திருமணத் தடைகள் நீக்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்!

பலாமரப் பொந்தில் தோன்றிய ஈசனும், குந்தவை நாச்சியார் கட்டிய அதிசயக் கோயிலின் ரகசியங்கள்.
திருச்செந்துறை கோயில் - Thiruchendurai Temple
திருச்செந்துறை கோயில்- Thiruchendurai Temple
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

திருச்செந்துறை கோயில்:

சரும நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில். திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் அமைந்துள்ள அருள்மிகு மானேந்தியவல்லி அம்மன் உடனுறை சந்திரசேகர சுவாமி திருக்கோவில். காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்த, பாடல் பெற்ற தேவார வைப்புத் திருக்கோயில்களில் ஒன்றாகும்.

ஈசன் சந்திரசேகரர்

அம்பிகை மானேந்தியவல்லி

தல விருட்சம் பலாமரம்

ஈசன் செந்நிறத்துடன் ஆற்றுப்படுகையில் தோன்றியதால் இந்த ஊருக்கு திருச்செந்துறை எனப் பெயர் வந்தது.

எமன் தனது பதவியை மீண்டும் பெறுவதற்கு இங்கு தவம் செய்த பொழுது, இறைவன் எமனுக்கு திருப்பைஞ்ஞீலியில் மீண்டும் பதவி கிடைக்கும் என்று அருள்புரிந்ததாகவும், எமனால் வணங்கப்பட்டு அம்ருத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்றும் பவிஷ்ய புராணம் கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
திருப்புடைமருதூர் நாறும்புநாதர் கோவில்: வேண்டிய வரம் தரும் தென்னகத்தின் காசி!
திருச்செந்துறை கோயில் - Thiruchendurai Temple

உச்சிஷ்ட கணபதி மற்றும் அம்பிகை:

இத்திருக்கோயிலில் உச்சிஷ்ட கணபதி தனிச்சிறப்புடன் அருள் புரிகிறார். இந்த வடிவம் மிகவும் விசேஷமாக கூறப்படுகிறது. விநாயகரின் 32 வடிவங்களில் எட்டாவது வடிவமான உச்சிஷ்ட கணபதி, தனது இடது தொடையில் தேவியை அமர்த்தியவாறு தழுவிய கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த வடிவத்தின் முக்கிய அம்சம், விநாயகரின் துதிக்கையானது தேவியின் தொப்புள் பகுதியை தொட்டுக்கொண்டிருப்பதுபோல் செதுக்கப்பட்டிருக்கும். விநாயகர் பொதுவாக பிரம்மசாரியாக கருதப்பட்டாலும், இந்தத் தந்திர வடிவத்தில் தேவியுடன் காட்சியளிப்பது குடும்ப வாழ்வில் உள்ள தடைகளை நீக்க உதவும் என்பது நம்பிக்கை.

விநாயகர் சன்னதியில் உள்ள உச்சிஷ்ட கணபதி விநாயகர் தன் மடியில் அம்பிகையை (வல்லபாம்பிகை) அமர்த்தியபடி காட்சி தரும் இந்த சிறப்பு வேறு எங்கும் அமைந்திருக்கவில்லை. இதுதான் கோயிலின் முக்கிய அம்சமாக திகழ்கிறது. திருமணத்தடைகள் நீங்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் மற்றும் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

வரலாறு:

கிபி 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் சுற்றுச்சுவரில் நிலத்தை அளக்கப் பயன்படுத்திய பழங்கால 'நிலமளந்த கோல்' செதுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் பாட்டனார் முதலாம் பராந்தக சோழன் வேட்டையாட இப்பகுதிக்கு வந்த பொழுது மான் மீது விட்ட அம்பு ஒரு பெரிய பலாமரப் பொந்தில் குறி தவறிப்பட்டது. அந்த பலாப்பொந்திலிருந்து செந்தண்ணீர் கசிய மன்னன் அதிர்ந்தான்.

திருச்செந்துறை கோயில் - Thiruchendurai Temple
திருச்செந்துறை கோயில் - Thiruchendurai Temple

அப்போது அசரீரி சிவபெருமான் சுயம்பு வடிவத்தில் பலாப் பொந்தின் கீழ் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு அங்கு திருக்கோவில் அமைக்கவும் கட்டளையிட்டது. இந்நிகழ்ச்சியை செப்புத்தகட்டில் மன்னன் பதிவு செய்தது தஞ்சை சரஸ்வதி மஹாலில் பாதுகாக்கப்படுகிறது.

மன்னர் எவ்வளவோ முயற்சி செய்தும் சிவாலயம் அமைக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அவர் ஆண்ட பகுதியில் கோவில் கட்ட மலைகள் இல்லாத காரணத்தால் நிறைவேற்ற முடியவில்லை. அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பூதி ஆதிச்சம்பிடாரி என்ற பெரிய குந்தவை நாச்சியார் இறைவனுக்கு திருக்கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்.

இத்திருக்கோவிலை கற்றளியாக எடுப்பித்தார். குந்தவை 617 தினங்களில் நிர்மாணப்பணி முடித்து கும்பாபிஷேகம் செய்து 400 ஏக்கர் நிலத்தை இத்திருக்கோவிலுக்கு எழுதி வைத்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இக்கோவிலில் சோழ மன்னர்கள் பராந்தகன், ராஜேந்திரன், குலோத்துங்கன் மற்றும் விஜயநகர பேரரசு காலத்து 50க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன.

ஈசன் சுயம்பு திருமேனியாக காணப்படும் இந்த சிவலிங்கத்தில் பலாப்பழத்தின் மேல் முள் போன்றும், வேர் முடிச்சுகளும் நிறைந்து காணப்படுகிறது. இதுபோன்ற வடிவத்தில் இறைவன் காட்சியளிப்பது அபூர்வமானதாகும்.

பொதுவாக சிவபெருமானே மானேந்தி காட்சி தருவார். ஆனால் இங்குள்ள அம்பாளும், கருவறையைச் சுற்றிக் கோஷ்டத்தில் அமைந்துள்ள சக்திகளும் மானேந்திக் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தில் உள்ள சுதை சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இங்கு வந்து வழிபடுவதால் சரும நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இதையும் படியுங்கள்:
கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர்: ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கலை அதிசயம்!
திருச்செந்துறை கோயில் - Thiruchendurai Temple

கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நான்கு கால பூஜைகளுடன் நடத்தப்படுகிறது.

எங்குள்ளது?

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com