இராவணன் ஏன் இன்றும் சில ஊர்களில் கடவுளாக வணங்கப்படுகிறார்?

 ravanan temple
king ravanan temple
Published on

ஹிந்து புராணங்களின்படி தீமையின் மொத்த உருவம் என்றால், அது இராவணன் என்பார்கள். அதர்மத்தின் அடையாளமாகவும் அசுரனாகவும் இருந்த அவனை கோயில் கட்டி தெய்வமாக வட இந்தியர்கள் வழிபடுவது ஏன் என்றுதெரியுமா?

வட இந்தியர்கள் இராவணனை வழிபடக் காரணம்:

அசுர கூட்டத்தில் இருந்த, புலஸ்திய முனிவர் வம்சவளியை சேர்ந்த இராவணன் மிகச்சிறந்த வேத விற்பன்னர். இராமர் இராவணனோடு போர் தொடுக்கும் முன்னர் சிவபெருமானுக்கு வேள்வி செய்ய விரும்பினார். இலங்கையில் இராவணன் தவிர வேதம் கற்றவர்கள் யாருமில்லை ராமரின் வெற்றிக்காக அந்தணராக வந்து இராவணன் வேள்வியை நடத்தி கொடுத்தார். அவர் ஒருபோதும் தனது அந்தணர் கடமையை விட்டுக்கொடுத்தது இல்லை.

ராவணன் மறையும் தருவாயில் இருக்கும்போது, ராமர் லட்சுமணனை அழைத்து, அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. நீ அவரை வணங்கி அறிவுரைப் பெற்றுக்கொள் என்று கூறினார். லட்சுமணனும் இராவணனை வணங்கி அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டார். இது இராவணனின் மென்மையை விளக்குவதாக இருக்கிறது.

தீவிர சிவபக்தன் இராவணன்:

இராவணன் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். புகழ்பெற்ற சிவ தாண்டவ ஸ்தோத்திரம் ராவணன் இயற்றியது தான். கயிலாய மலையில் தவமிருந்த இராவணன் பக்தி மிகுதியால் தனது ஒவ்வொரு தலையாக வெட்டி இறைவனுக்கு அர்ப்பணித்தார். ராவணன் பக்தி கண்டு மெச்சிய சிவபெருமான் வைத்தியராக மாறி அவனது அனைத்து தலைகளையும் ஓட்ட வைத்தார். தவத்தில் மகிழ்ந்து பல வரங்களையும், தெய்வீக சக்திகளையும், தெய்வீக வாளான சந்திரஹாசத்தையும் ராவணனுக்கு வழங்கினார். இராவணன் பெற்ற திவ்ய சக்திகள் காரணமாக அவரை கடவுளாக வணங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆசிர்வாதம் செய்ய ஏன் வலது கையை மட்டுமே பயன்படுத்துகிறோம்?
 ravanan temple

மஹா விஷ்ணுவின் வாயிற் காவலன்:

பாகவத புராணத்தில், வைகுண்டத்தின் வாயிற் காவலனாக இருக்கும் ஜெயன் ஒரு சாபத்தின் காரணமாக பூமியில் பல தீய பிறவிகள் எடுக்கிறான். ஆனால், ஒவ்வொரு முறையும் வதம் செய்யப்படுகிறான். அதில் ஒரு பிறவிதான் ராவணன். இறுதி வதத்திற்குப் பின் மீண்டும் வைகுண்டத்தின் காவலாளி ஆவான். இதனாலும் ராவணன் வழிபாடு சரி என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

மண்ணின் மைந்தன் இராவணன்:

இராவணன் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஷ்ரக் என்ற ஊரில் விஸ்வரசு என்ற முனிவருக்கும் கேகேசி என்ற அரக்கிக்கும் மகனாகப் பிறந்தான். உருவத்தில் இராவணன் அசுரனாக இருந்த போதும் தந்தை வழியில் படைப்பு கடவுள் பிரம்மனின் பெயரன் ஆவான். இராவணன் சிறு வயதில் பிறந்தது, வளர்ந்தது, விளையாடியாது எல்லாம் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்தான்.

ஜோத்பூர் அருகில் உள்ள மண்டூர் என்ற ஊரில்தான் இராவணனின் மனைவி மண்டோதரி பிறந்தாள். அதனால், அந்த ஊரில் தசரா திருவிழாவில் இராவணனை வதம் செய்வதை அவர்கள் கொண்டாடுவது இல்லை. இராவணன் - மண்டோதரி திருமணம் நடந்ததாக நம்பப்படும் மண்டபம் ஒன்று இந்த ஊரில் உள்ளது. இங்குள்ள ஶ்ரீ மாலி பிராமணர்கள் தங்களை இராவணன் வம்சாவளி என்று கூறுகின்றனர்.

முன்னோர் வழிபாடு:

ஹிந்து மதத்தில் போரில் அல்லது ஆயுதத்தால் கொல்லப்படுபவர்களை, அவர்கள் மனம் சாந்தியடைய வேண்டியும், அவர்கள் தங்களை பழிவாங்கக் கூடாது என்றும் வழிபட்டு அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்துவர். மதுரை வீரன் உள்ளிட்ட பல, பல குலதெய்வ மற்றும் முன்னோர் வழிபாடு இதை பின்பற்றியதுதான். ராவணனை முன்னோராக கருதும் வட இந்தியர்கள் அவரை கடவுளாக வழிபடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மங்கள சொற்களின் மகிமை: முன்னோர்கள் காட்டிய வாழ்வியல் ரகசியம்!
 ravanan temple

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இராவணனின் வம்சவளி என்று கூறிக்கொள்ளும் தேஜ், கன்னியாகுப்ஜ் மற்றும் கோண்டு பழங்குடியின மக்கள் ராவணனை வழிபாடு செய்கின்றனர். இவர்கள் ராம்லீலா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ராவணன் வீழ்த்தப்பட்ட நாளில் திதி கொடுக்கின்றனர். இவர்கள் முன்னோர் வழிபாட்டு முறையில் இராவணனை கடவுளாக வழிபடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com