
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவைகாவூர். எமனை விரட்டிய நந்தியுள்ள கோயில் அமைந்த திருத்தலம் இதுவாகும். இது தேவார பாடல் பெற்ற சிவத்தலமாகும். மிகப் பழைமையான கோயில். இறைவனின் பெயர் வில்வநாத சுவாமி. இறைவியின் பெயர் மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர் வந்தது.
தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சோழர் கால பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிராகார சுற்று உயர்ந்து, நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச்சிறிய, ஆனால் கலை அழகுடன் கூடிய கோபுரம் காணப்படுகிறது. கருவறையின் முன்னால் இருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடியே அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இங்கு நுழைவாயிலை நோக்கிக் கொண்டு காட்சி தருகிறது.
எமன் ஒரு சமயம் சிவபெருமானை எதிர்க்க, அதனால் கோபம் கொண்ட நந்தி தேவர் எமனை விரட்டிக்கொண்டு ஓடி வந்தது. நந்தி சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாக சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் கோயில் குளத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எமன் விழுந்த குளம் ‘எமகுளம்’ என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருகிறது. மற்ற கோயில்களை போலவே இங்கும் விநாயகர், முருகன், துர்கை சன்னிதிகள் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.
ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமாரசாமியின் திருவடி வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது ஆறு சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.
கோயில் வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே, இத்தல விநாயகரையும் சனீஸ்வரரையும் கந்தசாமியையும் பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.