மார்கழி பல்வேறு விசேஷங்கள் நிறைந்த மாதம். இம்மாதத்தின் முதல் புதன்கிழமையன்று குருவாயூரப்பனுக்கு அவல் படைப்பது என்று ஒரு வழக்கம் அனுசரிக்கப்படுகிறது. குருவாயூரப்பன் கோயிலில் இந்த வழக்கம் உள்ளது. இந்த தினத்தில் தான் குசேலருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் அனுக்கிரகம் செய்தார். அன்று பக்தர்கள் இலையில் அவலுடன் அச்சு வெல்லத்தைக் கொண்டு வந்து குருவாயூரப்பனுக்கு படைப்பது வழக்கம்.
சாந்தீபனி முனிவரிடம் ஸ்ரீ கிருஷ்ணரும் சுதாமர் என்னும் இயற்பெயர் கொண்ட குசேலரும் இளம் வயதில் குருகுல வாசத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள். இதன் பிறகு இவர்கள் வாழ்க்கை முறை மாறி விட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் மன்னரானார். குசேலர், மனைவி சுசீலா, 27 குழந்தைகளுடன் மிகுந்த ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தார். அவர் இருக்கும் இடத்தில் பலர் துவாரகை மன்னர் கிருஷ்ணரின் வள்ளல் தன்மையைப் பற்றிப் பேசுவதைக் கேட்டு அவருக்கும் தனது பால்ய நண்பரைப் பார்த்து உதவி கேட்க வேண்டும் என்னும் அவா எழுகிறது.
ஒரு மன்னரைப் பார்க்கப் போகும்போது ஏதாவது கொண்டு போக வேண்டாமா? தனது மனைவி உழைப்பால் ஈட்டிய ஒரு பிடி அவலை ஒரு கந்தல் துணியில் முடிந்து கொண்டு மிகுந்த கூச்ச உணர்வுடன் துவாரகை அரண்மனைக்கு சென்றார் குசேலர். நுழைவாயிலில் குசேலர் இருப்பதை அறிந்த கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். குசேலருக்கு மிக்க அன்போடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய சிம்மாசனத்தில் அவரை உட்கார வைத்து அவருக்குப் பாத பூஜை செய்தார். ருக்மிணி அவருக்கு சாமரம் வீசுகிறாள்.
அங்கு அவருக்கு நடந்த விருந்து உபசாரத்திற்குப் பிறகு ஸ்ரீ கிருஷ்ணர், "நண்பா, எனக்கு என்ன கொண்டு வந்தாய்?" என்று கேட்க, ‘மகாராஜாவான கிருஷ்ணருக்கு எப்படித் தான் கொண்டு வந்த அவலைக் கொடுப்பது’ என்று குசேலர் தயங்கினார். ஆனால், குசேலர் மறைத்து வைத்திருந்த அவலைப் பார்த்த கிருஷ்ணர், உடனே அதை அவரிடமிருந்து பிடுங்கி ஒரு பிடி அவலை வாயில் போட்டுக் கொண்டு, 'அட்சய' என்றார். 'அட்சய' என்னும் ஆசிர்வாதம் மென்மேலும் வளரட்டும் என்னும் பொருள் பொருந்தியது. அந்த அவலை கிருஷ்ணர் ஆவலோடு உண்ட அந்த கணத்தில் குசேலரின் வறுமை முற்றிலுமாக நீங்கி எல்லா செல்வங்களும் அவரிடம் சென்று சேர்ந்தது.
மார்கழி மாதத்தில் முதல் புதன்கிழமை இந்த புராணகால நண்பர்களின் சந்திப்பு நடந்ததால் வருடா வருடம் மார்கழி மாத முதல் புதன்கிழமை 'குசேலர் தினமாக' குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது. மார்கழி மாத முதல் புதன் கிழமையான இன்று (18.12.2024) நம் வீடுகளில் குசேலர், ஸ்ரீகிருஷ்ணருக்கு அளித்தது போல அவலை வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பிரசாதமாக கிருஷ்ண பகவானுக்கு படைத்து வழிபட்டால் நமக்கும் வாழ்வில் எல்லா வளங்களும், குபேர செல்வமும், நம்மைத் தேடி வரும்.