

எடுத்த பிறவிக்கு எது அணி என்ற கேள்விக்கு அடுத்த பிறவி அடையாமல் இருக்கும் வழியைக் காண்பது தான் என்பதே பாரதீய கலாசாரத்தின் பதில்!
மனிதப் பிறப்பில் என்ன செய்யவேண்டும் என்பதற்கு அருளாளர்களில் ஏராளமானோர் சுருக்கமாக ஆனால் சூட்சுமமாக பதில் கூறியுள்ளனர்.
தேவாரத்தில் அப்பர் சொல்லும் ஒரு பாடல் எது வழி என்பதைக் காண்பிக்கிறது.
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலைந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
இதன் பொருள்: பூவைக் கையில் எடுத்துக்கொண்டு சிவபிரான் பொன் திருவடிகளைப் போற்ற மாட்டார்கள். நாக்கைக் கொண்டு சிவபிரானின் நாமங்களைச் சொல்ல மாட்டார்கள். இந்த உடலுக்கு இரை தேடி அலைந்து காக்கைக்கு இரை ஆகி மடிவர். ஆக உடல் எடுத்ததன் பயன் சிவ நாமத்தைக் கூறுவதேதான்! ஏன் கூறவேண்டும்?
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
என்கிறார் அப்பர்.
பூக்களுள் அருமையான ஆபரணமாகத் திகழ்வது பொங்கு தாமரையாகும். பசுவினுக்கு அருமையான ஆபரணம் என்பது அது பஞ்சகவ்வியத்தை சிவனுக்குக் கொடுப்பது. அரசனுக்கு ஆபரணம் என்பது அவன் குறை இல்லா நல்லாட்சியை உலகிற்குத் தருவது. நம்முடைய நாக்குக்கு ஆபரணம் ஆவது நமசிவாய என்னும் நாமத்தைச் சொல்வதேயாகும்.
நமசிவாயத்தின் பெருமை என்ன?
மணிவாசகர் திருவாசகத்தில் சிவபுராணத்தில் அழகாக நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பித்து எல்லையற்ற சிவனின் பெருமையை விளக்கமாகக் கூறுகிறார்.
சிவபுராணத்தில் முதல் சொல்லுக்கே 64 லட்சணங்களைக் கூறி இரண்டு மணி நேரம் வள்ளலார் பெருமான் விளக்கம் அளித்துள்ளார் என்றால் முழு பாடலுக்கும் உள்ள பொருளை யாரால்தான் சொல்ல முடியும்!
இப்படிப்பட்ட ஒப்பிலாப் பெருமானான சிவனையே நமக்குக் கடனாளி ஆக்கலாம் என்கிறார் ஒரு புலவர். திடுக்கிடுகிறோம் நாம்.
அவர் சிவனைக் கடனாளி ஆக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறி அவர் எப்படி கடனாளி ஆவார் என்ற ரகசியத்தையும் தன் பாடலில் கூறிவிடுகிறார். ஞானக்கூத்தர் என்னும் அந்தப் புலவர் தான் இயற்றிய விருத்தாசல புராணத்தில் கூறும் பாடல் இதுதான்:
திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவ சிவ என்றிடில் பனை மேல்
இருத்திய இடி போல் எரித்திடும் பாவம்;
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்;
ஒருத்தன் வாயாரச் சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும்; இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்.
சிவ சிவ என்று கூறும்போது ஒருவன் செய்த பாவம் எல்லாம் பனை மரத்தின் மீது விழுந்த இடிபோல எரிந்துவிடும். இறப்பும் பிறப்புமாகிய ஜன்மச் சுழல் நீங்கும். சிவ சிவ சிவ என்று மூன்று தடவை கூறி விட்டால் ஒரு ‘சிவ’ என்ற சொல் நம்மை அவனது பதத்தில் இருத்தி விடும். மீதி இரண்டு முறை சொன்னது. சிவபிரான் மேல் கடன்களாய் நிற்கும்!
அடடா, அற்புதமான ரகசியத்தைத் தெரிந்து கொண்ட நாம் சிவராத்திரி அன்று எத்தனை முறை சொல்லலாம் சிவ சிவ சிவ என்று. சொல்வோம்; உய்வோம்.
நன்றாகத்தான் அறுதியிட்டு உறுதி கூறுகிறார் திருமூலர் இப்படி:
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!