

சனிபகவான் சூரியன் மற்றும் சாயாதேவியின் மகனாக பிறந்தவர். இவர் கருவில் இருக்கும்போதே சிவபெருமானின் ஆசியை பெற்றவர். சனிபகவான் நவகிரகங்களின் நீதிதேவன் (கர்மகாரன்) என்று அழைக்கப்படுபவர்.
சனிபகவான் நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு தண்டனையும் கொடுத்து நீதி தவறாமல் இருப்பவர். சனிபகவானின் அருட்பாவையால் பிச்சைக்காரன் கூட கோடீஸ்வரனாக ஆகமுடியும். அதர்மங்களை இளைத்த கோடீஸ்வர மன்னனும் சனி பகவானின் ஒரு பார்வையால் பிச்சைக்காரனாக முடியும். இவ்வாறு சனிபகவான் பாரபட்சம் இன்றி அவரவர் கர்ம வினைக்கேர்ப்ப தண்டனை மற்றும் நன்மை செய்வார்.
இப்படி நீதி தவறாமல் இருந்த சனிபகவான் ஆஞ்சநேயரை பிடிக்க இயலவில்லை. ராமாயண காலத்தில் ராமர் இலங்கைக்கு செல்ல கற்களால் பாலம் அமைத்துக் கொண்டிருந்தபோது ஆஞ்சநேயருக்கு ஏழரை சனி திசை நடந்து கொண்டிருந்தது. அதனால் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க ராமரிடம் சென்று ஆஞ்சநேயருக்கு ஏழரை சனி திசை நடக்க இருப்பதால் அவரை பிடிக்கவேண்டும் என்று அனுமதி கேட்டார்.
ராமரும் சிரித்தபடியே சனி பகவானிடம் தங்களால் முடிந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். பின் சனி பகவான் ஆஞ்சநேயரிடம் சென்று உனக்கு ஏழரை சனி திசை நடக்கிறது. உன் உடலில் எனக்கு ஒரு இடம் கொடு என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர் ராமபிரானுக்கு என் கைகள் தொண்டு ஆற்றி வருகிறது. அதனால் தங்களுக்கு என்னுடைய கைகளில் இடம் அளிக்க முடியாது கால்களில் இடமளிப்பது தம்மை அவமதிப்பதாக அர்த்தம். அதனால் தமக்கு நான் என் தலையில் இடம் கொடுக்கிறேன் என்றார் ஆஞ்சநேயர். அதன்படியே சனி பகவானும் ஆஞ்சநேயரின் தலையில் மேல அமர்ந்தார்.
ஆனால் ஆஞ்சநேயர் தலையில் கற்களை வைத்து கடலை நோக்கி பாலத்தை அமைத்து சென்றார். இதனால் சனி பகவான் பாரம் தாங்க முடியாமல் கீழே இறங்கினார். ஆஞ்சநேயர் சனி பகவானிடம் ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்கவேண்டும் என்று கூறி ஏன் இறங்கி விட்டீர்கள் என்றார். அதற்கு சனிபகவான் உன்னை பிடிக்கும் வேலையில் நான் தோற்றுவிட்டேன் என்றார்.
ஆஞ்சநேயர் சில நொடி பிடித்தாலும் வெற்றிதான் என்று சனி பகவானிடம் கூறினார். இதனால் மனம் மகிழ்ந்த சனி பகவான் ஏதேனும் வரம் கேள் என்றார். அதற்கு ஆஞ்சநேயர் (ஸ்ரீராமஜெயம்) ராம நாமத்தை ஜெபிக்கும் பக்தர்களை ஏழரை சனி பிடிக்க கூடாது என்ற வரத்தை கேட்டார். அன்று முதல் ஆஞ்சநேயரை வணங்கினாலும் (ஸ்ரீராம ஜெயம்) ராம நாமத்தை கூறினாலும் அவர்களை ஏழரை சனி பிடிக்காது என்ற வரத்தை சனிபகவான் வழங்கினார்.