பூக்காத புளியமரம்... தீராத வயிற்று வலி தீர்த்த பெருமாள்! - குராயூர் தல வரலாறு!

venugopala-swamy-temple
venugopala-swamy-temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

துரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகில் விருதுநகர் சாலையில் உள்ள குராயூர் வேணுகோபால சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையானது. இங்கு உள்ளவர் வேணுகோபால சுவாமி புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். இது ஒரு குரு தோஷ நிவர்த்தி தலமாகும்.

மூலவர்:

இங்கு பகவான் கிருஷ்ணர் கையில் புல்லாங்குழலுடன் வேணுகோபால சுவாமியாக பாமா மற்றும் ருக்மணி சமேதராக நின்ற காலத்தில் அருள்புரிகிறார்.

தல விருட்சம்:

இங்குள்ள நந்தவனத்தில் உள்ள புளியமரம் பூப்பதும் இல்லை காய்ப்பதும் இல்லை. இது ஆழ்வார் திருநகரியில் உள்ள உறங்காப் புளிய மரத்தைப் போன்றே தெய்வீக அதிசய மரமாக கருதப்படுகிறது.

பெயர்க் காரணம்:

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் குரா மலர்கள் இப்பகுதியில் மிகுதியாக காணப்பட்டதால் இவ்வூர் 'குராயூர்' என்று அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனைகள்:

திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, குடும்ப அமைதி மற்றும் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்குவதற்கு இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

தல வரலாறு:

புராணக் கதைகளின்படி முசுகுந்த சக்கரவர்த்தி வயிற்று வலி நீங்குவதற்காக இங்குள்ள இறைவனை வேண்டி நிற்க வயிற்று வலி சரியானதாகவும், பின்னர் வேணுகோபாலரின் சிலையை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு புராணக் கதையானது தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 14ஆம் நூற்றாண்டில் ஆண்ட வீரபாண்டியன் என்ற மன்னன் அடிக்கடி மீனாட்சி அம்மனையும் சொக்கரையும் தரிசிப்பதற்காக மதுரைக்கு வருவது வழக்கம். அந்த மன்னனுக்கு தன்னுடைய நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருமாலுக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து வந்தது.

ஒருநாள் மதுரையில் அம்மையப்பனை தரிசித்து விட்டு திரும்பும்பொழுது குராமரங்கள் நிறைந்த பகுதி வழியாக வரும்போது காற்றில் வேணுகானம் தவழ்ந்து வர, எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தவித்த மன்னன் இது பெருமாளின் சித்தம் என்றெண்ணி அங்கு பெருமாளுக்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பாமா ருக்மணி சமேதராக ஸ்ரீ வேணுகோபாலனையும் பிரதிஷ்டை செய்தான். பாண்டிய மன்னன் வீரபாண்டியனால் கட்டப்பட்டு, பின்னர் பராக்கிரம பாண்டியனால் விரிவாக்கப்பட்டது இக்கோவில்.

இதையும் படியுங்கள்:
சித்திரை முதல் நாள்: தமிழகத் திருக்கோவில்களின் அதிசய நிகழ்வுகள்!
venugopala-swamy-temple

தல சிறப்பு:

குராமரங்கள் நிறைந்திருந்த இப்பகுதியில் ஆலயம் அமைந்தது மிகவும் சாந்நித்தியமாக கருதப்படுகிறது. மேலும் முசுகுந்த சக்கரவர்த்தி இங்கே பெருமாளை வழிபட்டு ஆராதனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும், குறைகள் தீருவதற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. முக்கியமாக குரு தோஷ நிவர்த்தி தலமாக கூறப்படுகிறது.

குராயூரில் உள்ள கமண்டல நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது.

இக்கோவிலில் ஆழ்வார்கள், சிறிய திருவடி எனப்படும் அனுமன் சன்னதி, பெரிய திருவடி எனப்படும் கருடன் சன்னதிகள் உள்ளன. பெருமாளுக்கு சனிக்கிழமை தோறும் காலையில் திருமஞ்சனமும், மாலையில் பூஜையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

கோவில் நேரம்:

கோவில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படி செல்வது?

மதுரையிலிருந்து கள்ளிக்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கள்ளிக்குடியிலிருந்து குராயூருக்கு (1 கிலோமீட்டர்) ஆட்டோவில் செல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com