
நீர்க்குமிழிகள் இணைந்தார் போல் காட்சி தரும் சுயம்பு ஸ்படிக லிங்கம்; அதில் ஒரு குமிழியில் சந்திரனின் கலைகளுக்கேற்ப ஒளி மாறும் அற்புதம்; இந்த லிங்கம் இருக்கும் கோவில் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் மகாதேவ் மந்திர், தோல்கா, அகமதாபாத் மாவட்டம், குஜராத்.
தனித்துவமான ஸ்படிகத்தால் இயற்கையான நீர்க்குமிழி வடிவ இந்த சுயம்பு சிவலிங்கம் பர்போதீய மகாதேவ் என்றும் நாக்நாத் மகாதேவ் என்றும் அழைக்கப்படுகிறது.
சந்திரனின் நிலைகளுக்கு ஏற்ப நாள்தோறும் ஒளி மாறுதல் ஏற்படும் தன்மை இந்த சிவலிங்கத்தில் உள்ள ஒரு குமிழில் உள்ளது வியப்பினை ஏற்படுத்துகிறது.
பாண்டவர்கள் தங்கள் அஞ்சாதவாசத்தின் போது இங்கு சிவப் பரம்பொருளை வழிபட்டதாகவும் தோல்காவின் பண்டைய பெயரான விராட் நகரில் வாழ்ந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த கோவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானதாக விளங்குகிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வதோதராவின் சாயாஜி ராவ் கெய்க்வாட் என்பவரால் புனரமைக்கப்பட்ட கோவில், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அற்புதமாக காட்சியளிக்கிறது. இறைவன் உள்ளூர் மக்களால் பர்போதீய மகாதேவ் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த சிவலிங்கம் மிகவும் தனித்துவமானது. சிவலிங்கத்தின் குமிழ்களின் சரியான எண்ணிக்கையை ஒரு போதும் பெற முடியாது. ஒவ்வொரு முறை எண்ணும் போதும் வெவ்வேறு எண்களை பெறுவீர்கள். இயற்கையான ஸ்படிகத்தின் உருவாக்கத்திற்கு பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும். இவ்வாறு இயற்கை ஸ்படிக சிவலிங்கம் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை.
இந்த சிவலிங்கத்தின் நடுவில் சந்திர தரிசனம் செய்யலாம். பௌர்ணமி முதல் அமாவாசை வரை இந்த சந்திர தரிசனம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மாறும். இந்த சந்திர தரிசனம் அமாவாசை மற்றும் சிராவண மாதம் முழுவதும் மறைந்து விடும்; மற்றும் சிவலிங்கத்தின் வெள்ளைப்பகுதி கருப்பாக மாறும். ஆழ்ந்து கவனித்தால் பௌர்ணமி மற்றும் அமாவாசையின் போது சிவலிங்கத்தின் மீது சிவபெருமானின் ஓம் வடிவை காணலாம்.
ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் மகாதேவ் அல்லது பர்போதீய மகாதேவ் கோவில் குஜராத்தின் தோல்காவில் உள்ள சரஸ்வதி பள்ளிக்கு அருகில் விலாஜ்பூரில் உள்ள காளிகுண்ட் சாலையில் அமைந்துள்ளது. இது தோல்காவில் உள்ள மிகவும் பிரபலமான மகாதேவ் கோவிலாகும்.