
திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு வாய்க்காத தம்பதியர் மைசூரு அருகில் உள்ள தொட்டமளூர் திருத்தலத்தில் தவழும் கோலத்தில் அருளும் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசித்து வர விரைவில் குழந்தைப் பேறு வாய்க்கும். இத்தல மூலவர் ‘அப்ரமேயர்’ எனப்படுகிறார். அப்ரமேயன் என்ற சொல்லுக்கு எல்லை இல்லாதவன் என்று பொருள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் பெருமாளுக்கு அப்ரமேயன் என்னும் திருநாமம் வருவது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட புராணத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் இந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்வா நதி இந்தக் கோயிலை ஒட்டிப் பாய்கிறது. சகுந்தலையை வளர்த்த கன்வ மகரிஷி இப்பகுதியில் வசித்ததின் அடிப்படையில் இந்த நதிக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவ்வூர் ஒரு காலத்தில் மணலூர் எனப்பட்டது. பின்னர் அதுவே மறளூர் என்றாகி பின்னர் மளூர் என்றாகி விட்டது. நான்காம் நூற்றாண்டில் மளூரில் அப்ரமேயர் கோயில் கட்டப்பட்டது. ராஜேந்திர சிம்ம சோழ மன்னன் இக்கோயிலை கட்டியதாக்க் கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன. பெருமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திர சுவாமி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இக்கோயில் கருவறையில் குழந்தை வடிவில் அருளும் கண்ணன் சுருட்டை முடியை மழியச் சீவி இருக்கிறான். கழுத்தில் புலி நக மாலை, முத்துமாலை, மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகளை அணிந்திருக்கிறான். பாதத்தில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன. கையில் வெண்ணெய் உருண்டை ஒன்றை வைத்திருக்கிறான். இப்படித் தவழும் கோலத்தில் உள்ள கிருஷ்ணனை இந்தியாவில் வேறு எங்கும் தரிசிக்க முடியாது.
மகாராஷ்டிராவை சேர்ந்த நவரத்தின வியாபாரியான வரத நாயக்கரின் மகன் சீனிவாசன், தந்தையை போலவே வியாபாரத்தில் ஏராளமாக சம்பாதித்தார். ஆனால், தானம் செய்யும் குணம் அவரிடம் இல்லை. சீனிவாசனை ஆட்கொள்ள அந்தத் திருமால் முடிவு செய்தார். ஏழையாக வடிவெடுத்து சீனிவாசனிடம் சென்று உதவி கேட்க, அவர் மறுத்துவிட்டார்.
ஆனால், சீனிவாசனின் மனைவியோ இரக்கம் கொண்டவள். அவள் அந்த ஏழையிடம் தனது நகையைக் கொடுத்தாள். அவர் அதை சீனிவாசன் நகைக் கடையிலேயே அடகு வைக்க வந்தார். அது தனது மனைவியுடையது என்பதைக் கண்டுபிடித்த சீனிவாசன், வீட்டுக்கு வந்து நகையைப் பற்றி மனைவியிடம் கேட்டார்.
அவள் பயத்தில் விஷம் குடிக்க முயன்றபோது கிண்ணத்திற்குள் அந்த நகை கிடந்தது. அந்த நகையிலிருந்து கிளம்பிய ஒளி, அவரது மனதை மாற்றியது. பின்னர் கடைக்கு வந்து பார்த்தபோது அந்த ஏழையை அங்கே காணவில்லை. வந்தது சாட்சாத் அந்தப் பாண்டுரங்கன் என்பதை உணர்ந்த சீனிவாசன், பல பாடல்களைப் பாடினார். அவரே புரந்தரதாசர் எனப்பட்டார்.
அவர் ஒரு சமயம் தொட்டமளூர் கண்ணனை தரிசிக்க வந்தார். அப்போது கோயிலை மூடி விட்டார்கள். உடனே அவர் ‘ஜெகதோதாரணா’ என்று துவங்கும் பாடலை பாடினார். கோயில் கதவு தானே திறந்து கண்ணன் உள்ளிருந்து தமது தலையைத் திருப்பி புரந்தரதாசரை எட்டிப் பார்த்தான். அதனால்தான் இன்றும் இத்திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் கோலத்தில் தலையை திருப்பி பார்த்த வண்ணம் காட்சி தருகிறார்.
கண்ணன் தவழ்ந்து வரும் அழகை அவனைப் பெற்ற தேவகி கூட பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. காரணம், அவள் சிறையில் இருந்தாள். ஆயர்பாடியில் யசோதைக்கும் ஆயர்பாடி மக்களுக்கும் அந்த நற்பேறு கிடைத்தது. அதே பாக்கியம் தொட்டமளூர் சென்றால் நமக்கும் கிடைக்கும்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கண்ணனை வழிபட அதிகமாக வருகின்றனர். இவருக்கு வெண்ணெய் நெய்வேத்தியம் செய்து குழந்தை வரம் வேண்டுகிறார்கள். நவநீதகிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள் இங்கு உள்ள நவநீதகிருஷ்ணனுக்கு வெண்ணை நெய்வேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செய்து வழிபட்டு நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.
அதோடு, குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வெள்ளி மரத்தொட்டில்களையும் காணிக்கை தருகிறார்கள். சிறு அளவிலான இந்தத் தொட்டில்கள் கண்ணனின் சன்னிதி உச்சியில் கட்டப்படுகின்றன. இன்றும் அர்த்த ஜாமத்தில் இந்தக் கோயிலில் கபில மகரிஷியும் கன்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது. தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் கோயில் பெங்களூரு - மைசூர் ரோட்டில் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் சென்னப்பட்டினத்தை தாண்டி உள்ளது.