
திருநங்கைகள் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைகின்ற ஒரு விழாவே கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கும் தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் திருக்கோவில் தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம், திருவெண்ணெய் நல்லூர், கண்டாச்சிபுரம், பாண்டிச்சேரி, மடுகரை, சிதம்பரம், தேவனாம்பட்டினம் மற்றும் வானூர் வட்டம் தைலாபுரம் போன்ற பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில்கள் இருந்தாலும், கள்ளக்குறிச்சியில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தான் மிகவும் புகழ்பெற்றது.
ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்தியாவில், தமிழகம் மட்டுமின்றி கொல்கத்தா, மும்பை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் வந்து குவிந்து விடுவார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் திருநங்கைகளை சந்திக்கவும், அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்கள் கலைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமைகிறது என்றே சொல்லலாம்.
சித்திரா பௌர்ணமியன்று திருநங்கைகள் மணப்பெண் போல் தங்களை அலங்காரம் செய்து, கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்வார்கள். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். பொழுது விடிந்ததும் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோவிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அழுகளம் கொண்டு செல்லப்படுகிறான். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர்.
அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலியை அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை அணிந்து விதவைக் கோலத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். இத்துடன் இந்தாண்டுக்கான திருவிழா முடிவுறும்.
அவ்வகையில் இவ்வளவு சிறப்புகள் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்வுடன் தொடங்குகிறது.
திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி மே 13-ந்தேதியும், 14-ந்தேதி சித்திரை தேரோட்டமும் (அரவான் தேரோட்டம்), 15-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகமும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடப்பதால் கூவாகம் சுற்று வட்ட கிராம மக்கள் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவது குறிப்பிடத்தக்கது.