
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லம்கோட்டில் உள்ள பத்ரகாளி கோவில் மிகவும் பிரபலமான சக்தி ஆலயமாகும். இந்த கோவிவில் உள்ள குழந்தைகளைக் காக்கும் தெய்வமான கொல்லங்கோட்டம்மனை பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி வழிபாடு செய்கின்றனர். இங்குள்ள ஸ்ரீ பத்ரகாளி தேவி, சக்தியின் இரட்டை வடிவமாக, பத்ரா மற்றும் காளியாகத் தோன்றியதாக நம்பப்பட்டாலும், பக்தர்கள் அன்னை துர்க்கையின் ஒருங்கிணைந்த வடிவத்திலிருந்து ஆசீர்வதிப்பதாக நம்புகின்றனர். இந்த தெய்வங்கள் அரை வட்ட வடிவ ‘முடிகளில்’ (தேவியின் செயற்கை சிலை) வசிக்கின்றன, அவை பலா மரத்தால் செதுக்கப்பட்ட பாம்பு தொப்பி அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினர், இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அப்படி வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், குழந்தைகள் நோய் நொடிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக, இந்த கோவிலில் நடக்கும் தூக்க நேர்ச்சை திருவிழாவில் பங்கேற்கிறார்கள்.
அதாவது வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் திருவிழாவுக்கு அழைத்து வந்து ‘தூக்க நேர்ச்சை’ செலுத்துவது வழக்கம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு 3 வயது நிறைவடையும் முன்பாக தூக்க நேர்ச்சையில் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம். கொல்லம்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் (மார்ச்-ஏப்ரல்) பரணி நட்சத்திர நாளில் நடைபெறும். இந்த திருவிழா இந்தாண்டு ஏப்ரல் 1-ம்தேதி நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாவில் இந்தியா முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் சிறப்பு பூஜைகள், வண்ணமயமான ஊர்வலங்கள், காவடி மற்றும் காவடியாட்டம், வண்டியோட்டம், பக்தி இசை நிகழ்ச்சிகள், ஓட்டம் துள்ளல், கதகளி, ஹரிகதா போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 9-வது நாள் திருவிழாவில் ‘தூக்க நேர்ச்சை’ நடைபெறும். தூக்க நேர்ச்சையில் பங்கேற்கும் தூக்கக்காரர்கள் 10 நாட்களும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதம் இருந்து காப்பு கட்டி திருவிழா முடியும் வரை கோவிலில் தங்கி இருப்பார்கள்.
மரத்தாலான ஒரு வண்டியில், சுமார் 20 அடி உயரமுள்ள இரு மரத்தடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மரத்தடிகளை 20 அடி உயரத்துக்கு மேலே தூக்கி, கீழே இறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மரத்தடிகளின் உச்சியில் உள்ள மரச்சட்டங்களில் நான்கு தூக்க காரர்கள் தொங்கிக் கொண்டு, (4 பேரையும் விழாமல் இருக்க துணியால் கட்டி இருப்பார்கள்) தலா ஒரு குழந்தையை கையில் ஏந்திக்கொள்வார்கள்.
பின்னர் கோவிலைச் சுற்றி இந்த வண்டியைத் தேர் போல பக்தர்கள் இழுத்து வருவார்கள். அதன் பின்னர் அடுத்த நான்கு குழந்தைகளுடன், வேறு நான்கு தூக்க காரர்கள் இந்த மரத்தடியில் தொங்கிக் கொள்ள, வண்டி இழுத்து வரப்படும். இவ்வாறு ‘தூக்க நேர்ச்சை’ வழிபாடு அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் 2000க்கும் மேற்பட்ட தூக்க நேர்ச்சைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.