
‘இறைவன் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன் இந்த உருவ வழிபாடு?’ என்று சில விடலைப் பிள்ளைகள் கேட்பதைக் காணலாம். எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை நாம் ஏன் உருவ வழிபாடு செய்கிறோம் என்பதற்கான விளக்கத்தை இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடைய முன்னோர்கள் ஆலய தரிசன முறை ஒவ்வொன்றிலும் நம் உடலுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் தேவையானவற்றை இணைத்துள்ளார்கள். அந்த வகையில், உருவ வழிபாடு என்பது நம்முடைய வலது மூலையை இயக்கத் தேவையானதாக இருப்பதாக அறிவியல் கூறுகிறது.
வலது மூளை மற்றும் இடது மூளையின் செயல்பாடுகள்: நாம் பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் இடது மூளையைத்தான் பயன்படுத்துகிறோம். வலது மூளையில் நம்முடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கும், ஞானத்திற்கும் தேவையான ஆற்றல்கள் உள்ளன. இந்த வலது பக்க மூளை மனம் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சொல்லும் வார்த்தைகள் அதற்குப் புரியாது. ஆனால், சின்னங்களை, உருவங்களை பார்க்கும்போது அதற்கேற்ப அது வேலை செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இடது பக்க மூளை எதையும் கேட்பதன் மூலமாக கற்றுக் கொள்கிறது. வலது பக்க மூளை எதையும் பார்ப்பதன் மூலமே கற்றுக் கொள்கிறது. எனவே வலது பக்க மூளையை செயல்படுத்த சித்திரங்கள், உருவங்கள் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் இதை அறிந்துதான் வலது பக்க மூளையை இயக்க தெய்வத்திற்கு உருவங்களைப் படைத்தார்கள். அவற்றைத் தொடர்ந்து சிறிது நேரம் பார்த்தால் அவை நம்முடைய வலது மூளையை இயக்க ஆரம்பித்து விடும். அதனால் நம் உள்ளுணர்வு என்ற இன்ட்யூஷன் பவரை நாம் அடைய முடியும். இதற்குத்தான் ஆலயங்களில் தெய்வத் திருவுருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
விநாயகர் யானை முகம் கொண்டவர். இவரை வலது மூளையில் நினைத்து கண்களால் பார்த்தபடி வணங்கினால் செய்ய ஆரம்பிக்கும் செயல்களை எவ்வித தடங்களும் இன்றி செய்ய மன பலம் கிடைக்கும். யானையை வலது பக்க மூளையில் நினைத்தாலும் மன பலம் கிடைக்கும். அதனால்தான் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அதை மன பலத்துடன் செய்ய விநாயகர் வழிபாடு முதலில் செய்ய வேண்டும் என வகுத்தார்கள்.
அதேபோல், நோய்கள் தீர ரோமானியர்கள் பாம்பு சின்னத்தை பயன்படுத்தியுள்ளார்கள். உடல் நலம் மற்றும் மன நலம் தேவைப்படுபவர்கள் இதை பயன்படுத்தியதை அறிய முடிகிறது. மெசபடோமியா நகரவாசிகள் நோய்கள் குணமடைய இரட்டைப் பாம்பு சின்னத்தை பயன்படுத்தி உள்ளார்கள். இதை அவர்கள் நோய் தீர்க்கும் கடவுள் என வழிபட்டிருக்கின்றனர் என்று சின்னங்களின் அகராதி என்ற நூலில் ஹென்றிச் ஜிம்மர் என்பவர் கூறியுள்ளார்.
இதைத்தான் நம் நாட்டில் நாகப்பிரதிஷ்டை என்ற பெயரில் அரச மரத்தின் கீழ் வைத்து வழிபடுகிறோம். சிவபெருமானின் பின்புறம் உள்ள நாகமும் நோய் தீர்க்கும் குறியீடாக அமைந்துள்ளது. மேலும், தெய்வங்களுக்கு பின்புறம் உள்ளன நாகத்தை தொடர்ந்து தரிசித்து வந்தால் வலது மூளை இயக்கத்திற்கு அது பெரிதும் உதவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சிவபெருமானின் வாகனமான நந்தி சின்னத்தை தரிசிப்பதால் மன தைரியம், ஆற்றல், செயல்படும் சக்தி, தருமம், பொறுமை போன்றவை கிடைக்கின்றன. இற்காகவே நந்தியை வழிபடுகிறோம்.
இதேபோன்று, சக்தி பெற, கல்வி, ஞானம் மேம்பட, செல்வம் கிடைக்க, வீரம் கிடைக்க, மன தைரியம் கிடைக்க என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வத்தை உருவாக்கி, அதை உறுதியான ஒருமைப்படுத்தப்பட்ட மனதுடன் வணங்கினால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.
தற்காலத்தில் ஜங் என்பவர் இந்த சைக்கோ சிம்பாலஜியை ஆராய்ச்சி செய்து சின்னங்களின் தேவையை ஆராய்ந்து நூல்கள் எழுதி உள்ளார். நம் சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் இதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இஷ்ட தெய்வம், குலதெய்வம், காவல் தெய்வம், ஊர் தெய்வம் என்று கிராமப்புறங்களில் இவை எல்லாவற்றிற்கும் பூஜை செய்துவிட்டுதான் திருமணம் போன்ற சுப காரியங்களை ஆரம்பிப்பார்கள்.
ஆதலால், அவரவர்க்கு ஏற்ற சக்தி வடிவத்தை தெய்வ வடிவத்தை மனதில் நினைத்து உருவ வழிபாட்டை மேற்கொண்டு, மனதை சாந்தப்படுத்த, பக்தி வழியில் ஈடுபடுவது எப்பொழுதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.