
சமண நெறிகளுள் ஒன்றான ஜைன நெறியைப் பின்பற்றும் ஜைனம் (Jainism) பிரிவினர் வீடு பேறு அடைவதற்காக உண்ணாநோன்பிருந்து உயிர் விடுவதை சல்லேகனை (Sallekhana) என்கின்றனர். இதனை, சாந்தாரா, சாமடி மரணம், சன்யாசன மரணம் என்றும் சொல்வதுண்டு. சல்லேகனை என்ற சொல்லின் பொருள் மெலிந்து போதல் என்பதாகும். இந்த உறுதி எடுத்தவர்கள் படிப்படியாக உணவு மற்றும் நீர் உட்கொள்வதைக் குறைத்து, உடல் மெலிந்து அதன் வழியாக அவர்கள் தங்களின் உயிரைத் துறப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
ஜைன துறவிகளாக இருப்பவர்கள் சல்லேகனை மூலம் உயிர் துறக்கின்றனர். துறவி அல்லாத சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களும் சல்லேகனை செய்ய இச்சமயம் அனுமதிக்கிறது. அதாவது, முதுமை, தீரா நோய் அல்லது வாழ விருப்பமற்றவர்களும் இதை மேற்கொள்கின்றனர். ஜைன சமூகத்தினர் மத்தியில் சல்லேகனை என்பது மிகவும் மரியாதைக்குரிய செயலாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 250 முதல் 500 பேர் வரை சல்லேகனை மேற்கொண்டு உயிர் துறக்கின்றனர் என்கின்றனர். ஒருவர் சல்லேகனை சடங்கில் இறங்கினால், அது பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, அனைவரையும் வந்து இறப்பைத் தரிசிக்க அழைக்கிறார்கள். சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் மந்திரங்கள் ஓதியபடி பார்த்திருக்க, இந்த மரணங்கள் நிகழ்கின்றன.
ஜைன நூல்களில், சல்லேகனை அகிம்சை நடவடிக்கை எனவும், இவ்வாறு இறந்துபோவதை தற்கொலை என்பது சரியல்ல என்று ஜைனர்கள் நம்புகின்றனர். இதனை வாமன முனிவர் ‘நீலகேசி’ எனும் நூலில் பதிவு செய்துள்ளார். ஜைன சமயத்தவர் சல்லேகனை செய்திட பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
1. சல்லேகனை செய்ய தர்பைப் புல்லின் மீது வடக்கு நோக்கி அமர வேண்டும். அவ்வாறு அமர்ந்து சாகின்ற வரை உணவினை எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இருப்பினும் நீரினை உட்கொள்ளலாம்.
2. இந்தச் சடங்கில் இறங்குவோர் முதலில் திட உணவை மறுத்து, பால் மட்டும் அருந்துவார்கள். பின்னர் பாலையும் நிறுத்தி முழுப் பட்டினியாகக் கிடந்து, உடல் மெலிந்து, ஆசைகள் மெலிந்து, பாவ எண்ணங்கள் மெலிந்து என அனைத்தையும் மெலிய வைத்து இறுதியில் உடம்பிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது, அதாவது இறந்து போவதுதான் இந்தச் சடங்கின் நோக்கம்.
3. சல்லேகனையை மேற்கொள்ளும்போது அருகரையும், தீர்த்தங்கரர்களையும் நினைத்து தியானம் மேற்கொள்ள வேண்டும். வேறு எந்த நினைவுகளையும் கொள்ளுதல் கூடாது. அடுத்த பிறவியில் தேவராகப் பிறத்தல், பெரும் செல்வந்தனாகப் பிறக்க வேண்டுமென்கிற எண்ணங்கள் இருக்கக் கூடாது.
4. சல்லேகனை செய்யும்போது, தனக்கு விரைந்து உயிர் போக வேண்டும் என்றும் எண்ணுதலும் கூடாது எனும் நான்கு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜைன சமயத்தின் பெரியவர்கள் வடக்கே வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதால், அச்சமயத்தினைச் சார்ந்தவர்கள் வடக்கு திசையை புண்ணியத் திசை என்று கருதி, சல்லேகனையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருப்பதால், இந்தச் செயலைக் கடைப்பிடிக்கும் பிற சமயத்தவர்கள் வடக்கிருத்தல் என்று அழைத்துள்ளனர். தமிழகத்தில் பரவலாக இருந்த வடக்கிருத்தல் எனும் உயிர் துறப்பு நிகழ்வு, ஜைன சமயத்தின் சல்லேகனையிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டுமென்கிற கருத்தும் உள்ளது.
‘ஜைன நெறியினரின் சல்லேகனை வழியிலான உயிர் துறப்பு தற்கொலைக்குச் சமமானது’ என பௌத்த சமயம் சாடுகிறது. இதனை பௌத்த காவியமான குண்டலகேசி பதிவு செய்துள்ளது. 2015ம் ஆண்டு இராஜஸ்தான் உயர்நீதி மன்றம் இச்செயலை ஒரு தற்கொலை செயல் என்று தடை செய்தது. இதற்கு ஜைனர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை நிறுத்தி வைத்து தடையை நீக்கியது என்பது கவனிக்கத்தக்கது.