தமிழுலகில் முத்தான கீர்த்தனம் மற்றும் குரு மரபுகளுக்குத் தந்தையாகவும் விளங்கியவர் முத்துத்தாண்டவர். சோழநாட்டு சீர்காழியில் 1525ம் ஆண்டு பிறந்த இவர், தாண்டவர் என்கின்ற இயற்பெயரைக் கொண்டவர். தன்னுடைய இளமைக்காலத்தில் சூலை நோயால் சற்று சிரமப்பட்டாலும், தனது பரம்பரை சொத்தாகிய சிவ சிந்தனையிலிருந்து மாறாதவராய் தினமும் தோணியப்பரைக் கண்டு பாடுவதும் அவர் முன்பு ஆடுவதுமாக கோயிலிலேயே பல மணி நேரத்தை கழித்து வந்தார்.
இப்படி ஒரு நாள் இரவு வழிபாடு முடிந்த பின்னர் உணவு உண்ணாமலேயே கோயிலிலேயே உறங்கி விட்டார். இவர் கோயிலில் இருப்பதை அறியாத கோயில் பணியாளர்கள் அனைவரும் திருக்காப்பிட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இரவு விழித்துப் பார்த்த இவர், நிலைமையை உணர்ந்து இறைவன் திருமுன்பு திருமுறைகளைப் பாடி தியானம் செய்தார். அப்போது திருநிலை நாயகியம்மை திருக்கோயில் குருக்களின் மகளின் வடிவத்தில் அங்கு வந்து அவரது பசி போக்கினார். அதோடு, ‘அவரது சூலை நோய் குணமாக, தில்லையம்பலத்தில் ஆடும் இறைவனைத் தரிசிக்கும்படியும், அப்படித் தரிசிக்கும்போது அவரது மனதில் தோன்றும் சொல்லை வைத்து பாடும்படியும், அப்படிப் பாடினால் அவரது சூலை நோய் தீரும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.
பொழுது புலர்ந்தது. கோயில் கதவுகளை நீக்கி அர்ச்சகர்கள் தாண்டவரிடம் நடந்ததைக் கேட்டு வியந்து, ‘இறைவி திருக்கரத்தால் உணவு உண்ட நீர் இன்று முதல் முத்துத்தாண்டவர் என்று அழைக்கப்படுவீர்கள்’ என்று வாழ்த்தினர்.
அதன் பிறகு தில்லைக்குச் சென்று சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, திருநீறு பூசி ஆடல்வல்லானின் திருமுன்பு திருமுறைகளைப் பாடி கைகளால் கூப்பித் தொழுது கொண்டிருக்கிற நேரத்தில், அடியார் ஒருவர் ‘பூலோக கைலாசகிரி சிதம்பரம்’ என்று சொன்ன ஒரு தொடரை வைத்துக்கொண்டு, ‘பவப்பிரியா’ ராகத்தில் ‘பூலோக கைலாசகிரி சிதம்பரம் அல்லாமல் புவனத்தில் வேறும் உண்டோ’ என்ற கீர்த்தனையைப் பாடி, தனது சூலை நோயைப் போக்கிக் கொண்டார். அது மட்டுமின்றி, இறைவனிடத்திலே ஐந்து பொற்காசுகளையும் பெற்றார். இதுபோல் தினமும் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்க, அவர் பாடுவதும், இறைவன் கொடுப்பதுமாக நாட்கள் சென்றன.
மறுநாள், ‘சேவிக்க வேண்டும்’ என்ற குரல் அவரது காதில் விழுந்தது. அதைக் கேட்ட இவர், ஆபோகி ராகத்தில், ‘சேவிக்க வேண்டுமையா’ என்கின்ற கீர்த்தனத்தைப் பாடினார். இப்படிப் பல கீர்த்தனைகளை தில்லையம்பதியில் பாடிய பெருமை இவருக்கு உண்டு.
இது மட்டுமா? சைவ சித்தாந்த கருத்துகளை உள்ளடக்கியும் கீர்த்தனம் பாடினார் நம் முத்துத்தாண்டவர். அதற்கு ஒரு சான்றாக உள்ளது, ‘தன்னை அறிவதுவே உண்மையான மெய்ஞானம்’ என்ற கீர்த்தனம்.
ஒரு நாள் சீர்காழியிலிருந்து சிதம்பரம் நோக்கி வரும் வழியில் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது அங்கே ஜகன் மோகன ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த ‘காணாமல் இருந்தென் கலக்கம் தெளியாத’ என்று தொடங்குகிற கீர்த்தனையைப் பாடினார், இதன் மூலம் வெள்ளம் வடிந்தது.
சிதம்பரத்து இறைவனைக் கண்டு வழிபடுவதற்காக வருகிற வழியில் வசந்தா ராகத்தில் ‘தரிசனம் செய்வேன்’ என்கின்ற கீர்த்தனத்தைப் பாடினார் முத்துத்தாண்டவர். பிறகு தில்லையில் திருக்காட்சி கண்டதும் எல்லை இல்லாத ஆனந்தமடைந்து, ‘கண்ட பின் கண்கள் குளிர்ந்தேன்’ என்கின்ற கீர்த்தனத்தைப் பாடியருளினார்.
மற்றும் ஒருமுறை சிதம்பரம் செல்லும் வழியில் இவரைப் பாம்பு தீண்டி விட்டது. அப்போது ‘காம்போதி ராகத்தில் ‘அருமருந்து ஒரு தனி மருந்து’ என்று தொடங்குகிற அற்புத கீர்த்தனத்தைப் பாடி, தமிழிசையால் விஷத்தை முறிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
பல கீர்த்தனைகளையும் இசை பாடல்களையும் தமிழ் உலகத்திற்குத் தந்து இறைவன் திருப்பாதத்தில் ஜோதியாகக் கலந்தவர் முத்துத்தாண்டவர்.