

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ சாரங்கபாணி கோவில் மிக முக்கியமான ஏழு ஆன்மீக மற்றும் கட்டிடக்கலை அதிசயங்கள் நிறைந்துள்ளன.
மூலவர்: சாரங்கபாணி, ஆராவமுதன்
தாயார்: கோமளவல்லி
தீர்த்தம்: ஹேமவல்லி புஷ்கரணி, காவிரி மற்றும் அரிசிலாறு
பொய்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் போன்ற அனைத்து வைணவ ஆழ்வார்களும் சாரங்கபாணியின் பெருமையைப் பாடியுள்ளனர்.
கும்பகோணம் கோமளவல்லி அன்னையின் பிறந்த இடமாகும். எனவே இங்கு முதல் வழிபாடு அன்னைக்கே செய்யப்படுகிறது. கோமளவள்ளி தாயார் சன்னிதியில் பசுவிற்கு கோபூஜை செய்யப்படுகிறது. அதன் பின்னரே இறைவனுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கல் தேர் வடிவக் கருவறை:
இக்கோவிலின் மையக் கருவறை யானைகள் மற்றும் குதிரைகள் இழுப்பது போன்ற பிரம்மாண்டமான கல் தேர் வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாகத் தேரில் இறங்கி வந்ததைக் குறிக்கும் வகையில் இருபுறமும் சக்கரங்களுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் இல்லாத தலம் (உத்தராயன மற்றும் தட்சிணாயன வாசல்கள்):
பொதுவாக பெரும்பாலான வைணவக் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் தனி 'சொர்க்கவாசல்' இருக்கும். ஆனால் சாரங்கபாணி கோவிலில் மற்ற கோவில்களைப்போல இத்தலத்தில் 'சொர்க்கவாசல்' கிடையாது. அதற்கு பதிலாக கருவறைக்குச் செல்ல உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
உத்தான சயன கோலம்:
இங்குள்ள மூலவர் ஆராவமுதாழ்வார் அதாவது சாரங்கபாணி பெருமாள். இவர் ஆதிசேஷன் மீது 'உத்தான சயனம்' என்ற தனித்துவமான கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.
திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு உகந்து, படுத்திருக்கும் பெருமாள் சற்றே எழுந்து பேசுவது போன்ற தோற்றத்தில் தலைக்குக் கீழே வலது கரத்தை வைத்துக்கொண்டு காட்சியளிப்பது ஒரு பெரும் அதிசயம் ஆகும்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் மீட்டெடுக்கப்பட்ட தலம்:
வைணவத்தின் மிக முக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு மீண்டும் கிடைக்கக் காரணமாக இருந்த தலம் இதுவாகும். நாதமுனிகள் இக்கோவிலில் பாடப்பட்ட "ஆராவமுதே" என்ற பதிகத்தைக் கேட்டு ஈர்க்கப்பட்டு, மீதமுள்ள ஆயிரக்கணக்கான பாசுரங்களையும் தேடிக்கண்டுபிடித்து தொகுத்தார்.
நாட்டிய சாஸ்திர முத்திரைகள் கொண்ட ராஜகோபுரம்:
இக்கோவிலின் 11 நிலைகளைக்கொண்ட 173 அடி உயர ராஜகோபுரம் கும்பகோணத்தின் மிக உயரமான கோபுரமாகும். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் பரதநாட்டியத்தின் அடிப்படையான 108 நாட்டிய சாஸ்திர கரண முத்திரைகள் (நாட்டிய நிலைகள்) இந்த கோபுரத்தின் சிற்பங்களில் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் சித்திரை திருவிழா தேர் தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். இது சுமார் 500 டன் எடை கொண்டது.
பாதாள சீனிவாசர் சன்னதி:
கோவில் வளாகத்திற்குள் பூமிக்கு அடியில் அமைந்துள்ள 'பாதாள சீனிவாசர்' சன்னதி மற்றுமொரு வியக்கத்தக்க அம்சமாகும். தாயாரின் ஊடலுக்குப் பயந்து பெருமாள் பூமிக்குக் கீழே ஒளிந்து கொண்டதாக கூறப்படும் புராண வரலாற்றுடன் இந்த சன்னதி தொடர்புடையது.
பக்தனுக்கு பெருமாளே திதி கொடுக்கும் வைபவம்:
லட்சுமி நாராயண சுவாமி என்ற பக்தர் தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு சேவை செய்தார். இக்கோவிலின் ராஜகோபுரத்தை கட்டியவர் அவரே. ஆனால் அவருக்கு பிள்ளை இல்லை. அவர் ஒரு தீபாவளி நாளில் இறைவனின் தாமரைத் திருவடிகளை அடைந்தார். சாஸ்திரங்களின்படி இறுதிச்சடங்குகளை செய்ய வாரிசு இல்லாத எவரும் நரகத்திற்கு செல்வார்கள்.
ஆனால் இறைவன் தன் பக்தரை புறக்கணிக்க முடியாது என்பதால் தன் பக்தருக்காக இறுதிச்சடங்குகளை செய்தார். மறுநாள் கோவில் திறக்கப்பட்டபோது அவர் ஈரமான வேட்டியுடனும், யக்ஞோபவீதம் எனப்படும் பூணலை வலது தோளில் மாற்றிக்கொண்டு, கைகளில் தர்ப்பையுடன் சடங்கு செய்யும் விதத்தில் நிற்பதை மக்கள் கண்டனர்.
இந்த நிகழ்வு தீபாவளி நாட்களில் நண்பகல் பூஜையின் போது கோவிலில் இன்றும் பின்பற்றப்படுகிறது. ஆனால் பக்தர்கள் இந்த பூஜையைக்காண அனுமதிக்கப் படுவதில்லை.
இத்தலத்தின் மிக நெகிழ்ச்சியான அதிசயம், லட்சுமி நாராயணசுவாமி என்ற தீவிர பக்தருக்கு வாரிசு இல்லாததால், அவர் மறைந்த பிறகு பெருமாளே மகனாக மாறி அவருக்கு ஈமக்கிரியைகளையும், ஆண்டுதோறும் திதிகளையும் (ஸ்ராத்தம்) கொடுக்கும் வினோத வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திறந்திருக்கும் நேரம்:
கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.