
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்திருக்கிறது கோழிக்குத்தி ஸ்ரீவான முட்டி பெருமாள் திருக்கோயில். கிழக்கு நோக்கி எளிய கோபுரத்தினைக் கொண்டு சிறிய ஆலயமாக இது காணப்படுகிறது. இதன் விமானம் குடை போன்ற அமைப்புடைய சந்திர விமானமாகும்.
குடகு மலை சாரலில் தொழுநோய் பாதிப்பால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாது அந்த நோயாளி மனம் போனபோக்கில் நடக்கத் தொடங்கினான். அப்படிச் சென்று கொண்டிருந்த ஒரு நாளில் அவனது காதுகளில் தெய்வீக வீணை ஓசை கேட்டது. ஓசை வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாரத முனிவர். அவரை வணங்கி நின்றான் அந்தத் தொழு நோயாளி. இளம் வயதில் காடுகளில் பதுங்கி இருந்து வழிப்போக்கர்களை வழிமறித்து கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததன் விளைவு இந்த வியாதி என்று முனிவரிடம் அவன் கூறினான்.
அந்த நோயாளிக்காக மனம் இரங்கிய நாரதர், அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினமும் ஜபிக்கும்படி கூறினர். நோயாளியும் அப்படியே செய்து வந்தான். ஒரு நாள் அசரீரி ஒன்று ஒலித்தது. ‘உனக்குக் கடுமையான தோஷம் உள்ளது. அதை நீக்குவதற்கு காவிரிக் கரையில் காணப்படும் ஆலய திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்தத் தீர்த்தத்தில் உன் நோய் குணமாகிறதோ அங்கே உனது நீங்கி பாவம் விமோசனம் பெற்று முக்தி அடைவாய்’ என்றது.
இதனால் மனம் மகிழ்ந்த அந்த நோயாளி மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தான். காவிரிக்கரையில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று அங்கிருந்த திருக்குளங்களில் நீராடினான். அதன் ஒரு கட்டமாக மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு அருள்பாலிக்கும் மாணிக்க சகாயேஸ்வரரை மனமுருக வேண்டி நின்றான். அப்போது, ‘பக்தா, உனது துயர் நீங்கும் காலம் வந்து விட்டது. வடக்கே சற்றுத் தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன்னைப் பற்றி இருக்கும் பிணிகள் யாவும் நீங்கும்’ என்று ஒரு அசரீரி ஒலித்தது. அதன்படியே அந்த நோயாளி சென்று நீராடினான். அவனது பிணிகள் நீங்கி பொன்னிற மேனி கொண்டவனாக மாறினான். தன்னை அழகுடையவனாக மாற்றிய இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டான்.
ஓரிடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது. அந்த மரத்தில் சங்கு, சக்கரம், கதை அபய ஹஸ்தம் தாங்கி பெருமாள் அவனுக்குக் காட்சி அளித்தார். அவரது மார்பிலிருந்து ஒரு ஒளிப் பிழம்பானது விண்ணும் மண்ணும் நிரம்ப நின்றது. ‘‘பக்தா, பொன்னி நதியில் நீராடி நோயிலிருந்து விடுபட்ட உன்னை இனி ‘பிப்பிலர்’ என அனைவரும் அழைப்பர். நீ நீராடிய தீர்த்தம், ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என அழைக்கப்படும். இந்த காவிரி தீர்த்தக்கட்டத்தில் நீராடுபவர்களின் பிறவிப் பணி, மெய்ப்பிணி, பாவப் பணி அனைத்தும் நீங்கும்’ என அருளி மறைந்தார்.
பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் இத்தலம் நிவாரணம் செய்ததால் இத்தலம், ‘கோடிஹத்தி’ எனவும், ‘பாவ விமோசனபுரம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. இது கோடிஹத்தி என்ற பெயர் நாளடைவில் மருவி தற்போது இந்தத் தலம் கோழிக்குத்தி என்று விளங்குகிறது. இங்கு அருளும் பெருமாள் வானமுட்டி பெருமாள் என்று பெயர் பெற்றார்.
வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், கோழிக்குத்தி வந்தார். தனக்கு யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள வேண்டும் என வேண்டி நின்றார். பிப்பிலருக்கு அருளியது போல் சரபோஜி மகாராஜாவுக்கும் அத்தி மரத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் காட்சி தந்து அருளிய பெருமாள், மன்னனின் தோஷத்தையும் நீக்கினார். மன்னனின் மனதில் மகிழ்ச்சி உண்டாக, தான் கண்ட காட்சி அனைவரும் காண வேண்டுமென்று எண்ணினார். வானளாவிய பெருமானின் திருக்கோலத்தை அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தார். அவரையே மூலவராய்க் கொண்டு ஒரு ஆலயம் எழுப்பினார்.
கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தை கண்டு நாம் மெய் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி அருளுகிறார். இடது புறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்தி மரமே பெருமாளாக மாறி இருப்பதால் மரத்தின் வேரே திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் காண இயலாது.
மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இப்பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதரையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்.
இந்தத் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு சப்தஸ்வர ஆஞ்சனேயர் என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது ஏழு இடங்களில் தட்டினால் ‘சரிகமபதநி’ என்று சப்த ஸ்வரங்களும் வருகின்றன. மேலும், ஆஞ்சனேயர் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலை மீது தூக்கி வைத்துள்ளார். இந்த ஆஞ்சனேயரை வழிபட்டால் சனி தோஷம் விலகும். இத்தல பெருமாளை வேண்டினால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் மற்றும் சனி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகும்.