
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் கடினமான போராட்டங்கள், நிம்மதியின்மை, சிக்கல்கள் என பல இருக்கின்றன. ஆன்மிகத்தை கடைபிடிக்கும்போது உள்ளார்ந்த அமைதியும் உயரிய நோக்கமும் கிடைக்கும். மனித வாழ்வை பல வழிகளில் மேம்படுத்தும் ஆன்மிகத்தை அடைவதற்கான முக்கிய குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உள்ளுணர்வு: ஆன்மிக வளர்ச்சியில் உள்ளுணர்வு பெரும்பாலும் ஆன்மாவின் குரல் என்று குறிப்பிடப்படுகிறது. இது உயர்ந்த நன்மையுடன் கூடிய முடிவுகளை எடுக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த வழிகாட்டுதலாகும். உள்ளுணர்வுடன் ஆழமான தொடர்பை வளர்ப்பதன் மூலம் ஒருவர் அதிக நம்பிக்கையும் தெளிவும் பெற முடியும். தனிமையில் சிறிது நேரத்தை செலவிட்டு, எண்ணத்தை பதிவு செய்து உள்ளுணர்வில் கவனம் செலுத்த வேண்டும். இது ஆன்மிக ரீதியாக சீரமைக்கப்பட்ட மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
2. தினசரி தியானம்: தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் சில நிமிடங்கள் அமைதியான இடத்தில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு மூச்சில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத எண்ணங்கள் இருந்தால் கவனத்தை சுவாசத்தின் மீது திருப்பி விட வேண்டும். இந்தப் பயிற்சி நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் மேலும் நாம் இணைந்திருப்பதை உணர வைக்கும்.
3.ஆன்மிக வாசிப்பு: தினமும் ஆன்மிகப் புனித நூல்களை சிறிது நேரம் வாசிக்க வேண்டும். இது மிகுந்த நன்மை செய்யும். தற்போது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆடியோ நூல்கள், பாட்காஸ்ட்டுகள் கூட இருக்கின்றன. அவற்றை பயணம் செய்யும்போது, உடற்பயிற்சியின்போது கூட கேட்கலாம்.
4. நன்றியுணர்வு: நன்றியுணர்வுப் பயிற்சி மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மனநிறைவையும், பிரபஞ்சத்துடனான தொடர்பையும் வளர்க்கிறது. நன்றி உணர்வை வெளிப்படுத்தும்போது நேர்மறை ஆற்றலுடன் இணைந்து அதிக ஆசீர்வாதங்களுக்கும் வழிவகுக்கும். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிதளவு மகிழ்ச்சியை கூட நன்றியுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. இயற்கையுடன் இணைந்திருத்தல்: இயற்கையோடு இணைந்திருப்பதில் ஆழ்ந்த ஆன்மிகம் இருக்கிறது. பூங்காவில், கடலோரத்தில் அல்லது சூரிய உதயத்தை பார்க்கும்போதும் பிரபஞ்சத்தின் பெரிய சக்திகளை நமக்கு நினைவூட்டுகிறது. பறவைகளின் சத்தம், மலர்களின் வண்ணக்காட்சி போன்றவை வாழ்க்கையின் அற்புதங்களை உணர வைக்கும்.
6. கருணைச் செயல்கள்: பிறருக்கு தினமும் சிறிதளவாவது உதவ வேண்டும். பணமாகவோ பொருளாகவோ அல்லது உதவியாகவோ எதுவும் முடியாவிட்டால் பிறரைப் பார்த்து ஒரு புன்னகைத்தல், பாராட்டு தெரிவித்தல், அன்பு செலுத்துதல் போன்றவை ஆழ்ந்த ஆன்மிக உணர்வை வளர்க்கும்.
7. சுவாசப் பயிற்சி: தினமும் 20 நிமிடங்கள் சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். நான்கு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து, ஏழு வினாடிகள் மூச்சை உள்ளே பிடித்து வைத்து, எட்டு வினாடிகளுக்கு வெளியே விட வேண்டும். இந்தப் பயிற்சி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. மூச்சை உள்ளிழுக்கும்போது அமைதி, அன்பு, கருணை போன்றவற்றை நினைத்தும், பதற்றம், கோபம் போன்ற எதிர்மறையை வெளியே விட வேண்டும்.
8. மௌனம்: நவீன வாழ்க்கை சத்தத்தால் நிறைந்துள்ளது. ஆன்மிக வளர்ச்சி பெரும்பாலும் மௌனத்தில்தான் நிகழ்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் அமைதியாக ஒருசில நிமிடங்களாவது யாருடனும் பேசாமல் அலைபேசியை எடுக்காமல் உள்ளார்ந்த அமைதியை பயிற்சி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் வாழ்க்கையின் நோக்கத்தை பற்றி சிந்திக்கலாம். இது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான தெளிவைத் தரும்.
9. ஆன்மிகக் கூட்டங்கள்: ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இது தனியாக இல்லை என்கிற உணர்வைத் தரும். உங்கள் அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது அது பிறர்க்கும் நன்மை செய்ய ஏதுவாக இருக்கும்.
10. எழுதுவது: இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்மிகக் கருவி. ஆன்மிகப் பயிற்சியில் என்ன இதுவரை கற்றுக் கொண்டோம், இனி என்ன தேட, கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி எழுதலாம். இந்தப் பத்து பயிற்சிகளும் உங்களுக்குள் ஆன்மிக உணர்வுகளை வளர்க்கும்.