க்ருஷ்ண பக்தன் (ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கதை)!
இரவு மணி 11.30 அவர்கள் மூவரும் மும்முரமாகக் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மூவரில் ஒருவரிடைய வயது மற்ற இரண்டு பேர்களுடைய மொத்த வயததைவிட அதிகமானது.
“லெட் அஸ் ஸீ தி என்ட்ரீஸ் கய்ஸ்” முரளி ஒரு சின்னத்தைத் தட்டினார். கட கட வென்று கணக்கியல் உள்ளீடுகள் (அக்கவுண்டிங் என்ட்ரீஸ்) ஸ்கிரீனில் வந்தன.
தமிழ் கிட்டத்தட்ட இருக்கையிலிருந்து குதித்தான். “சார், நீங்க ஜீனியஸ்!”
நீனா வீசிலடித்தாள் “சார் எஸ்.ஏ.பி. (SAP) மன்னர் நீங்கதான்”
முரளி சிரித்தார் “என்ன மாதிரி உங்களுக்கும் 25 வருஷ அனுபவம் வந்ததும் நீங்களும் ஜீனியஸ் ஆயிடுவீங்க”
“இல்ல சார். உங்க லெவல் வேற” மற்ற இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“சரி, இன்னிக்கிக் கடையை மூடுவோம். நாளைக்கு கிளையண்ட் ப்ரசன்டேஷன் இருக்கு. காலைல 8 மணிக்கு. பி ப்ரிப்பேர்ட்.”
“குட் நைட் சார் “
அவர் சொல்வதற்கு முன்னாலேயே தமிழ் “நீனாவை அவங்க வீட்டுல டிராப் பண்ணிடுவேன் சார்” என்று கூறிவிட்டு அவளைக் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
முரளி வீட்டை அடைந்தபோது மணி 12.15 எதிர்பார்த்தபடி அப்பா லிவிங் ரூமில் உட்காரந்திருந்தார்.
“அம்மா தூங்கிட்டங்களா?”
“எப்பவோ.”அப்பா சொன்னார், ”நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தின்னு கொஞ்சம் பலகாரம் செஞ்சா, ரொம்ப பிஸி. அதுனால டயர்டா ஆயிட்டு 8 மணிக்கே தூங்கிட்டா. ஒனக்கு டின்னர் ஆயிடுச்சா?”
“ஆமாம்ப்பா. நாளைக்கு ஒரு டெலிவரபிள். அதான் லேட்”
“குட் நைட் பா”
அப்பாவும் பிள்ளையும் உறங்கச் சென்றனர்.
முரளி ஒரே பிள்ளை. அப்பா ஒரு பெரிய ஃபார்மா கம்பனியில் ஸேல்ஸ் மேனேஜராயிருந்து ஓய்வு பெற்றவர். அனைவராலும் விரும்பப்படும் டைப். அம்மா நேர் எதிர். அவளுடைய கூடப்பிறந்தவர்களே “இவ ஒரு தலைக் கன கேஸ்” என்று சொல்லும் அளவுக்குக் கம்மியாகப் பேசுபவள். அபாரக் கிருஷ்ண பக்தை.
முரளி எஸ்.ஏ.பி. ஃபைனான்ஷியல் கன்ஸல்ட்டன்ட். எஸ்.ஏ.பி. நிபுணர்களின் வட்டாரத்தில் தனிப் பெயர் பெற்றவர். 'வேலைப் பைத்தியம்'. 25 வயதில் கல்யாணம். 30 வயதில் மனைவி போய்விட்டாள். அவருக்கு திரும்பவும் மணம் செய்துகொள்ள மனம் இல்லை. வயதான பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டிருந்தார்.
மொபைலில் வாட்ஸ்ஆப் மெசேஜ் எழுந்தது. அவருடைய அமெரிக்க நண்பர் மைக். “ஹாய் முரளி, கேன் ஐ கால்? ஒரு மைனர் ப்ராப்ளம் இன் காஸ்டிங் கான்ஃபிக்.”
ஒரு மணி நேரம் கழித்து “தாங்க்ஸ் எ டன் முரளி” என்ற நன்றியுடன் மைக் முடித்ததும், முரளி படுக்கச் சென்றார்.
அடுத்த நாள்.
“முரளி, இன்னிக்கி கிருஷ்ண ஜெயந்தி. சீக்கரம் வந்துடு. கோயிலுக்குப் போகணும்.” அம்மா சொன்னதைக் காதுதான் கேட்டது. மனது முழவதும் க்ளையண்ட் ப்ரசன்டேஷனில் இருந்தது.
“ஓகே மா. 7 மணிக்கு வந்துருவேன்”
ஆஃபிஸ் நுழைந்ததும் அவரை நேராகத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார் ஜி.எம்.ப்ரேம்நாத்.
“நேத்து எப்போ முடிச்சீங்க முரளி?”
“அரௌண்ட் 11.30”
“ஆஸ் யூஷுவல் க்ரேட் ஜாப். ஓங்களுக்கு இன்னும் ரெண்டு பெரிய பக்தர்கள் சேர்ந்துட்டாங்க – தமில் அண்ட் நீனா. நீங்க பெரிய இன்ஸ்பிரேஷன் முரளி”
“தேங்ஸ் ப்ரேம். ரெண்டு பேருக்கும் நல்ல பொட்டென்ஷியல் இருக்கு.”
வெளியே வந்தார்.
“குட் மார்னிங் சார்” இரண்டு பக்தர்களும் நின்றிருந்தார்கள்.
“சார்” தமிழ் சொன்னான் “உங்களால எப்படி சார் இவ்ளோ ஹார்டா வொர்க் பண்ண முடியுது?"
“ஆமாம் சார்” நீனாவும் சேர்ந்து கொண்டாள்.
அவர் சிரித்தார். “ஒண்ணும் பெரிய விஷயமில்ல. நா வொர்க் பண்ற போது என்ஜாய் பண்றேன். அதுனால நா டயாரட் ஆரதில்ல, போர் ஆரதில்ல”
“முரளி ஒரு முனிவர்" அறையை விட்டு வெளியே வந்த ப்ரேம்நாத் சொன்னார். "அவரைப் பத்தி பேசணும்னா சில மணி நேரமாவது வேணும். பட் இப்போ ப்ரசன்டேஷன்ல மனச செலுத்துவோம். லெட்ஸ் கோ.”
ப்ரசன்டேஷன் மிக நன்றாக நடந்து முடிந்தது. தொடர்ந்து அன்றைய மற்ற அலுவல்கள். நாள் சென்றதே தெரியவில்லை.
முரளி வீடு திரும்பும்போது சரியாக மணி 7.30.
“ஏண்டா, இன்னிக்கும் நேரத்துக்கு வர முடியலியா?” அப்பா அலுத்துக்கொண்டார். “கோயிலுக்குப் போணும்னு அம்மா எத்தன தடவ சொல்லியிருந்தா”
“சாரிப்பா, சாரிம்மா”
அம்மா பூஜையரையில் மும்முரமாக ஸ்லோக புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
“அப்படி என்னடா வேலை, நாள் முழுக்க, வருஷம் முழுக்க?” அப்பா விடவில்லை.
“வாட் டூ யூ கெட் ஔட் ஆஃப் இட்?”
முரளி பதில் சொல்லவில்லை.
பூஜை அறையை விட்டு வெளியே வந்த அம்மா அவர் கையில் சில வெல்ல சீடைகளைக் கொடுத்து விட்டுத் தன் புருஷனைப் பார்த்து சொன்னாள்,
“கர்மண் யேவா அதிகாரஸ் தே மா ஃபலேஷூ கதாசனா
மா கர்ம பல ஹேதுர் பூ மா தே ஸங்கோ ஸ்த்வகர்மணி “
இருவரும் புரியாமல் அவளைப் பார்த்தார்கள்.
“உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதன் பழங்களுக்கு ஒருபோதும் உரிமை இல்லை. செயலின் பலன்கள் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டாம்; உங்கள் பற்றுதல் செயலற்ற தன்மைக்காக இருக்க வேண்டாம்.”
முரளியை ஒரு முறை பெருமையாகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள் “இதைச் சொன்னது க்ருஷ்ண பகவான். பகவத் கீதைல.”
“சாரிம்மா, கோயிலுக்கு ஓங்களைக் கூட்டிட்டுப் போக முடியலை..”
“அத விடுடா. நீதான் பகவான் சொன்னதையே தெனமும் செய்யறியே! வா, லெட்ஸ் ஹாவ் டின்னர்.”