
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே போட்டி போட்டுக்கொண்டு கோயில்களை கட்டி சென்றுள்ளனர். பல வரலாறுகளை கடந்தும் பல இயற்கை சீற்றங்களை கடந்தும் இன்று வரை இந்தக் கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.
எத்தனையோ திருக்கோயில்கள் இதுபோல தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல காலங்கள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றன. இதுபோன்ற சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். மலை மீது அமைந்த இந்தத் திருக்கோயிலில் அருளும் சிவபெருமான் சந்திரசூடேஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். பிராகாரத்தில் அருளும் ஜலகண்டேஸ்வரர் லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தண்ணீர் தொட்டிக்கு நடுவில் இந்த லிங்கம் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.
மழையில்லாத காலகட்டத்தில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. லிங்கம் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி மக்கள் 16 நாட்கள் தங்களது வேண்டுதல்களை வைத்து அந்த தெப்பக்குளத்தை நிரப்புகின்றனர். அடுத்த சில மணி நேரங்களில் அந்த குளத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று அர்த்தமாம். தண்ணீர் வடியாமல் அப்படியே குளம் போல தண்ணீர் நின்று கொண்டிருந்தால் சில நாட்களில் மழை வரும் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஈசனை பிரிந்திருந்த பார்வதி தேவியைக் காண சிவபெருமான் உடும்பு ரூபம் கொண்டு வந்தபோது, அதனைப் பிடிக்க பார்வதி தேவி பின் தொடர்ந்து வந்துள்ளார். அனைத்து இடங்களையும் தாண்டி இந்தப் பகுதிக்கு சிவபெருமான் உடும்பு ரூபத்தில் வந்துள்ளார்.
அந்த சமயம் முத்கலர் மற்றும் உத்சாயனர் ஆகிய இரு முனிவர்களும் அங்கு தவம் இருந்துள்ளனர். உடும்பு ரூபத்தில் சிவபெருமான் வந்திருக்கிறார் என தங்களது ஞான திருஷ்டியில் இருவரும் கண்டு கொண்டனர். உடனே அந்த உடம்பை பிடிப்பதற்காக அதன் பின்னே சென்றுள்ளனர். அம்பாள் மற்றும் முனிவர்கள் இருவரிடத்திலும் சிக்காமல் சிவபெருமான் மறைந்து விட்டார்.
உடும்பு மறைந்ததைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, அந்த முனிவர்களுக்கு சாபம் கொடுத்துள்ளார். இதனால் இருவரும் ஊமை மற்றும் செவிடாக மாறி விடுகின்றனர். அதே இடத்தில் பார்வதி தேவியும் தவமிருக்கத் தொடங்கியுள்ளார். அதுதான் இப்போது சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலாக விளங்கி வருகிறது.
இக்கோயிலில் உள்ள அம்பாள் சன்னிதி முன்பு ஸ்ரீ சக்கரம் உள்ளது. அந்த ஸ்ரீ சக்கரம் முன்புதான் நவ சண்டி யாகம் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. அம்பாள் முகத்தில் உள்ள மூக்கில் மூக்குத்தி நுழைய துவாரம் உள்ளது. அம்பாளின் பின்னல் தலை முடி, ஜடை குஞ்சத்தோடு இருக்கும். பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் சுவாமிக்கு அஷ்டகம் எழுதி பூஜை செய்ததாக சிறப்பு பெற்றது இத்திருக்கோயில். அம்மன் சிலை பச்சை நிறமாக இருப்பதும் கோயிலின் அதிசயங்களில் ஒன்று!