதுர்த்தியன்று ஹோமங்கள் செய்தால் கடன் தொல்லை நீங்கும். வேகமாகப் புறப்படும் தோரணையில் முன் வைத்த காலுடன் நிற்கும் நீளாதேவியை வழிபட்டால் குபேர யோகம் உண்டாகும். அனைத்து நோய்களும் எளிதாக நீங்கும்; கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை இருந்தாலோ அல்லது விவாகரத்துவரை செல்லும் வழக்காக இருந்தாலோ, இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், இல்லறம் நல்லறமாகும்.
அர்த்த மண்டபத்தில், பூமிதேவி-நீளாதேவியுடன் உற்சவ மூர்த்தியாகவும் தரிசனம் தருகிறார் பெருமாள். மணிமண்டபத்தின் வலப்புற தூணில் யோக நிலை ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மகா மண்டபத்தில் மூலவரை நோக்கியபடி கருடாழ்வார் கொலுவீற்றிருக்கிறார்.
மன்னன் சுதர்சன பாண்டியன், பிள்ளைப் பேறு இல்லாமல் பலகாலம் வேதனைப்பட்டான். அவன் ஆம்பூருக்கு அருகே உள்ள சிவசைலம் பதிக்கு வந்து அஸ்வமேத யாகத்தை இயற்றினான். அவனுடைய பக்தியின் ஆழத்தை சோதிக்க விரும்பிய ஈசன், மகன் சுப்ரமணியரை அனுப்பி, மன்னனின் அச்வமேத யாகக் குதிரையைக் கட்டச் சொன்னார். சுப்ரமணியரும் அவ்வாறே செய்ய, வெகுண்டான் மன்னன். யாகம் முழுமை பெறாமல் போய்விடுமோ என்று பதைபதைத்தான்.
ஆகவே, கோபத்துடன் சுப்ரமணியருடன் போரிட முன் வந்தான். அவரும் அவனை எதிர்கொண்டார். தான் போரிடுவது தெய்வாம்சத்துடன்தான் என்பதை உடனே புரிந்துகொண்டான் மன்னன். அதே சமயம் ஒரு பேரொளி தோன்றி ஆசியளித்தது. அது ஈசனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்துகொண்ட பாண்டியன், சிவசைலநாதரையும், சுப்ரமண்யரையும் உளமாற வணங்கினான். அவர்களிடம் ஆசி பெற்று, கீழாம்பூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்தான்.
சிவ-வைணவ ஒற்றுமைக்கு இந்தத் தலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சுதர்ஸன பாண்டியன் சிவசைலநாதரிடம் அருள் பெற்று, பின்னர் பெருமாளிடம் தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்துகொண்டதை நினைவுபடுத்தும் வகையில், உற்சவர் சிவசைலநாதர் கீழாம்பூருக்கு வரும்போது, வடக்கு மற்றும் தெற்குத் தெருக்களில் உள்ள இரண்டு பெருமாள் கோயில்களிலும் அவருக்கு அனைத்து விதமான மரியாதைகளும் செய்யப்படுகின்றன.
கீழாம்பூருடன் உறவுத் தொடர்புடையது சிவசைலநாதர் ஆலயம். இங்கே ஈசன், அன்னை பரமகல்யாணியுடன் காட்சி தருகிறார். கீழாம்பூரில் வடக்குத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு, அசரீரி வாக்குப்படி சிவசைலத்தில் அம்பாளாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அன்னை. ஆம்பூர்-ஆழ்வார்குறிச்சி மக்கள் கொண்டாடும் தெய்வமான சிவசைல நாதர், தன் மனைவி பரமகல்யாணியுடன் ‘மறுவீடு’ சம்பிரதாயத்துக்காக கீழாம்பூருக்கு வரும் வைபவம் (ஒவ்வொரு வருடமும் மே மாதம்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள் ஊருக்கு வருகை புரிந்து ஊர் பவனி வந்து, முதன் முதலில் தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில் (தன் அண்ணன் வீட்டில்!) இளைப்பாற்றிக் கொள்கிறார் அம்பாள். நைவேத்தியம், தீபாராதனைகளை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வடக்குத் தெரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கே பல அபிஷேகங்களைக் கண்டு, இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு மூன்றாம் நாள் காலை தன் நாதருடன் சிவசைலம் சென்றடைவார், கீழாம்பூர் மகளான பரமகல்யாணி!
சிவசைலநாதரும் வெங்கடேசப் பெருமாளும் இணைந்து அருள்பாலிக்கும் இந்த அற்புதத் தலம், தென்காசி-அம்பாசமுத்திரம் பேருந்து மார்க்கத்தில் (ரயில் மார்க்கத்திலும்) ஆழ்வார்குறிச்சிக்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது.